Aran Sei

தப்லிகி ஜமாத் வழக்கு – சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் தவிக்கும் கர்ப்பிணிப் பெண்

Image Credits: Business Standard

ப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றங்களை கேட்டுக் கொண்டுள்ளது.

வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு, அதிலிருந்து விடுவிக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேற விரும்பும் தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விசா விதி மீறலில் ஈடுபட்டதாகவும், கொரோனா பொதுமுடக்க காலத்தில் டெல்லியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பங்கேற்றதாகவும் கூறி, வெளிநாட்டு தப்லீஜி ஜமாஅத் உறுப்பினர்கள் மீது டெல்லி காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) பதிவு செய்தனர்.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களில் சிலவற்றை இன்று நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்துள்ளது.

“35 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரை தற்காத்துக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்காமல் தடுத்து வைத்திருப்பது, அரசியலமைப்பின் 21 வது பிரிவின் (வாழ்வுரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம்) கீழ் அப்பட்டமான விதிமீறல் ஆகும்,” என்று மனுவில் குறிப்பிட்டுள்ளதாக ‘தி இந்து’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி, தனது தரப்பினருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ‘அதனை (வழக்கை) நீடிப்பதற்கான’ ஒரு சாக்காக மாறிவிட்டன என்று கூறியுள்ளார். “மனுதாரர்களில் எட்டு பேர் குற்றச்சாட்டிலிருந்து முற்றிலுமாக விடுவிக்கப்பட்டுள்ளார்கள். இருப்பினும், நாட்டை விட்டு வெளியேற அவர்கள் சமர்ப்பித்துள்ள விண்ணப்பங்கள் இன்னும் நிலுவையில் உள்ளன” என்று அவர் வாதிட்டுள்ளார்.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞர் சி.யு.சிங், 1946-ம் ஆண்டின் வெளிநாட்டினர் சட்டத்தின் பிரிவு 14 பி (போலி பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைவது) கீழ் குற்றம்சாட்டப்பட்ட 36 மனுதாரர்கள் அதிலிருந்து முற்றிலுமாக விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். ஆனால், அதை எதிர்த்து காவல்துறையினர் மனுதாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்கள் நவம்பர் 7 மற்றும் 10 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு வரவுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

தண்டனை செயல்முறை

“இது ஒரு தண்டிக்கும் வகையிலான செயல்” என்று சி.யு.சிங் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை நவம்பர் 20-ம் தேதி விசாரிக்க நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.

ஏப்ரல் 2-ம் தேதி, வெளிநாட்டை சேர்ந்த தப்லீக் ஜமாத் உறுப்பினர்களை இந்தியாவுக்குள் அனுமதிக்க மத்திய அரசு தடை பிறப்பித்தது. ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் உட்பட நான்கு பேர் இதற்கு எதிராக மனுக்களை தாக்கல் செய்தனர்.

“இந்த முடிவு ஒருதலைபட்சமாக உள்ளது. இயற்கை நீதியின் கொள்கையை மீறுகிறது. எதிர் தரப்பின் வாதத்தைக் கேட்கவோ கருத்தில்கொள்ளவோ முற்படவில்லை. இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டினருக்கு கருத்தைத் தெரிவிக்க வாய்ப்பளிக்காமல் இந்த முடிவை எடுத்திருப்பது அவர்களின் நாட்டிற்கு திரும்பிச் செல்வதற்கான உரிமையைப் பறிக்கும் செயல்” என்று தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்