Aran Sei

சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் காலமானார் 

Image Credits - India Today

சமூக ஆர்வலரும் ஆரிய சமாஜத்தின் முன்னாள் தலைவருமான சுவாமி அக்னிவேஷ் (80)  வெள்ளியன்று புது தில்லியிலுள்ள கல்லீரல் மற்றும் பித்த நாள அறிவியல் நிறுவன மருத்துவமனையில் (ILBS – ஐ.எல்.பி.எஸ்) மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த அக்னிவேஷ்க்கு பல உறுப்புகள் செயலிழந்ததால் செவ்வாய்க்கிழமை செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டன.

“அவரது உடல்நிலை இன்று மோசமடைந்தது, மாலை 6 மணிக்கு அவரது இதயம் செயலிழந்தது. அவரை காப்பாற்ற முயன்றோம், ஆனால் மாலை 6.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது” என்று ஐ.எல்.பி.எஸ். வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆந்திராவில் ஒரு பார்ப்பன குடும்பத்தில் பிறந்த சுவாமி அக்னிவேஷ், தனது பந்துவா முக்தி மோர்ச்சா (கொத்தடிமைத் தொழிலாளர் விடுதலை முன்னணி) இயக்கத்தின் சார்பாக, கொத்தடிமை முறைக்கு எதிராக தொடர்ந்த பரப்புரையின் மூலம் பலராலும் அறியப்பட்டார். இந்த சமூகப்பணி அவரை தீவிர அரசியலில் நுழையத் தூண்டியது.

1970-ல் ஆரிய சமாஜத்திற்கு ஒத்த கருத்தினடிப்படையில் ஆரிய சபை என்ற அரசியல் கட்சியை உருவாக்கிய அக்னிவெஷ், 1977-ல் ஹரியானா சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டர். இரு ஆண்டுகளுக்குப் பிறகு கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார். கொத்தடிமை முறைக்கு எதிராகப் போராடிய தொழிலாளர்களைச் சுட்டுக்கொன்ற காவல்துறையின் மீது ஹரியானா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஐந்தே மாதங்களில் அவர் பதவி விலகினார்.

சுவாமி அக்னிவேஷ் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டவும் மத நல்லிணக்கத்தைப் பேணவும் பல முயற்சிகளை எடுத்துள்ளார். 2010-ம் ஆண்டில் காங்கிரசு ஆட்சியின்போது, அரசுக்கும் மாவோயிஸ்டுகளுக்குமிடையே நடந்த பல்வேறு  பேச்சுவார்த்தைகளில் இடையீட்டளாராக அதனை நடத்த முன்வந்தார்.

2011-ம் ஆண்டு அண்ணா ஹசாரே தலைமையிலான ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் இணைந்தார். ஆட்சியில் இருந்த காங்கிரசு தலைமையிலான அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போது காங்கிரசு கட்சியைச் சார்ந்த அமைச்சருடன் அவர் பேசுவதாகக் கூறப்படும் காணொளி வெளியானதால் சுவாமி அக்னேவேஷ் அந்த இயக்கத்தை விட்டு வெளியேறும் கட்டாயம் ஏற்பட்டது.

2014 வரை ஆரிய சமாஜின் உலகளாவிய தலைவராக இருந்த அக்னிவேஷ், ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் பனி லிங்கத்தின் மீதான அவரது விமர்சனங்களின் மூலம் இந்துத்துவா குழுக்களைக் கோபத்தில் ஆழ்த்தியிருந்தார். இந்த பனிச் சிற்பத்துக்கு எவ்வித மதம் சார்ந்த முக்கியத்துவமும் இல்லை என்று கூறியதன் மூலம் அவர் சிவன் சிலையை அவமதித்தார் என்று இந்துத்துவா குழுக்களைச் சேர்ந்தவர்கள் குற்றம்  சாட்டியிருந்தார்கள்.

தொடர்ந்து இந்துத்துவா குழுக்கள் அவர் மீது குற்றம் சாட்டி வந்தனர். 2018-ம் ஆண்டு ஜார்கண்ட் பா.ஜ.கவின் இளைஞர் அணியைச் சார்ந்தவர்கள் அக்னிவேஷை தாக்கினார்கள். அப்போது வெளியான காணொளியில் அக்னிவேஷை “பாகிஸ்தான் கைக்கூலி” என்று கூறி அவரை நாட்டைவிட்டு வெளியேறச் சொல்லி அவர்கள் தாக்கியது தெரியவந்தது. இதற்கு ஒரு மாதத்திற்குப் பின்னர் முன்னாள் பிரதமர் வாஜ்பாயிக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்றபோதும் அவர் தாக்கப்பட்டார்.

“சுவாமி அக்னிவேஷ்-ன் இழப்பு வருத்தம் அளிக்கிறது” என்று காங்கிரசு கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார். “வாழ்நாள் முழுவதும் அவர் நமது சமூகத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்காக மிகுந்த தைரியத்துடனும் மன உறுதியுடனும் போராடினார்” என்றும் அவர் கூறியுள்ளார்.

“சமூக ஆர்வலரும் பெண் உரிமையின் பாதுகாவலருமான சுவாமி அக்னிவேஷ் அவர்களின் மறைவு மிகுந்த கவலை அளிக்கிறது. அவரது தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி  ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“பல சமூகக் கரணங்களுக்காக கொல்கத்தாவில் தனது பேராசிரியர் பணியை அர்ப்பணித்த சுவாமி அக்னிவெஷ் அவர்களின் மரணம் மிகுந்த சோகம் அளிக்கின்றது. அவரது நண்பர்களுக்கும் பின்பற்றுவோர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.

“அனைவரும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சனிக்கிழமை அக்னிவேஷின் உடல் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி பந்துவா முக்தி மோர்ச்சா அலுவலகத்தில் வைக்கப்படும்” என்று பந்துவா முக்தி மோர்ச்சாவின் முன்னாள் பொதுச்செயலாளர் விதல் ராவ் ஆர்யா கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்