“ஒரு பாலின இணையர்களுக்கு ஒரு குடும்பமாக வாழ்வதற்கு உரிமை உள்ளது, அவர்கள் கடவுளின் குழந்தைகள், அவர்களுக்கு குடும்ப உரிமை உள்ளது. அது காரணமாக, யாருமே வெளியேற்றப்படவோ, வருத்தத்தில் ஆழ்த்தப்படவோ கூடாது. நாம் உருவாக்க வேண்டியது ஒரு சிவில் இணைப்புச் சட்டம். அதன் மூலம் அவர்கள் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படுவார்கள். நான் அதை ஆதரித்தேன்” என்று போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.
ரோம் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்ட பிரான்செஸ்கோ என்ற தலைப்பிலான ஆவணப்படத்தில் அவர் அளித்த பேட்டியில் போப் பிரான்சிஸ் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த ஆவணப்படம் போப் பிரான்சிஸின் ஏழரை ஆண்டு பதவிக் காலத்தைப் பற்றிப் பேசுகிறது என்று தி கார்டியன் கூறுகிறது. கொரோனா நோய்த்தொற்றுக்கு முன்பு அவர் மேற்கொண்ட பயணங்களையும் திருச்சபையைச் சூழ்ந்திருந்த பாலியல் வன்கொடுமை வழக்குகளை அவர் கையாண்டது பற்றியும் இந்த ஆவணப் படம் பேசுகிறது.
போப் பிரான்சிஸ் போப் பதவி ஏற்ற பிறகு ஒரே பாலின இணையர்களின் சிவில் இணைப்பை ஆதரித்ததில்லை. முன்னர், அர்ஜென்டினாவின் தலைநகர் புவனஸ் ஏரிசில் பிஷப் ஆக இருந்த போது அவர் ஆதரித்திருக்கிறார் என்று தி கார்டியன் செய்தி தெரிவிக்கிறது.
எல்ஜிபிடி இணையரை ஏற்றுக்கொள்வதில் கத்தோலிக்க திருச்சபை தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தவரான யேசு சபையைச் சேர்ந்த அருட்தந்தை ஜேம்ஸ் மார்ட்டின், போப் பிரான்சிஸின் கருத்தை வரவேற்றுள்ளார்.
Pope Francis's support for same-sex civil unions is a major step forward in the church's support of LGBTQ people. It is in keeping with his pastoral approach to LGBT people, including LGBT Catholics, and sends a strong signal to countries where the church has opposed such laws.
— James Martin, SJ (@JamesMartinSJ) October 21, 2020
“போப் ஜான் பிரான்சிஸ் ஒரே பாலின சிவில் இணைப்புக்கு ஆதரவு தெரிவித்திருப்பது எல்ஜிபிடிகியூ மக்களுக்கு திருச்சபை ஆதரவு வழங்குவதற்கான மிக முக்கியமான நகர்வு” என்று மார்ட்டின் கருத்து தெரிவித்துள்ளார்.
முந்தைய போப் பெனடிக்ட் பதவி விலகியதைத் தொடர்ந்து மார்ச் 2013-ல் போப் ஆக தேர்வு செய்யப்பட்டது முதலே, போப் பிரான்சிஸ் எல்ஜிபிடி மக்கள் தொடர்பான தனது கருத்துகளில் சாதகமான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வந்தார் என்று தி கார்டியன் தெரிவிக்கிறது.
பாரம்பரிய திருச்சபையின் போதனைப்படி, திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையேதான் நடக்க முடியும். கத்தோலிக்க திருச்சபை ஒரே பாலின இணைவைத் தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறது.
2003-ம் ஆண்டு வாட்டிகனில் கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகம் தயாரித்த ஆவணம் ஒன்றில், “ஒரே பாலின இணைப்புக்குச் சட்ட அங்கீகாரம் வழங்குவதை எதிர்ப்பது ஏன் அவசியம்” என்று விளக்கப்பட்டிருந்தது. ஏனென்றால், அவை, “குறிப்பிட்ட அடிப்படை தார்மிக மதிப்பீடுகளை மறைத்து, திருமணம் என்ற நிறுவனத்தின் மதிப்பைக் குறைக்கின்றன” என்று அது குற்றம் சாட்டியிருந்தது.
போப் பிரான்சிஸின் பழமை வாத எதிர்ப்பாளர்கள் அவரது கருத்துகளால் கடும் கோபமடைந்துள்ளனர் என்கிறது கார்டியன் செய்தி. திருச்சபையை மேலும் முற்போக்கான மதிப்பீடுகளை நோக்கிச் செலுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதி என்று அவர்கள் சந்தேகிக்கின்றனர். சிலர் போப் பிரான்சிசை வெளிப்படையாகத் தாக்கியுள்ளனர். கடவுள் மறுப்பாளர் என்று கூட சிலர் குற்றம் சாட்டியுள்ளனர் என்கிறது தி கார்டியன்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.