Aran Sei

சைலன்ஸ் – திரைப்பட விமர்சனம்

பொதுமுடக்கத்தால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்திய அளவில் பல திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களிலேயே ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன.

பொன்மகள் வந்தாள், பெண்குயின் வரிசையில் அமேசான் ப்ரைம் தளத்தில் நேரடியாக வெளியிடப்பட்டுள்ள படம் சைலன்ஸ். தமிழ் – தெலுங்கு என இருமொழிகளில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் தெலுங்கில் நிசப்தம் என்கிற பெயரில் வெளியாகியிருக்கிறது.

அனுஷ்கா, மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே எனத் தமிழ் – தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பரிச்சயமான நடிகர்களைத் தேர்வு செய்திருக்கின்றனர். அமெரிக்காவைக் கதைக்களமாகக்கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்த த்ரில்லர் திரைப்படத்தில் ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேடிசனும் நடித்திருக்கிறார்.

படத்தின் முதல் காட்சியே ஹாரர் படத்துக்கான அம்சங்களோடு தொடங்குகிறது. 1972-ம் ஆண்டு உட் சைட் வில்லா என்று சொல்லப்படக்கூடிய ஒரு வீட்டில் இளம் காதல் ஜோடிகள் ஒயின் அருந்தியபடி இசைக்கேற்ப நடனமாடிக் கொண்டிருக்கின்றனர். அதன் முடிவில் இருவரும் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகின்றனர். அக்கொலையின் மர்மம் விலகாத நிலையில், பேயால்தான் அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்று நம்பப்பட்டு அவ்வீட்டினை அனைவரும் பேய் வீடு என்றே அழைக்கின்றனர்.

பேச்சு மற்றும் கேட்கும் திறனற்ற மாற்றுத்திறனாளி அனுஷ்கா (சாக்‌ஷி) ஓவியர். பிரபல வயலின் இசைக்கலைஞர் மாதவன் (ஆண்டனி). இருவருக்கும் நிச்சயதார்த்தம் ஆன நிலையில், உட் சைட் வில்லாவில் இருக்கும் ஒரு ஓவியத்தைக் கண்டுபிடித்து வரைவதற்காக அங்கு செல்கின்றனர்.

மர்மங்கள் நிறைந்த அவ்வீட்டில் மாதவன் கொல்லப்படுகிறார். அனுஷ்கா ரத்தக்காயங்களுடன் அங்கிருந்து தப்பி வருகிறார். ஏற்கனவே நடைபெற்ற கொலைச்சம்பத்துக்கே விடை தெரியாத நிலையில் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு கொலை நடக்கிறது. இச்சூழலில் அந்த வீட்டின் பின் உள்ள மர்மம் என்ன? என்கிற கேள்வியோடு தொடங்கும் இப்படம் மாதவன் மரணத்தின் பின் உள்ள மர்மத்தை விலக்குவதோடு நிறைவடைகிறது.

தொடக்கத்திலிருந்து இறுதி வரை சுவாரஸ்யத்தைத் தக்க வைக்கிற அளவுக்கு வலிமையான திரைக்கதை த்ரில்லர் படத்துக்கு அத்தியாவசியமானது. அவ்வகையில் பார்த்தால் இப்படத்தின் திரைக்கதை சற்றே பலவீனமாக உள்ளது. பார்வையாளர்கள் தம் கணிப்புகள் வழியாகவே அவிழ்க்கும்படியான முடிச்சுகள்தான் திரைக்கதை முழுவதும் நிரம்பியிருக்கின்றன.

எதிர்பாராத திருப்பத்தை உருவாக்க வேண்டும் என்கிற இயக்குநரின் எத்தனிப்பெல்லாம் சரிதான். ஆனால், நெடுங்காலமாக நம் திரைப்படங்கள் கடைப்பிடித்து வந்த அதே பாணியைப் பின்பற்றியதால் எந்த சுவாரஸ்யமும் இன்றி அத்திருப்பங்கள் சலிப்பைத்தரும்படி இருக்கின்றன.

தனது மனைவி இன்னொருவருடன் கொண்டுள்ள அந்தரங்க உறவை அறிந்த பின்னர் அவர்களைக் கொலை செய்யும் மாதவன், உறவு மீறலில் ஈடுபடும் பெண்களைத் தொடர்ச்சியாக கொலை செய்கிறார். சிவப்பு ரோஜாக்கள், மன்மதன் எனப் பல படங்களில் இதனைப் பார்த்தாயிற்று எனும்போது தொடர் கொலைக்கான இக்காரணம் சற்றே அலுப்பை ஏற்படுத்துகிறது.

மாதவன் – அனுஷ்கா இருவருக்கும் காதல் துளிர்விடும் தருணங்கள் மிகவும் செயற்கையாகவும், நாடகத்தனத்தோடும் இருக்கின்றன. அனுஷ்கா மீது எப்போதும் பொசசிவ் ஆக இருக்கும் அவரது தோழி ஷாலினி பாண்டே (சோனாலி) கதாபாத்திரத்தின் நோக்கம் தெளிவற்றதாகவே இருக்கிறது. தனக்கான இணையை அமைத்துக்கொண்ட பிறகும் அனுஷ்கா விசயத்தில் மட்டும் அதே பொசசிவோடு அவர் இருப்பது சற்றே நெருடலாக இருக்கிறது.

அஞ்சலியின் வாய்ஸ் ஓவரில் சொல்லப்படும் கதை, அடுத்ததாக சுப்புராஜுவின் வாய்ஸ் ஓவரில் விரிகிறது. பார்வையாளர்களின் யூகங்களுக்கு மேலும் மேலும் வாய்ப்பளிக்கும் விதமாகவே வாய்ஸ் ஓவரில் கதை சொல்லப்பட்டிருக்கிறது.

த்ரில்லர் படங்கள் இன்று உருவான ஜானர் அல்ல. காலங்காலமாக எடுக்கப்பட்டு வரும் இவ்வகைப் படங்களில் புதுமைகளைப் புகுத்துவதற்கான தேவையை ஏனோ இயக்குநர் உணரவில்லை. பெரிய அளவுக்கான சுவாரஸ்யம் எதனையும் ஏற்படுத்தாமல் தேமேவெனப் படம் நகர்கிறது. இதைத்தானே சொல்லப்போகிறீர்கள் எனப் பார்வையாளர்கள் சோர்வோடு காத்துக்கொண்டிருக்கும் சூழலை ஏற்படுத்தி விடுகிறார்கள்.

அனுஷ்கா திறமையான நடிகர் என்றாலும் அவரது நடிப்புத்திறனை வெளிக்கொண்டு வரும் அளவுக்கான பாத்திர வலு படத்தில் இல்லை. அஞ்சலி தனது கதாபாத்திரத்தின் எல்லைக்குட்பட்டு சிறப்பான பங்களிப்பையே மேற்கொண்டிருக்கிறார். ஹாலிவுட்டில் பெயர் பெற்ற நடிகரான மைக்கேல் மேடிசனிடமிருந்தும் திறன்மிக்க நடிப்பு வெளிப்படவில்லை.

ஒளிப்பதிவு படத்துக்கு மிக முக்கிய பலமாக இருக்கிறது. மலையாளத்தில் பல ஹிட்களைக் கொடுத்த இசையமைப்பாளர் கோபி சுந்தரின் இசை இப்படத்தில் சோபிக்கவில்லை. நினைவில் நிற்கும்படியான பாடல்கள் ஏதுமில்லை என்பதோடு பின்னணி இசையும் தொய்வாகவே இருந்தது.

ராட்சசன் போன்ற த்ரில்லர்கள் மிரட்டிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமா சூழலில் எந்தப் புதுமையும் இல்லாமல் ப்ளாட்டான திரைக்கதையில் வெளியாகியிருக்கும் இப்படத்தில் குறிப்பிட்டுச் சொல்லும் எந்த அம்சமும் இல்லை என்பது ஏமாற்றம்தான்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்