Aran Sei

கோயில் இல்லாத பகுதியில் யாத்திரை செல்வது ஏன்? – உயர்நீதி மன்றம் கேள்வி

credits : 5th voice

மிழக பாஜக சார்பில் நடைபெறும் வேல் யாத்திரையைத் தடுக்கக் கூடாது என உத்தரவிடக் கோரி, பாஜக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழக பாஜகவின் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் “பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை வேல் யாத்திரைக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்த பிறகுதான் தமிழக அரசு மத நிகழ்ச்சிகளுக்காக நூறு பேர் வரை கூடலாம் என அரசாணையைப் பிறப்பித்தது. ஆனால், தற்போது அக்டோபர் 15க்குப் பின் இதுபோன்ற மத நிகழ்ச்சிகளில் வழிகாட்டு விதிகளைப் பின்பற்றிச் செயல்பட மத்திய அரசு தெரிவிப்பதாகக் கூறி வேல் யாத்திரையின் அனுமதியை மறுத்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

இதனால் கடந்த அக்டோபர் 30 ம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணையைச் செல்லாது என அறிவித்து, ரத்து செய்ய வேண்டும் எனவும், நவம்பர் 8 முதல் தொடங்க உள்ள வேல் யாத்திரையைத் தடுக்கக் கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

வேல் யாத்திரை சுமுகமாகச் செல்ல ஏதுவாக அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்களை வழங்க தமிழக தலைமைச் செயலாளருக்கும், டிஜிபி க்கும் உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வின்முன் நேற்று  அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, கோயில்கள் தரிசனத்துக்குத் திறக்கப்பட்ட பின், பக்தர்களுக்குத் தடை விதிப்பது தவறு எனவும் கோயிலுக்குள் நுழைவதை முறைப்படுத்த மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளது எனவும் இது அரசியல் யாத்திரை அல்ல எனவும் தெரிவித்தார்.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், யாத்திரைக்கு அனுமதி கோரிய விண்ணப்பத்தில் எந்த விவரமும் இல்லை எனவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்படவில்லை எனக் கூறிய அரசு தரப்பு வழக்கறிஞர், கொரோனா இரண்டாவது அலை பரவ வாய்ப்புள்ளதாகவும், நேற்று யாத்திரையில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் முகக் கவசம் அணியவில்லை எனவும் புகார் கூறியுள்ளார்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், மத்திய அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாகக் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், யாத்திரையில் எத்தனை பேர் பாஜக தலைவருடன் செல்ல இருக்கின்றனர்? அதில் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் எத்தனை பேர் என்ற விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனக் கேள்வியெழுப்பினர்.

முருகன் கோவிலுக்கு செல்வதாக இருந்தால் முருகன் கோவில் இல்லாத பகுதிகளுக்கு யாத்திரை செல்வது ஏன்? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அனுமதி கோரிய விண்ணப்பத்தில் முழு விவரங்கள் இல்லை எனவும் குறிப்பிட்டனர்.

பொது அமைதி சம்பந்தப்பட்டுள்ளதால் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், டிசம்பர் 6 ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தில் யாத்திரையை நிறைவு செய்வதாகக் கூறப்பட்டுள்ளதாகவும், அந்தத் தேதியைக் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

இதற்கு பதில் அளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், “இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களில் எத்தனை பேர் 60 வயதைக் கடந்தவர்கள், எத்தனை வாகனங்கள் யாத்திரையில் பங்கேற்கும் என முழுமையான விவரங்களுடன் விரிவான விண்ணப்பம் அளிக்கப்படும் எனவும், அரசு நிபந்தனை விதித்தால் அதை மீற மாட்டோம் என உத்தரவாதம் அளிக்கத் தயார் எனவும், டிசம்பர் 6ம் தேதிதான் பிரச்னை என்றால், டிசம்பர் 5 ம் தேதி முடித்துக்கொள்ளவும் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.

இதைப் பதிவுசெய்த நீதிபதிகள், அனைத்து விவரங்களுடன் முழுமையான விண்ணப்பத்தை  அரசுக்கும், காவல்துறைக்கும் அளிக்க பாஜக தரப்புக்கு அனுமதியளித்து, வழக்கு விசாரணையை நவம்பர் 10ம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்