Aran Sei

`வேல் துள்ளி வரும்’ VS ’சட்டத்தை மீறினால் நடவடிக்கை’

“என்ன நடந்தாலும் வேல் யாத்திரை துள்ளி வரும்” என்று, தடையை மீறித்  திருத்தணிக்குக் கிளம்பும் பாஜகவின் மாநிலச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக சார்பில், கட்சியின் தலைவர் எல்.முருகன் தலைமையில் `வெற்றிவேல் யாத்திரை’ நவம்பர் 6 முதல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருத்தணியில் தொடங்கி, திருச்செந்தூரில் நிறைவடையும்படி இந்த யாத்திரை திட்டமிடப்பட்டுள்ளது. இந்த யாத்திரையை டிசம்பர் 6-ம் தேதி வரை நடத்தவிருப்பதாக முருகன் அறிவித்துள்ளார். அதற்கான அனுமதியைக் கோரி டிஜிபி, மாவட்ட எஸ்.பிக்களிடம் கடிதம் அளித்திருந்தார்.

தமிழகத்தில் சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயல்கிறது பாஜக – திருமாவளவன் குற்றச்சாட்டு

வேல் யாத்திரை, மதநல்லிணக்கத்திற்கு என்று கூறி, இதற்குத் தடை விதிக்க வேண்டும் என, தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சித் தலைவர்கள் குரல் கொடுத்து வந்தனர்.

நவம்பர் 4-ம் தேதி, வேல் யாத்திரைக்குத் தடை விதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் பாலமுருகன் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் தனித்தனியாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

“யாத்திரைக்கு அனுமதி வழங்கினால் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு, மருத்துவர்கள், பல துறை ஊழியர்கள் எடுத்து வரும் அனைத்து முயற்சிகளும் வீணாகும்,” எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

`பாஜகவின் வரலாறே வன்முறை வரலாறுதான்’ – வேல்முருகன் காட்டம்

“யாத்திரை முடியும் நாளான டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம்.” என்றும், “அதன் காரணமாகச் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளது.” என்றும் மனுவில் அவர்கள் சுட்டிக் காட்டியிருந்தனர்.

இந்நிலையில், நவம்பர் 5-ம் தேதி “வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை” என நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.

இந்த வழக்கியல் உத்தரவு பிறப்பித்த நீதிபதி சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி தலைமையிலான அமர்வு, “தடை குறித்த விவரங்களைப் பாஜகவுக்குத் தமிழக அரசு தெரிவிக்கும்” என்கிற அடிப்படையில் வழக்கை முடித்து வைப்பதாக உத்தரவிட்டனர்.

பாஜகவின் பெரியார் குளறுபடி – சுட்டும் துக்ளக்

இந்நிலையில், இன்று (நவம்பர் 6) காலை, சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் முருகன், பாஜக தேசியப் பொதுச்செயலாளர் சி.டி.ரவி, உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் முருகனிடம், தடையை மீறி வேல் யாத்திரை நடத்தப்படுமா எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “துள்ளி வரும் வேல்” என்று அவர் பதிலளித்துள்ளார்.

நன்றி : Twitter

“முருகனைக் கும்பிடுவது வழிபாட்டு உரிமை என்பதால் திருத்தணிக்குப் புறப்படுகிறேன். பாஜக வினர் சட்டத்தை மீறுபவர்கள் அல்லர் எனவும் அதேசமயம் தங்களுக்கோ, தமிழ்க் கடவுள்களுக்கோ, தமிழ் மக்களுக்கோ ஒரு பிரச்சனை என்றால் அதனைப் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.” என்றும் கூறியுள்ளார்.

எல்.முருகன் திருத்திணிக்கு செல்ல உள்ள வண்டி (நன்றி : twitter.com/ANI)

நேற்று முன்தினம் (நவம்பர் 4 ) செய்தியாளர்களைச் சந்தித்த மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், “கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டே வேல் யாத்திரைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வேல் யாத்திரையைப் பாஜக கைவிடுவது நல்லது. சட்டத்திற்குக் கட்டுப்பட்டு அனைவரும் நடக்க வேண்டும். சட்டத்தை மீறினால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.” என்று கூறியிருந்தார்.

வேல் யாத்திரை: ` சட்டத்தை மீறினால் நடவடிக்கை ’ – அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை

 

கடந்த அக்டோபர் 27-ம் தேதி, சிதம்பரத்தில் திருமாவளவனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. சமீபத்தில் பாஜக-வில் இணைந்த குஷ்பு, சசிகலா புஷ்பா, ராகவன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் அந்த போராட்டத்தில் கலந்துகொள்ள இருந்தனர். இந்தப் போராட்டத்திற்குத் தமிழகக் காவல்துறை தடை விதித்தது.

அன்று தடையை மீறிப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக, குஷ்பு காரில் புறப்பட்டுச் சென்றார். கிழக்குக் கடற்கரைச் சாலையில் முட்டுக்காடு அருகே  காவல்துறையினர்  அவரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

வேல் யாத்திரைக்கு தடை வேண்டும் – சிபிஎம் பாலகிருஷ்ணன்

குஷ்பு கைது குறித்த பத்திரிகையாளர் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செல்லூர் ராஜு  “சட்டம் ஒழுங்கை யார் கலங்கப்படுத்தினாலும் அரசு நடவடிக்கை எடுக்கும். குஷ்புவைக் கூட காவல்துறை கைது செய்துள்ளது. இதற்கு அரசைப் பாராட்ட வேண்டும்.” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்