Aran Sei

`கர்ணம் அடித்தாலும் பாஜக கால் ஊன்ற முடியாது’ – தா.பாண்டியன்

Image Credits: The Hindu

மிழகத்தில் பாஜகவின் வேல் யாத்திரைக்கு வரவேற்பு இருக்காது என்பதால் அதைத் தடை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், புதுச்சேரி விடுதலை நாள் கருத்தரங்கம் ஒரு தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் புதுச்சேரியின் முதலமைச்சர் நாராயணசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மற்றும் திமுக கூட்டணிக் கட்சியினர் கலந்துகொண்டனர்.

கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், டெல்லி முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்டு டெபாசிட் இழந்த கிரண் பேடியைப் புதுச்சேரி துணை ஆளுநராக மத்திய பாஜக அரசு நியமித்து இருப்பதாகவும் ஏழை மக்களுக்கு இலவச அரிசி வழங்க கிரண்பேடி தடையாக உள்ளார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

“கிரண் பேடியை வேறு மாநிலத்துக்கோ அல்லது டெல்லிக்கோ பிரதமர் நரேந்திர மோடி அழைத்துச் செல்ல வேண்டும்,” என்று தா.பாண்டியன் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “கர்ணம் அடித்தாலும் தமிழகத்தில் பாஜகவால் கால் ஊன்ற முடியாது,” என்றும் “பாஜக எந்த அணியை அமைத்து ஆட்சியை விலை கொடுத்து வாங்கினாலும் அது பலிக்காது,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை,” என்று கூறிய தா.பாண்டியன், “பாஜகவின் வேல் யாத்திரையைத் தடை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் போகும் இடம் எல்லாம் வரவேற்பு இருக்காது. அந்த அவமானத்தை அவர்கள் சந்திக்கட்டும்,” என்றும் விமர்சித்துள்ளார்.

வரும் நவம்பர் மாதம் 6-ம் தேதி, தமிழக பாஜக சார்பில் கட்சியின் தலைவர் எல்.முருகன் தலைமையில் ‘வெற்றிவேல் யாத்திரை’ நடைபெறவிருக்கிறது. இது திருத்தணியில் தொடங்கி திருச்செந்துாரில் நிறைவடையும்படி திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாகப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இதனை விமர்சித்தனர்.

“தமிழகத்தில் ‘வேல் யாத்திரை’ என்கிற பெயரில் பாஜக கலவரத்திற்குத் திட்டமிட்டிருக்கிறது. தங்கள் கலவர அரசியலை மறைத்து மக்களை ஏமாற்றவே ‘வேல் யாத்திரை’ எனப் பெயரிட்டு இருக்கிறார்கள்,” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அக்டோபர் 29 அன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “பாஜக-வின் வேல் யாத்திரை எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது,” என்றும் வேல் பாஜகவின் கைகளால் ரத்தம் சிந்தக்கூடியதாக மாறும்,” என்றும் கூறியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்