Aran Sei

பெரியார் இருந்திருந்தால் அனிதாவைப் பாராட்டியிருப்பார் – கமல்ஹாசன் நெகிழ்ச்சி

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்து வருவதை நாம் அனைவரும் அறிவோம். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பங்கேற்பாளர்களுக்கிடையே அவ்வப்போது மோதல்கள் வருவது, அன்பு கரைபுரண்டோடுவது வாடிக்கையான விசயம்தான்.

கடந்த வாரத்தில், பிக்பாஸ் வீட்டில் நடந்த தசரா கொண்டாட்டத்தின் போது, நடிகர் சுரேஷ் சுமங்கலி யாராவது முன்னாடி வாங்க என்று அழைத்தார். பின்னர் தசரா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அனிதா சம்பத், “என்னுடைய கல்யாணத்தின் போதும், என் மாமியாரை ஒதுக்கி வைத்தார்கள். நாங்கள்தான் வலுக்கட்டாயமாக அழைத்து வந்தோம். இன்றளவும் சில கிராமங்களில் சுமங்கலி, அமங்கலி என்று பார்க்கும் வழக்கம் இருக்கிறது. எல்லாப் பெண்களும், பெண்கள்தான். ஒருவேளை நான் சுமங்கலியாக இருந்திருக்காவிட்டால் என்னை அழைத்திருக்க மாட்டீர்களா?” என்று கேட்டார்.

இது ஹவுஸ் மேட்ஸிடம் கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியது. பாலாஜி, சனம், சம்யுக்தா உள்ளிட்ட சிலர் மட்டுமே ஆதரிக்க, பிறர் மங்களகரமான நிகழ்ச்சிக்கு நடுவில் அனிதா இப்படி பேசியிருக்க வேண்டியதில்லை என்று சிலரும், தன்னைத்தானே இதில் இணைத்துப் பேசியிருக்க வேண்டியதில்லை என்று சிலரும் கருத்து தெரிவித்தார்கள். இதற்கிடையில், சுரேஷ் தன்னை அவமானப்படுத்திவிட்டதாகக் கூறி சாப்பிட மறுத்தார். அனிதா பலரும் கேட்டுக்கொண்டதற்கிணங்க சுரேஷிடம் மன்னிப்பு கேட்க முயற்சித்தார். ஆனால், சுரேஷ் அதைப் புறந்தள்ளிவிட்டுச் சென்றுவிட்டார். இதையடுத்து, அனிதா தன்னை யாரும் புரிந்துகொள்ளவில்லை என்று அழுதபடியே இருந்தார்.

இதற்கிடையில், வார இறுதிநாளில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தோன்றிய கமல்ஹாசன் அனிதாவைப் பாராட்டினார்.


“ இங்க பேசலன்னா, எங்கே பேசுறது? பெரிய, பெரிய அறிஞர்கள் எல்லாம் பேசிட்டே இருக்காங்க. இந்த எண்ணத்தை உங்கள் மனதில் விதைத்த யாரும் இதை இருந்து பார்க்க இல்லை. பெரியார் இருந்திருந்தால் பாராட்டியிருப்பார். இல்லை, அவர் சார்பாக நாங்க எல்லாம் உங்களைப் பாராட்டுறோம். பெரியாரின் பால் பல சாயங்கள் பூசப்பட்டிருக்கின்றன. அதெல்லாவற்றையும் விட அவர் ஒரு சமூகச் சீர்திருத்தவாதி. அப்படித்தான் நான் அவரைப் பார்க்கிறேன். இருக்கு இல்லை என்பது அவர் வேலை இல்லை. இருக்கு, இல்லை என்பது அவரது பிரச்சினை இல்லை. எதை நீக்கினால், இந்தத் தடைகள் அகலும் என்று யோசித்தவர் அவர். நான் அவரை அப்படித்தான் பார்க்கிறேன்.
அவர் வருவார், இவர் வருவார் என்பதல்ல. ஒரு பெரியார் வந்து எல்லாவற்றையும் மாற்றிவிட முடியாது, ஒரு காந்தி மட்டுமே மாற்றிவிட முடியாது. இது Work in progress, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் செய்ய வேண்டும். அப்படி கிடைத்த வாய்ப்புதான், அனிதாவுக்குக் கிடைத்த அந்த மேடை, எனக்கு கிடைத்த இந்த மேடை”
என்று கமல்ஹாசன் கூறியதும், கண்கலங்கி, கை உயர்த்தி நன்றி கூறினார் அனிதா.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்