Aran Sei

முன் அனுமதியுடன் கோவிலில் தொழுகை செய்தவர் கைது – உத்தர பிரதேச காவல்துறை நடவடிக்கை

த்தரபிரதேசம், மதுராவில் உள்ள, நந்த்பாபா கோவில் வளாகத்தில் தொழுகை செய்ததற்காக பைசல் கான் கைது செய்யப்பட்டுள்ளார். கோவிலில் வணங்கிவிட்டு, அங்குள்ள மக்களின் சம்மதத்துடன்தான் அவர் தொழுதுள்ளார் என்று கூறி அவர் சார்ந்த அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஜாமியா நகரைச் சேர்ந்த உத்தரப்பிரதேச காவலர்கள், குதுய் கிட்மத்கர் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் சமூக ஆர்வலருமான பைசல் கானை, டெல்லியில் வைத்துக் கைது செய்துள்ளனர். நந்த்பாபா கோவிலில், பைசல் தொழுததாகக் கூறி அவர்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். அவர் கைது செய்யப்பட்ட ஒரு நாள் கழித்து, அவரது அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தற்போது, பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், பாஜக ஆட்சி செய்யும் உபியில் இந்த சர்ச்சை உருவாகி உள்ளது. ‘டெம்பிள் ஜிஹாத்’ எனும் புதிய வார்த்தையை உருவாக்கி, ஏராளமான தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்கள், இந்தச் சம்பவத்துக்கு ஒரு மதவாத சாயத்தைப் பூசி வருகின்றன என்று ‘தி வயர்’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பகவான் கிருஷ்ணரை தரிசிக்க ஒரு வருகை

குடாய் கிட்மத்கரின் செய்தித் தொடர்பாளர் பவன் யாதவின் வெளியிட்டுள்ள அறிக்கை, மதுராவில் பைசல் கான், மதநல்லிணக்கத்தை நோக்கமாகக் கொண்டு அவர் பல்வேறு கோயில்களின் பூசாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்த விரிவான விவரத்தை வழங்கியுள்ளது. ‘கிருஷ்ணரின் புனித பூமி’ என அழைக்கப்படும், மதுராவின் பிரஜா பகுதியில், பைசல் 5 நாள் யாத்திரை மேற்கொண்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பயணம் அக்டோபர் 24 அன்று துவங்கியுள்ளது.

“அவர் கோவர்த்தனின் பண்டைய சவுராசி கோசி யாத்திரையில் பங்கேற்றார்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்து வழக்கப்படி, கிருஷ்ணரை மகிழ்விப்பதற்காகச் செய்யப்படும் ’84 கோஸ் பரிக்ரமா’ நிகழ்விற்காகப் பைசல் மதுராவுக்கு சென்றிருந்தார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்போது, இந்து புராணங்களை பற்றி நன்கு அறிந்த பைசல் கான், ராம்சரித்மனாஸில் இருந்து வரிகளை குறிப்பிட்டு பேசியுள்ளார்” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“அவரது வருகையின் பொது, இந்து மதத்தின் தத்துவம், துளசிதாஸ், ரஸ்கான் மற்றும் ரஹிம்தாஸின் வசனங்களை பற்றி உரையாடல்கள் நடந்தன” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கையுடன், பைசல் வருகையின்போது பதிவுசெய்யப்பட்ட முழு காணொளியும் இணைக்கப்பட்டுள்ளது.

“தனது யாத்திரையின் கடைசி நாள் அன்று, பைசல் கான், நந்த் பாபா புனித கோவிலுக்குச் சென்றார். அவர் கோவிலில் தரிசனம் செய்தார்,” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொழுகைக்கு அனுமதி கோரப்பட்டது

எந்தவொரு உள்நோக்கத்துடனும் அவர் தொழுகை செய்யவில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிலில் இருந்தவர்களின் அனுமதியுடன் தான் அவ்வாறு செய்தார் எனவும் கூறப்பட்டுள்ளது.

“அது பிற்பகல் தொழுகைக்கான நேரம். எனவே அவர் நமாஸ் செய்யப் பொருத்தமான இடத்தைத் தேடினர். அங்கு இருந்தவர்கள் அவரை கோவில் வளாகத்திலேயே தொழுகை செய்ய அனுமதித்தனர். நீங்கள் ஏற்கனவே கடவுளின் சன்னிதானத்தில் தான் இருக்கிறீர்கள், நீங்கள் ஏன் வேறு இடத்திற்கு செல்ல வேண்டும்? என்று அவர்கள் கேட்டுள்ளனர். அதைக் கேட்டுப் பைசல் கான் அங்கேயே தொழுதுள்ளார்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பிரார்த்தனை செய்தபின், பைசல் கான் மற்றும் பிற உறுப்பினர்கள் கோவிலில் சிறிது நேரம் தங்கியிருந்து, அதே கோவிலில் மதிய உணவு உண்டார்கள்,” எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் தகவல் அறிக்கையில் (எஃப்ஐஆர்) குறிப்பிட்டுள்ளபடி, அவர் இச்செயலை எந்தவொரு சர்ச்சையையும் தூண்டவோ, எவரது உணர்வுகளையும் புண்படுத்தவோ செய்யவில்லை என்பது இதன்முலம் தெளிவாகிறது.

அவரும் அவரது மூன்று சகாக்களான சந்த் முகமது, நிலேஷ் குப்தா மற்றும் சாகர் ரத்னா ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள், 153 ஏ (எந்தவொரு குறிப்பிட்ட குழு அல்லது வகுப்பினரின் மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி போன்றவை அல்லது ஒரு மதத்தின் ஸ்தாபகர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் மீது விரும்பத் தகாத அவதூறு பரப்புவது அல்லது தாக்குதலில் ஈடுபடுவது), 295 (ஒரு மதத்தை அவமதிக்கும் நோக்கத்துடன், வழிபாட்டுத் தலம் அல்லது புனிதமான ஒரு பொருளை அழித்தல், சேதப்படுத்துதல் அல்லது சிதைத்தல்) மற்றும் 505 (வேறு எந்த பிரிவினருக்கோ அல்லது சமூகத்துக்கோ எதிராகச் சண்டையைத் தூண்டும் நோக்கத்தோடு செய்யும் செயல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊடகங்களின் திடீர் முனைப்பு

அறிக்கையின்படி, “பைசல் அக்டோபர் 29-ம் தேதி ‘யாத்திரையை’ முடித்துவிட்டு தனது சகாக்களுடன் டெல்லிக்கு திரும்பியுள்ளார். 3 நாட்களுக்குப் பிறகு, அக்டோபர் 29 அன்று நடந்த சம்பவங்களால் சிலர் கோபம் அடைந்துள்ளனர் என்றும் அவர்கள் காவலர்களிடம் புகார் செய்யப் போகிறார்கள் என்றும் சில உள்ளூர் ஊடகவியலாளர்களிடமிருந்து பைசலுக்கு தகவல் கிடைத்துள்ளது.”

“கோயிலுக்கு நான்கு உறுப்பினர்கள் சென்ற காணொளி வெளிவந்ததும், வலது சாரி ஊடகங்கள் தொழுகையை குறித்து சர்ச்சையைக் கிளப்பின. இதனையடுத்து, கோவிலின் பூசாரி கன்ஹா கோஸ்வாமி மற்றும் இரண்டு பூசாரிகள், முகேஷ் கோஸ்வாமியும், சிவ் ஹரியும், மதுரா காவலர்களிடம் புகார் அளித்தனர்,” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காவல்துறையினர் பைசல் கான் மற்றும் சந்த் முகமது ஆகியோரை பிரதான குற்றவாளிகளாகவும், நிலேஷ் குப்தா மற்றும் சாகர் ரத்னா ஆகியோரை குற்றத்துக்குத் துணைபோனவர்களாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் அக்டோபர் 29 மதியம் 12:30 மணியளவில் கோவிலை அடைந்து “84 கோஸ் பரிக்ரமா” செய்ததாக எஃப்ஐஆர்-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

கன்ஹா கோஸ்வாமியின் புகாரில், “கோவில் வளாகத்தில் தொழுகை செய்யும் இரண்டு இஸ்லாமியர்களின் புகைப்படங்களை பைசல் கான் சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளார். இது இந்து உணர்வுகளை புண்படுத்தியுள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.

கோவில் பூசாரி தனது புகாரில், “தொழுவதற்கு பூசாரியிடமோ நிர்வாகத்திடமோ எந்த அனுமதியும் கோரப்படவில்லை. மேலும், ‘நமாஸின்’ புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டன,” என்று தெரிவித்துள்ளார்.

நவம்பர் 2 ம் தேதி, தெற்கு டெல்லியின் ஜாமியா நகரில் வசிக்கும் பைசல் கானை மதுரா காவலர்கள் கைது செய்துள்ளனர்.

காவலர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்

நிகழ்வுகளின் வரிசையைப் பற்றிச் சிந்திக்காமல், மதுரா காவல்துறை இந்த விஷயத்தில் அவசரமாகச் செயல்பட்டதாகக் குற்றசாட்டுகள் எழுகின்றன, என்று ‘தி வயர்’ குறிப்பிடுகிறது.

“மத ஒற்றுமையை வளர்ப்பதற்கான முயற்சியாகக் காவல்துறையினர் இந்த வருகையைப் பார்த்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்தும் ஊடகங்களை நம்பியுள்ளனர்” என்று இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கவனிக்கும் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பைசல் கான் மற்றும் சந்த் முகம்மதுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட ஐபிசியின் பிரிவுகள், அவர்கள் மதத்தை விருபாதகாத வகையில் இழிவுபடுத்துதல் அல்லது தாக்குதல்களில் ஈடுபட்டனர்… மதத்தின் ஸ்தாபகர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் மீது விரும்பத் தகாத அவதூறு பரப்பினர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை, குடாய் கிட்மத்கர் முற்றிலுமாக மறுத்துள்ளது.

“விரும்பத் தகாத அவதூறு பரப்புவது உண்மையில் நோக்கமாக இருந்திருந்தால், பைசல் கான் மற்றும் சந்த் முகமது ஆகியோர் கோவில் வளாகத்தில் தங்கியிருந்து அங்கிருந்தவர்களுடன் மதிய உணவு சாப்பிட்டிருப்பார்களா? அவர்கள் அங்கு இருந்தவர்களின் அனுமதி இல்லாமல் தொழுதிருந்தால், அது ஒரு வன்முறை சூழ்நிலைக்கு வழிவகுத்திருக்காதா?” என்று அந்த அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும், “ஒரு மதத்தை அவமதிக்கும் நோக்கத்துடன், வழிபாட்டுத் தலம் அல்லது புனிதமான ஒரு பொருளை அழித்தல், சேதப்படுத்துதல் அல்லது சிதைத்தலில் ஈடுபட்டுள்ளனர்” என்று காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது. காணொளியில், அவர்கள் கருவறைக்குள்ளோ முக்கிய ஸ்தலத்திலோ தொழுனை செய்யவில்லை என்பது தெளிவாகிறது. எனவே அவர்கள் எதற்கும் சேதம் விளைவிக்கவில்லை,” என்று கூறப்பட்டுள்ளது.

ஒரு சமூகத்தைக் காயப்படுத்தும் நோக்கோடு அவர்கள் செயல்பட்டார்கள் எனும் குற்றச்சாட்டும் பொய்யானது. ஏனென்றால், கோவிலில் இருந்த மற்றவர்களுடன் அவர்கள் மதிய உணவு சாப்பிட்டார்கள் என்பதே எந்த உணர்வையும் புண்படுத்தவில்லை என்பதை நிரூபிக்கப் போதுமானது.

மன்னிப்பு கேட்டுள்ளனர்

புகாரில் கூறியுள்ளது போல், பைசல் கான் தான் அந்த வீடியோவைப் பதிவேற்றியுள்ளார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். குடாய் கிட்மத்கரின் அறிக்கையிலும், அந்த அமைப்பு “அமைதி, அன்பு மற்றும் மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை” நம்புவதாகக் கூறப்பட்டுள்ளது. அது எந்தவொரு “மத அடிப்படைவாதத்திற்கும்” முற்றிலும் எதிரானது.

“பல இந்து மத நிறுவனங்கள், அமைதி மற்றும் சகோதரத்துவத்தை நிலைநாட்டச் சமரசமற்று உழைக்கும் பைசல் கானை பாராட்டியுள்ளன” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“எந்தவொரு நபரோ அல்லது அமைப்போ அவர்களின் உணர்வுகளை நாங்கள் காயப்படுத்தியதாக உணர்ந்தால், அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம், ஆனால் எவரது உணர்வையும் புண்படுத்துவது எங்கள் நோக்கமல்ல என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்