Aran Sei

பாபர் மசூதி தீர்ப்பு ‘ அவமானம் ‘ : சீதாராம் யெச்சூரி

Image Credits: The Indian Express

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. குற்றத்தை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லாததாகக் கூறி நீதிபதி எஸ்.கே.யாதவ் இவர்களை விடுவித்துத் தீர்ப்பளித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரத்தில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மசூதி இடிக்கப்பட்டு 28 ஆண்டுகள் கழித்து இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

பாபர் மசூதியை இடிக்க சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது எனும் குற்றச்சாட்டை நிரூபிக்க சிபிஐ போதுமான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாஜகவின் முத்த தலைவருமான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், முன்னாள் அமைச்சர் உமா பாரதி மற்றும் வினய் கட்டியார் உட்பட குற்றமச்சடப்பட்ட 32 பெயரையும் நீதிபதி எஸ்.கே.யாதவ் விடுத்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட 32 நபர்களில் 26 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினர். அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் காணொளி உரையாடுதல் மூலம் இதில் பங்கேற்றனர்.

“2,000 பக்க விரிவான தீர்ப்பு, மசூதி இடிப்பு ஒரு சதி என்பதையும் முன் திட்டமிடப்பட்டது என்பதையும் மறுத்துள்ளது. இதுதான் பாஜக மற்றும் அதன் மூத்த தலைவர்களின் நிலைப்பாடு, அது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது,” என்று பாஜக செய்தித் தொடர்பாளர் நலின் கோஹ்லி கூறியுள்ளார்.

“மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே அனைத்து ஆதாரங்களையும் சிபிஐ சமர்ப்பித்திருந்தது என்பதை சுட்டிக்காட்ட வேண்டும்,” என்றும் அவர் கூறியுள்ளார்.

“ஜெய் ஸ்ரீ ராம்” என்ற முழக்கத்துடன் முடியும் தனது அறிக்கையில் “நான் இந்தத் தீர்ப்பை முழு மனதுடன் வரவேற்கிறேன்,” என்றும் “இந்தத் தீர்ப்பு நானும் பாஜகவும் ராமஜென்ம பூமி இயக்கத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையையும் அர்ப்பணிப்பையும் நிரூபிக்கிறது,” என்றும் அத்வானி தெரிவித்துள்ளார்.

“இந்தத் தீர்ப்பு அயோத்தியில் ஒரு பிரம்மாண்டமான ராமர் கோவிலை பார்க்க வேண்டும் என்ற எனது நீண்ட கால கனவுக்கு பாதை சமைத்துக் கொடுத்த 2019 நவம்பரில் வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் மற்றொரு முக்கிய தீர்ப்பைத் தொடர்ந்து வந்துள்ளது என்பதையும் நான் பாக்கியமாக கருதுகின்றேன்,” என்றும் “ராமர் கோவில் கட்டுவதற்கான அஸ்திவாரம் அமைக்கும் விழா ஆகஸ்ட் 5 அன்று நடைபெற்றது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“கோடிக்கணக்கான எனது சக நாட்டு மக்களுடன் இணைந்து அயோத்தியில் ஒரு அழகான ராமர் கோயில் கட்டி முடிக்கப்படுவதை எதிர்நோக்கியுள்ளேன்” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

முரளி மனோகர் ஜோஷி இந்த தீர்ப்பை “வரலாற்று முடிவு” என்று குறிப்பிட்டார். “டிசம்பர் 6-ம் தேதி அயோத்தியில் நடந்த சம்பவத்திற்கு எந்த சதியும் தீட்டப்படவில்லை என்பதை இது நிரூபிக்கிறது,” என்றும் அவர் கூறியுள்ளார்.

“எங்கள் வேலைத்திட்டங்களும் பேரணிகளும் எந்தவொரு சதித்திட்டத்தின் பகுதியும் இல்லை. நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம், ராமர் கோவில் கட்டுமானம் குறித்து அனைவரும் இப்போது உற்சாகமாக இருக்க வேண்டும்,” என்றும் அவர் கூறியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த தீர்ப்பு “எவ்வளவு தாமதமாக வந்திருந்தாலும் நீதி வெற்றி பெற்றது என்பதை நிரூபிக்கிறது” என்று கூறியுள்ளார். “ஸ்ரீ எல்.கே. அத்வானி, ஸ்ரீ கல்யாண் சிங், டாக்டர் முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமாஜி [உமா பாரதி] ஆகியோரை விடுவிப்பதற்கான லக்னோவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தின் முடிவை நான் வரவேற்கிறேன்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

நீதி எப்போதும் வெல்லும் என்று உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் கூறியுள்ளார். “முன்னாள் காங்கிரஸ் அரசாங்கம், பாஜக, விஎச்பி [விஸ்வ இந்து பரிஷத்] தலைவர்கள், புனிதர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை, அரசியல் வேறுபாட்டால் பாதிக்கப்பட்டு, பொய்யான வழக்குகளில் தொடர்பு படுத்தினார்கள், அதனால் அவமானம் அடைந்துள்ளார்கள்,” என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில், இடதுசாரி மற்றும் முஸ்லீம் தலைவர்கள் தீர்ப்பை விமர்சித்துவருகிறார்கள்.

“நீதி முழுவதும் கேலிக்கூத்தாகியிருக்கிறது” என்று கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ட்வீட் செய்துள்ளார்.

“பாபர் மசூதியை இடிக்க குற்றவியல் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். மசூதி தானே இடிந்து சரிந்ததா? அப்போதைய உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சட்ட அமர்வு இந்த இடிப்பை ஒரு “மிக மோசமான” சட்ட மீறல் என்று கூறியிருந்தது. இப்போது இந்தத் தீர்ப்பு! அவமானம்.” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இந்த தீர்ப்பு நமது அரசியலமைப்புச் சட்டத்தின் உணர்வுக்கு எதிரானது என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

“அரசியலமைப்பில் உள்ளார்ந்த நம்பிக்கையையும், மத நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவ உணர்வையும் கொண்ட ஒவ்வொரு இந்தியரும், மத்திய மாநில அரசாங்கங்கள், சிறப்பு நீதிமன்றத்தின் தவறான தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்” என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.

“இது தான் சட்டத்தின் ஆட்சிக்கும் நமது அரசியலமைப்புக்கும் உண்மையான தேவை,” என்றும் அவர் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்