Aran Sei

`சிவனுக்கு ஒரு நீதி, அம்மனுக்கு ஒரு நீதியா?’ – பழங்குடி மக்கள் கேள்வி

பழங்குடி மக்களின் எதிர்ப்பையடுத்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து வனத்துறையால் அகற்றப்பட்ட ‘பிசில் மாரியம்மன்’ சிலை, மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் – அரேப்பாளையம் சாலைக்கு அருகில் வனப்பகுதிக்குள் பழங்குடி மக்கள் வழிபடும் பிசில் மாரியம்மன் கோயில் உள்ளது. இப்பகுதியைச் சுற்றியுள்ள ஆசனூர், ஓங்கல்வாடி, ஆரேப்பாளையம், பங்களாதொட்டி போன்ற பழங்குடி கிராமங்களுக்குப் பிசில் மாரியம்மன்தான் குலதெய்வம். அந்தக் கிராம மக்கள் பல ஊர்களுக்குக் குடிபெயர்ந்து சென்றாலும் திருவிழா நாட்களில் இங்கு ஒன்றுகூடுகிறார்கள்.

பல ஆண்டுகளாக இந்தப் பழங்குடி மக்கள் வணங்கிவரும் பாரம்பரியக் கோயிலாக இருந்தாலும் அங்கே எவ்விதக் கட்டுமானமும் இல்லாமல் இருந்தது. சுற்றிலும் சுவரோ, கூரைக் கொட்டகையோ இல்லாமல் திறந்தவெளியில் பிசில் மாரியம்மனின் கற்சிலை மட்டும்தான் இருந்திருக்கிறது.

பிசில் மாரியம்மன் கோயிலுக்கு வருபவர்களை வனவிலங்குகள் தாக்கும் அபாயம் உள்ளதாகவும் அது புலிகள் காப்பகப் பகுதி என்பதால் எவ்விதக் கட்டுமானமும் இல்லாமல் இருக்கும் சுவாமி சிலையை அகற்றலாம் என்றும் வனத்துறையினர் தெரிவித்தற்கு பழங்குடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 13- ம் தேதி, காட்டுக்குள் இருந்த பிசில் மாரியம்மன் சிலையைப் பழங்குடி மக்களின் எதிர்ப்பையும் மீறி வனத்துறையினர் அகற்றினர்.

வண்டி மூலம் பிடுங்கப்படும் பிசில் மாரி சிலை

இதைத் தொடர்ந்து கோபிச்செட்டிபாளையம் ஆர்.டி.ஓ பழங்குடி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அம்மக்கள் மீண்டும் சுவாமி சிலையை அங்கேயே வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். அகற்றப்பட்ட சிலையை அங்கேயே வைக்காவிட்டால் அதே இடத்தில் வழிபாடு செய்யும் போராட்டம் நடத்தப்படும் எனப் பழங்குடி மக்கள் சங்கம் அறிவித்தது.

இந்நிலையில் பழங்குடிமக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட வனத்துறையினர், அதே இடத்தில் பிசில் மாரியம்மன் சிலையை வைக்க ஒப்புக்கொண்டனர்.  இதன்படி அரேப்பாளையத்தில் தாளவாடி வட்டாட்சியர் ஜெகதீசன், வனச் சரக ஆலுவலர் பழனிசாமி ஆகியோர் பிசில் மாரியம்மன் சிலையைப் பழங்குடி மக்களிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து நேற்று (அக்டோபர் 20) காலையில் வேள்வி பூசைகள் நடத்தப்பட்ட பின், அதே இடத்தில் பழங்குடி மக்களின் பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க பிசில் மாரியம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

மீண்டும் ஒப்படைக்கப்பட்ட பிசில் மாரியம்மனின் கற்சிலை

இதுகுறித்து, ஆசனூரைச் சேர்ந்த ஜீவா பாரதி என்பவரிடம் அரண்செய் பேசியது.

பிசில் என்றால் என்ன அர்த்தம்?

பிசில் என்றால் கன்னடச் சொல்லுக்கு வெயில் என்று பொருள். அம்மனை பிசில் மாரி என்போம். நிழல் படாமல் வெயிலிலேயே இருக்க வேண்டும் என்பதால்தான் எந்தக் கூரையும் சுவரும் எழுப்பாமல் உள்ளோம்.

எத்தனை ஆண்டுகளாக இந்த அம்மன் சிலை உள்ளது?

எனக்குத் தெரிந்து நான்கு ஐந்து தலைக்கட்டுகளாக (தலைமுறைகளாக) அந்தக் காட்டில்தான் இருக்கிறது.

எத்தனை ஊர்களைச் சேர்ந்த பழங்குடி மக்கள் பிசில் அம்மனை வழிபடுகிறார்கள்?

கோயிலைச் சுற்றியுள்ள ஐந்தாறு பழங்குடி கிராமங்களுக்கு மேல் இருக்கும். செண்டர் தொட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த பூசாரிதான் வாரத்திற்கு ஒருமுறை போய் பிசில் மாரிக்கு பூசை செய்வார்.

வனத்துறையினர் உங்களை எந்த வகையில் தொந்தரவு செய்கிறார்கள்?

புலிகள் காப்பகம் என்பதால் பழங்குடி மக்களாகிய எங்களை தேன் எடுக்கக் கூடாது, ஆடு மாடுகளை மேய்க்கக் கூடாது என்பார்கள். இப்போது சாமியும் கும்பிடக் கூடாது என்கிறார்கள். சாமியை எடுத்து எங்கள் வீட்டுக்கு அருகில் வைத்துக்கொள்ளச் சொல்கிறார்கள்.

விலங்குகளால் கோயிலுக்கு வருபவர்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது என்று வனத்துறை சொல்கிறதே?

அப்படி விலங்குகளால் யாருக்கும் ஆபத்து ஏற்பட்டதில்லை. இங்கு போடப்பட்டுள்ள சாலைகளில் ஏற்படும் விபத்துகளால்தான் சிலர் இறந்திருக்கிறார்கள்.

பிசில் மாரியை மீட்டுக்கொண்டு வர என்னென்ன செய்ய வேண்டி இருந்தது?

முதலில் ஒரு போராட்டம் அறிவித்திருந்தோம். பின் ஆர்.டி.ஓ எங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அங்கேயே சிலையை வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்றோம். அவர் மூலமாக அரசின் மேலிடத்திற்குப் போய் அமைச்சரின் காதுகளுக்குச் சென்றிருக்கிறது. அதற்குப் பிறகு சிலையை திருப்பித் தரும் முடிவுக்கு அரசு வந்தது.

பிசில் மாரியைக் காட்டில் வைக்கும் போது புரோகிதம் செய்யும் ஐயர்களை வைத்துப் பூசை செய்யப்பட்டிருக்கிறதே? அது உங்கள் நடைமுறையா?

அவர்களுக்கும் எங்கள் மக்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. எங்களுக்கு எங்களுடைய பூசாரிதான் பூசைகள் செய்வார். நேற்று நடந்தது வேண்டாத வேலை. எங்கள் மக்களுக்கு அதில் சுத்தமாக உடன்பாடு இல்லை.

கோயிலைக் காரணம் வைத்து, வனத்தை உங்கள் பழங்குடி மக்கள் ஆக்கிரமிப்பு செய்வதாக வனத்துறை சொல்கிறதே?

கோவையில் காடுகளை அழித்துப் பெரிய சிலை வைத்து சம்பாதிக்கிறார்கள். அது ஆக்கிரமிப்பு இல்லை. ஆனால் தலைமுறை தலைமுறையாகக் காட்டில் வாழ்ந்து வரும் பழங்குடிகளான நாங்கள் ஒரு சின்ன சிலையை வைத்துக் கும்பிடுவது ஆக்கிரமிப்பா? என்ற கேள்வியோடு பேச்சை முடித்தார் ஜீவா பாரதி.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்