Aran Sei

ரயில்வே துப்புரவுத் தொழிலாளர்களை முழுநேர ஊழியர்களாக அறிவித்திடுக – வைகோ

ப்பந்த துப்புரவுத் தொழிலாளர்களை ரயில்வே ஊழியர்களாக அறிவிக்க வலியுறுத்தி, மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

ரயில் நிலையங்களில் ஒப்பந்த முறையில் துப்புரவு செய்யும் தொழிலாளர்களுக்கு சரியான முறையில் ஊதியம் வழங்கப்படுவதில்லை. பல மாதம் சம்பளம் பாக்கி உள்ளது. இது கொரோனா காலத்திலும் தொடர்கிறது. பலருக்கு வைப்பு நிதி பிடிமானம் செய்யப்படுவதில்லை. இவற்றை மத்திய அரசு கவனத்தில் கொண்டு, தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பல காலமாக ரயில்வே ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள்.

இது தொடர்பாக, வைகோ இன்று (அக்டோபர் 30) மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதினார்.

அதில், “ரயில்வே வேலை வாய்ப்பு வாரியம் 2018-ம் ஆண்டு, இணையவழியில் தேர்வு நடத்தி, துப்புரவுத் தொழிலாளர்களைத் தேர்வு செய்து, ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தியது. குறிப்பிட்ட கால இடைவெளி விட்டு, தொடர்ந்து அவர்கள் வேலை செய்து வருகின்றார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றுக் காலத்தில் ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்களில் சேவையை பற்றி கூறுகையில், “அவர்கள் பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில், முழுநேரம் பணி ஆற்றி இருக்கின்றார்கள். மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் உதவியாக இயங்கினார்கள். கரோனா பாதித்த நோயாளிகளுக்கு உடை மாற்றுவது, கழிப்பறைகளுக்கு அழைத்துச் செல்வது, இறந்தவர்களின் உடல்களை வீடு கொண்டு சேர்ப்பது என அனைத்து வேலைகளையும் செய்தார்கள்.” என்று பட்டியலிட்டுள்ளார்.

மேலும், “ரயில்வே ஊழியர்கள் குடியிருப்புகள், அலுவலகங்களிலும் துப்புரவுப் பணி செய்து இருக்கின்றார்கள். மனைவி, பிள்ளைகளுக்குத் தொற்று பரவக்கூடும் என்ற அச்சம் நிலவிய சூழலில், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது பணி ஆற்றி இருக்கின்றார்கள். அவர்களுடைய குடும்பங்கள், ரயில்வே துறையை நம்பித்தான் இருக்கின்றனர். அவர்களுடைய பணி, ரயில்வே துறைக்கு முழுநேரமும் தேவைப்படுகின்றது.” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இறுதியாக, ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்களை ரயில்வே துறையின் முழுநேரப் பணியாளர்களாக அறிவித்திடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மோடி தலைமையிலான மத்திய அரசு, 2014-ம் ஆண்டு தூய்மை இந்தியா என்ற திட்டத்ததை அறிவித்தது. அதை நடைமுறைப்படுத்துவதில், துப்புரவுத் தொழிலாளர்களின் பங்கும் மிக முக்கியம். ரயில் நிலையங்களில் வேலை செய்யும், ஒப்பந்த முறையிலான துப்புரவுத் தொழிலாளர்களை, ரயில்வே ஊழியர்களாக மாற்றுவதன் மூலம், அவர்களுக்கு அரசு விதிமுறைகளின் படி ஊதியம் வழங்கப்படும். மருத்துவ பரிசோதனை, வைப்பு நிதி பிடித்தம், முறையான பாதுகாப்பு உபகரணங்கள் கிடைக்கும்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்