Aran Sei

‘இராமநாதசுவாமி கோவில் நகைகள் எடை குறைவு விவகாரம்’ – வெள்ளை அறிக்கை வேண்டும்.

ராமேஸ்வரம் கோவில் நகைகள் எடை குறைவு விவகாரத்தில், மேல்மட்ட விசாரனை நடத்தி, வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, கோவில் வாசலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது.

ராமேஸ்வரம் கோவிலில் சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு அனைத்து வகை நகைகளையும் சரிபார்த்து, நகை மதிப்பீட்டாளர்கள் மூலம் மறு மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்றது. திருவிழா காலங்களில் சாமி, அம்பாள் வலம் வரும் தங்கம், வெள்ளியால் செய்யப்பட்ட வாகனங்கள், தேர்களின் எடையும் சரிபார்க்கப்பட்டன.

இராமேஸ்வரம் கோவில் நகை எடை குறைவு – குருக்களிடம் அபராதம் வசூலிக்கப்படுமா?

இந்த ஆய்வின் போது, கோவிலில் சாமிக்கு அணிவிக்கப்படும் பல நகைகளின் எடை குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. நகைகளில் எடை குறைவு குறித்து கோவிலில் பணியாற்றும் குருக்கள், மணியம் மற்றும் ஓய்வு பெற்ற குருக்கள் உள்ளிட்ட 30 பேருக்கு கோவில் நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும், நோட்டீசில் குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.12 லட்சம் வரையிலும் அபராதம் செலுத்தும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் குழுக்களிடம் அரசு விசாரணை செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கோரிக்கை வைத்துள்ளார்.

கச்சத்தீவை ஏன் மீட்க வேண்டும்? – மீனவ சங்க தலைவருடன் நேர்காணல்

இந்நிலையில், இந்த விவகாரத்தில் மேல் மட்ட விசாரனை வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட குழு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவில் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தை, இராமேஸ்வரம் தாலுகா செயலாளர் முருகானந்தம் மற்றும் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் செந்தில் வேல் தலைமை தாங்கியுள்ளனர்.

அப்போது, இராமேஸ்வரம் கோவில் நகைகள் எடை குறைவு விவகாரத்தில் மேல்மட்ட விசாரனை நடத்தி பக்தர்களுக்கு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும், கோவில் நகைகள் அனைத்தையும் ஆண்டுக்கு ஒரு முறை பக்தர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதுகுறித்து, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் செந்தில் வேலிடம் அரண்செய் பேசிய போது, தமிழக கோவில்களில் சில நிர்வாக சீர்கேடு இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், “அதற்காக கோவில்களை இந்துக்களிடம் கொடுக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் கேட்பது தவறு. இங்கே இந்துக்கள் என்றால் யார்? ஒரு ஊரில் மற்ற மதத்தவர்கள் 100 பேர் இருந்தால், அவர்கள் 100 பேரும் சந்தா போட்டு, அவர்களுக்குள் ஜனநாயக ரீதியாக தங்கள் வழிபாட்டுதளத்தை நிர்வாகம் செய்வார்கள். இந்துக்களில் அப்படி ஒரு ஜனநாயக அமைப்பு இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “அப்படி கொடுத்தால், மன்னர்களிடமும் ஜமீன்தார்களிடமும் தான் கொடுக்க வேண்டும். ஏற்கனவே அவர்களிடம் கொடுத்து தான், பல ஊழல்கள் நடந்தன. அதை விசாரிக்க பல கமிஷன்கள் போட்டு, விசாரிக்கப்பட்டது. பிறகு தான், இனி தனியார்களிடம் கோவில் இருக்கக்கூடாது, இதற்கு என்று ஒரு பொதுத்துறை வேண்டும் என்று அறநிலையத் துறை தொடங்கப்பட்டது.” என்று தெரிவித்துள்ளார்.

`மத்திய அரசு துரோகத்தை நிறுத்த வேண்டும்’ – தமிழ்நாடு மீனவத் தொழிலாளர் சங்கம்

 

இந்த விவகாரத்தை பயன்படுத்தி, மீண்டும் இந்து கோயில்களின் நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை, ’சமூகத்தை பின்னோக்கி இழுக்கும் செயல்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

”ஆதிபராசக்தி கோவில் தனியாரிடம் தான் உள்ளது. அங்கே நிர்வாகம் வெளிப்படைத்தன்மையோடு இயங்குகிறதா? அதன் வருமானம் பற்றி மக்களுக்கு தெரிகின்றதா? வருமானம் முழுக்க அதை நிர்வகிக்கும் அந்த ஓனரின் பாக்கெட்டிற்கே போய் சேர்கிறது. ஆனால் இது (இராமநாதசுவாமி கோவில்) மக்களின் சொத்தாக இருக்கின்றது. அதனால் இதில் உள்ள நிறைகுறைகள் வெளியே தெரிகின்றது.” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இறுதியாக, “அறநிலையத் துறையில் குறைகள் இருந்தால், அதை சுட்டிக்காட்டி, சரி செய்ய வேண்டும். தவறு செய்தவருக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டுமே தவிர சமூகத்தை பின்னோக்கி இழுக்கக்கூடாது.” என்று தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்