Aran Sei

ஒரே பாலின திருமண விவகாரம் – சனாதனத்திற்கு இடமில்லை – நீதிபதி கருத்து

Credits The Print

ரே பாலினத்தைச் சேர்ந்த தம்பதியினரின் திருமணத்துக்கு சம உரிமை கோரி டெல்லி உயர்நீதி மன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த எட்டு ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வரக்கூடிய தம்பதி கவிதா அரோரா, அன்கிதா கண்ணா மேலும் மற்றுமொரு தம்பதி தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் அவர்களின் திருமணத்தை உறுதிப்படுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி ஆஜராகியிருந்தார். உயர்நீதி மன்ற நீதிபதிகள் ராஜிவ் சாஹாய் மற்றும் ஆஷா மேனன் ஆகியோர் கொண்ட அமர்வு மனுவை விசாரித்துள்ளது.

 

திருமணத்தை உறுதி செய்யச் சென்ற போது  டெல்லி சப் டிவிஷனல் மேஜிஸ்திரேட் அலுவலகத்துக்குள் நுழையும் அனுமதி கூட மறுக்கப்பட்டதாக ஒரு மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்காவில் திருமணம் செய்துகொண்ட ஜெயின் – பரக் மேத்ரா தம்பதிக்கு  நியூயார்க் இந்திய தூதரகத்தில் வெளிநாட்டு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் பதிவு செய்ய மறுக்கப்பட்டுள்ளது என மற்றுமொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அரசியலமைப்பின் 21-வது சட்டப் பிரிவின்படி திருமணத்துக்கு இணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை என்பது ஒரே பாலினத்தைச் சேர்ந்த தம்பதியினருக்கும் பொருந்தும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

”வரிவிதிப்பு, காப்பீடு, ஓய்வூதியம் போன்ற விஷயங்களில் எண்ணற்ற சட்ட உரிமைகள் மற்றும் பாதுகாப்புகளை இந்தத் திருமணச் சட்டம் வழங்குகிறது. ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள், திருமணத்தினால் கிடைக்கும் அனைத்து சட்ட உரிமைகள் மற்றும் சமூக நலன்களையும் இழக்கின்றனர்.” என்று மனுவில் சுட்டியிருக்கிறார்கள்.

சம உரிமை கோரி, கண்ணியத்துடனும் சமத்துவத்துடனும் நடத்தப்பட வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தியுள்ளதாக லைவ் லா  செய்தித்தளம் குறிப்பிட்டுள்ளது.

”மனுதாரர்கள் வெளிநாட்டு திருமண சட்டத்தின் கீழ் திருமணத்தை பதிவு செய்யச் சென்றபோது அதிகாரிகள் இது விதிமுறைகளுக்குப் புறம்பானது என்று தொடர்ந்து கூறினார்கள். ஆனால் எப்படி விதிமீறல் என்பதை ஆதாரப்பூர்வமாக காட்டவில்லை.” என்றும் மேனகா குறிப்பிட்டுள்ளார்.

Credits Menaka Gurusamy Twitter

ஒரே பாலினத்தைச் சேர்ந்த தம்பதிகளின் உரிமைகளைக் காக்கும் நவ்தேஜ் – ஜோஹார் வழக்கில் உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து அதிகாரிகளுக்கு தெரியவில்லை எனவும், இது அந்தத் தம்பதிகளின் கண்ணியத்தை நிராகரிக்கிறது என்றும் வழக்கறிஞர் மேனகா கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு வெளியில் வசிக்கும் குடிமக்களுக்கான, சிறப்பு திருமணச் சட்டம் 1954 மற்றும் வெளிநாட்டு திருமணச் சட்டம் 1969 ஆகியவை ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களின் திருமணத்தையும் உள்ளடக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று உயர்நீதி மன்றத்தில் மேனகா வலியுறுத்தியுள்ளார்.

வழக்கு விசாரணையின்போது ருக்மணி யாதவ் என்ற வழக்கறிஞர், சனாதன தர்மத்தின் 5000 ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு வழக்கு இருந்ததில்லை என்று கூறினார்.

நீதிபதி ஆஷா மேனன் உடனடியாக, “சட்டங்களில் பாலியல் பாகுபாடு கிடையாது. நாட்டின் குடிமக்களுக்காக சட்டத்தை வழிநடத்த முயற்சி செய்யுங்கள். இது குடிமக்கள் ஒவ்வொருவரின் உரிமையும் தான்.” என்று பதிலளித்ததாக தி பிரிண்ட் குறிப்பிட்டுள்ளது.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கில் பதிலளிக்கக் கோரி மத்திய அரசு மற்றும் டெல்லி அரசாங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளது. அடுத்த விசாரணை 2021 ஜனவரி 8-ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்