Aran Sei

பாகிஸ்தான் – இந்துக்கள் மத்தியில் எழுந்துள்ள அச்சம் – காரணம் என்ன?

EurAsian Times

வம்பர் 2-ம் தேதி, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த இந்துக்கள் மீது இரண்டு அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 24 மணி நேரத்திற்குள் இரு வழக்குகள் பதிவாகியுள்ளதால் அங்குள்ள இஸ்லாமியர்கள் அல்லாதோர் கடும் அச்சத்தில் உள்ளனர்.

சிந்துவில், வேற்று மதத்தைச் சேர்ந்த சிறுமிகள் கடத்தப்பட்டு மத மாற்றம் செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. அதே  நேரத்தில், இந்த வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நவம்பர் 3-ம் தேதி, சிந்துவின் ஷாஹத்பூரில், மேக்வார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் குர்ஆனை எரித்ததாகக் கூறப்படுகிறது. இது பல வன்முறைகளுக்கு வழிவகுத்தது மற்றும் இந்துக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டபோது, ​​உள்ளூர் இந்து பஞ்சாயத்து இஸ்லாம் சமூகத்துடன் அவர்களுக்கு இருக்கும் ஒற்றுமையைக் காட்ட ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது.

நவம்பர் 2-ம் தேதி, கராச்சியின் லியாரி பகுதியில் திடீரெனத் தோன்றிய சிலர், ஒரு நாய் மீது அவதூறான வார்த்தைகளை எழுதியதாகக் கூறப்படும் ஒருவரை ஒப்படைக்குமாறு இந்து சமூகத்தை வற்புறுத்தினர். அந்தக் கும்பல் லியாரியில் உள்ள கோயிலுக்குள் நுழைந்து, சிலைகளைச் சேதப்படுத்தி, அவற்றைக் கோயிலுக்கு வெளியே வீசியுள்ளது.

நாயின் மீது அவதூறான சொற்கள் எழுதியது யார் என்பது இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தெரியவில்லை. இருப்பினும், அமைதியை நிலைநாட்டுவதற்காக அந்தக் கும்பல் கைகாட்டிய நபரை அவர்கள் காவலர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த ஆண்டு, இதுவரை சிந்துவில் ஒன்பது அவதூறு வழக்குகள் பதிவாகியுள்ளதாக அம்மாகாணத்தின் மிர்புர்காஸ் பகுதியைச் சேர்ந்த செயற்பாட்டாளர் கஞ்சி பீல் தெரிவித்துள்ளார்.

“பாக்கிஸ்தானின் இந்துக்கள் இஸ்லாத்தை மதிக்கும் மதச்சார்பற்ற மக்கள். அவர்கள் முஹரம் விழாவில் கலந்துகொள்வார்கள், தர்காக்களுக்குக் கூட செல்வார்கள். இருப்பினும், அவர்கள் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை ஏற்றுக்கொள்வது கடினமாக உள்ளது” என்று கஞ்சி பீல் ‘தி வயர்’ இணையதளத்துக்குக் கூறியுள்ளார்.

“கடந்த காலங்களில், சில அவதூறு வழக்குகள் தனிப்பட்ட பழிவாங்கும் நோக்கோடும் சொத்துகளைக் கையகப்படுத்தும் நோக்கோடும் தொடரப்பட்டது. எனவே, இந்த வழக்குகளை அரசு முழுமையாக விசாரிக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 20 நாட்களில், சிந்து, பாடின், நகர்பர்கர், மற்றும் லியாரி ஆகிய இடங்களில் மூன்று கோயில்கள் தாக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் இக்பால் ஆசாத் பட் கூற்றின்படி, இஸ்லாமியர்கள் அல்லாதோர் கூட, பாகிஸ்தானின் தண்டனைச் சட்டத்தின் கீழ் அவதூறு வழக்குகளைப் பதிவு செய்யலாம். “இஸ்லாமியர்கள் மீதும் அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவர்களின் வீடுகள் தாக்கப்பட்டதாக நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” என்று ஆசாத் பட் கேள்வி எழுப்பியுள்ளார்.

“கோயில்களைச் சூறையாடிய வழக்குகள் அவதூறு சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கையுடன் (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட வேண்டும்” என்று அனைத்து இந்து பாகிஸ்தான் பஞ்சாயத்து பொதுச்செயலாளர் ரவி தவானி கூறியுள்ளார்.

பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாஃப் (பிடிஐ) கட்சியைச் சேர்ந்த அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் லால் சந்த் மல்ஹி, “ஒரு நபரின் செயலுக்காக ஒரு சமூகம் தண்டிக்கப்படுவது ஏன் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

“உண்மையில், ஷாதத்பூரில் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மனநோயால் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. அவருடைய அறிக்கை விசாரிக்கப்பட வேண்டும்”என்று லால் சந்த் மல்ஹி கூறியுள்ளார்.

“எந்த அப்பாவியும் தண்டிக்கப்படக் கூடாது; இந்து சமூகம் அச்சத்துடன் வாழ நிர்பந்திக்கப்படக் கூடாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்