Aran Sei

வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி மனு – உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை

பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற உள்ள வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ள ஊரடங்கு  இம்மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் தனி மனித இடைவெளி பின்பற்றப்பட வேண்டும் என்றும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் நவம்பர் மாதம் 6-ம் தேதி, தமிழக பாஜக சார்பில், கட்சியின் தலைவர் எல்.முருகன் தலைமையில் ‘வெற்றிவேல் யாத்திரை’ நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருத்தணியில் தொடங்கி, திருச்செந்துாரில் நிறைவடையும்படி இந்த யாத்திரை திட்டமிடப்பட்டுள்ள யாத்திரையை டிசம்பர் 6-ம் தேதி வரை நடத்திருப்பதாக முருகன் அறிவித்துள்ளார்.

இந்த வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் பாலமுருகன் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் தனித்தனியாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுக்களில், “தொற்று பரவலை தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, விநாயகர் சதுர்த்தி, மொகரம் உள்ளிட்ட மத நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், மாநிலம் முழுவதும், ஒரு மாத காலம் வேல் யாத்திரை நடைபெறவுள்ளது. அதில், 3,000 முதல் 5,000 பேர் கலந்துகொள்ளவிருப்பதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மனுநீதி குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்த கருத்துக்குக் கண்டனம் தெரிவித்து, பாஜக சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது, சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட்டதை மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதே போன்ற, சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் மனுவில் அச்சம் தெரிவித்துள்ளனர்.

“யாத்திரைக்கு அனுமதி வழங்கினால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு, மருத்துவர்கள், பல துறை ஊழியர்கள் எடுத்து வரும் அனைத்து முயற்சிகளும் வீணாகும்,” எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“யாத்திரை முடியும் நாளான டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம்,” என்றும், “அதன் காரணமாக சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளது,” என்றும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் மனுதாரர்கள் சார்பாக முறையிடப்பட்டுள்ளது.

இதனை ஏற்ற நீதிபதிகள், செந்திகுமாரின் மனுவை  நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, வேல் யாத்திரை குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மக்களவை உறுப்பினர் கனிமொழி “தமிழ்க் கடவுளாகக் கொண்டாடப்படும் முருகனுக்கு யாத்திரை நடத்த வேண்டும் என்று அனுமதி கேட்கும் தமிழக பாஜக, அது போலவே தமிழைத் தேசிய மொழியாக்கவும் கோரிக்கை வைக்குமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்