Aran Sei

ஷ்ஷ்… சத்தம் போடாதே: அனுஷ்காவின் அடுத்த படம்

மாதவன், அனுஷ்கா ஷெட்டி இணைந்து நடித்துள்ள ‘நிசப்தம்’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது.

தெலுங்கு திரைப்பட இயக்குனர் ஹேமந்த் மதுகர் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், தமிழ், தெலுங்கு மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது.
அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்டோர் துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

’கில்பில்’, ’ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேடிசன் (Michael Madson) நடிக்கும் முதல் இந்திய திரைப்படம் ’நிசப்தம்’.

டி.ஜி விஸ்வபிரசாத் தயாரித்துள்ள இந்தப்படம் ஏப்ரல் மாதம் வெளிவருவதாக இருந்தது. கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ’நிசப்தம்’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளிவரும் என நேற்று அறிவிக்கப்பட்டது. நடிகர் மாதவன் மற்றும் இயக்குனர் ஹேமந்த் மதுகர் ஆகியோர் படத்தின் போஸ்டரை ட்விட்டரில் பதிவிட்டு வெளியீட்டு தேதியை அறிவித்தனர்.

படத்தின் முன்னோட்டம் திங்கட்கிழமை வெளியிடப்படும் எனவும் படக்குழுவினர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்கள்.

திரையரங்குகள் திறக்கப்படாததால், பென்குயின் மற்றும் பொன்மகள் வந்தாள் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து, இயக்குனர் சுதா கொங்காராவின் சூரரைப் போற்று உட்பட பல தமிழ் திரைப்படங்கள் ஓ.டி.டி யில் வெளிவர இருக்கின்றன.

வீட்டிலிருந்தபடி ஓ.டி.டி யில் திரைப்படங்கள் பார்ப்பது குறித்து திரைப்பட ஆர்வலர் கல்பனாவிடம் பேசியபோது, “ஓ.டி.டி யில் படம் பார்ப்பதில் எந்த த்ரில்லும் இல்லை. திரையரங்குகளின் பெரிய திரை, சவுண்ட் சிஸ்டம் போன்றவை படத்தோடு ஒன்றச் செய்கின்றன. சுமாரான படம் கூட திரையரங்கில் பார்த்தால் ஒரு தனி அனுபவம் தரும். அதை நான் ரொம்பவும் மிஸ் செய்கிறேன்.” எனக் கூறினார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்