Aran Sei

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பாஜக செய்த துரோகம் – மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

ந்து அறநிலையத்துறை சொத்துக்களைப் பொது நோக்கங்களுக்கு உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற விதிக்கு விரோதமாக பாஜக-வினர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு தடை பெற்றுள்ளதால், காலங்காலமாகக் கோயில் நிலங்களில் குடியிருக்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாஜக துரோகம் இழைத்துவிட்டதாக மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “பல தலைமுறைகளாக கோவில்கள், மடங்கள், அறக்கட்டளைகளுக்குச்  சொந்தமான நிலங்களில் குடியிருந்து வரும் ஏழை, எளிய மக்கள் வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டுமென நெடுங்காலமாக போராடி வருகிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகளும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறது”  என்று  கூறியுள்ளார்.

”தமிழக அரசு கடந்த 30-8-2019 அன்று அரசாணை 318-ன் மூலம் வீட்டு மனைப்பட்டா வழங்குவதற்கான ஒருங்கிணைந்த உத்தரவினை வெளியிட்டுள்ளது. இவ்வாணையின்படி, ஏழை, எளிய மக்கள் குடியிருந்து வரும் நிலங்களுக்கு விலை நிர்ணயம் செய்து அரசு அதற்கான தொகையினை சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகத்திடம் செலுத்தி அந்த நிலத்தை கையகப்படுத்தி, பட்டா வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டது” என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை ஏற்றுக் கொள்ள மறுத்து பாஜக-வினர் இந்த அரசாணையை எதிர்த்துச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து ஆணையை செயல்படுத்தாமல் தடையாணை பெற்றுள்ளதாக பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

“இதனால் பல தலைமுறைகளாகக் கோவில்நிலங்களில் குடியிருப்போருக்குப் பட்டா கிடைப்பதற்கான வாய்ப்புத் தடுத்து நிறுத்தப்பட்டு, இம்மக்கள் பெரும் வேதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார் .

“பாஜகவின் இந்த முயற்சியை முறியடித்து கோவில் நிலங்களில் பல தலைமுறைகளாக குடியிருந்து வரும் ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட, பிற்பபடுத்தப்பட்ட மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி உடனடியாக வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டுமென தமிழக அரசை வற்புறுத்துவதுடன், நீதிமன்றங்கள் இதற்கான தடையாணைகளை ரத்து செய்ய வேண்டுமென” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்