Aran Sei

நியூயார்க்கை தொட்டிருக்கும் தமிழ் இலக்கியம்

வ்வாண்டுக்கான மொழிப்பெயர்ப்பு இலக்கியங்களுக்கான நேஷன் புக் விருதிற்கான பத்து படைப்புகளை கொண்ட பட்டியலை ‘தி நியூயார்க்கர்’ இதழ் வெளியிட்டுள்ளது. அதில் ‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ என்ற தலைப்பில் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதி, என்.கல்யாண ராமன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ‘தி ஸ்டோரி ஆஃப் கோட்’ என்ற நாவல் இடம் பெற்றுள்ளது.

நன்றி : the new yorker

தமிழில் பிரபல எழுத்தாளரான பேராசிரியர் பெருமாள் முருகன் கூளமாதாரி, கங்கணம், மாதொருபாகன் போன்ற நாவல்களை எழுதியுள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை கதைக்களமாக கொண்டு இவர் எழுதிய மாதொருபாகன் என்ற நாவல் பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளானது. திருச்செங்கோடு பகுதி மக்களின் மனதை புண்படுத்திவிட்டதாக பல இந்துத்துவ அமைப்புகளும் சாதி அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். சில அமைப்புகளால் பெருமாள் முருகனுக்கு அச்சுறுத்தல்களும் மிரட்டல்களும் வந்தன.

இந்த சம்பவம் தமிழ் படைப்பு சூழலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக இந்த அச்சுறுத்தல்கள் நிகழ்ந்திருப்பதாக பல்வேறு அரசியல் தலைவர்களும், முற்போக்கு அமைப்புகளும் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

இந்நிலையில், ’பெருமாள் முருகன் இறந்துவிட்டான்’ என்று முகநூலில் பதிவிட்ட பெருமாள் முருகன், இத்தோடு தான் எழுதுவதை நிறுத்திக்கொள்வதாகவும் அறிவித்தார். மேலும் இனி என் நாவல்களை யாரும் கடைகளில் விற்கவேண்டாம் என்றும், அதற்கான இழப்பீட்டு தொகையை பதிப்பாளர்களுக்கு தான் கொடுத்துவிடுவதாகவும் அறிவித்தார்.

அதையொட்டி, சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழ்நாடு முற்போக்காளர் எழுத்தாளர் கலைஞர் சங்கம் வழக்குத் தொடர்ந்தது. அதில் ‘இலக்கிய படைப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது. பெருமாள் முருகன் மீண்டும் எழுத வேண்டும்’ என்று தீர்ப்பு வழங்கியது.

இந்த சம்பவத்திற்கு பின் அவர் எழுத்தில் வெளியான முதல் நாவல் ‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’. இதை என். கல்யாண் ராமன் மொழிப்பெயர்க்க, ’க்ரோவ் அட்லாண்டிக்’ பதிப்பகம் வெளியிட்ட்து.

’பூனாச்சி என்கிற ஒரு கருப்பு ஆட்டின் மூலம், தமிழ்நாட்டு பண்ணைகளில் வேலை செய்யும் மனிதர்களை பற்றியும், விலங்குகளை பற்றியும், அவர்களின் வலியை பற்றியும் இந்நாவல் பேசுகிறது’ என்று ‘தி நியூயார்க்கர்’ கூறியுள்ளது.

”மனிதர்களை பற்றி எழுத அச்சம். தெய்வங்களைப் பற்றி எழுதவோ பேரச்சம். அசுரர்களைப் பற்றி எழுதலாம். அசுர வாழ்க்கையும் கொஞ்சம் பழக்கம்தான். இப்போதைக்குத் தொட்டுக்கொள்ளலாம். சரி, விலங்குகளைப் பற்றி எழுதுவோம். அழ அறிந்தவை ஐந்தே ஐந்து விலங்குகள்தாம். அவற்றில் நாயும் பூனையும் கவிதைகளுக்கானவை. மாடு, பன்றி ஆகியவற்றைப் பற்றி எழுதவே கூடாது. மிஞ்சியது ஆடு ஒன்றுதான்” என்று பெருமாள் முருகன் முன்னுரையில் எழுதியிருக்கிறார்.

நன்றி : amazon.in

மேலும் வெள்ளாட்டை பற்றி முன்னுரையில் கூறும்போது, “பிரச்சனை தராத அப்பிராணி ஆடு. ஆட்டில் இரண்டு வகை. வெள்ளாடு, செம்மறி. சுறுசுறுப்பானது வெள்ளாடு. கதையில் ஓட்டம் இருக்க வேண்டும். அதற்காக லாயக்கு வெள்ளாடுதான். ஆகவே வெள்ளாட்டைப் பற்றி எழுதியிருக்கிறேன்” என்கிறார்.

2018-ம் ஆண்டு வெளியிடப்பட்ட மொழிப்பெயர்ப்பு இலக்கியத்திற்கான பட்டியலிலும் மாதொருபாகனின் ஆங்கில பதிப்பான ‘ஒன் பார்ட் உமேன்’ நாவல் இடம் பெற்றது குறிப்பிடப்பட்டது. மொழிப்பெயர்ப்பு இலக்கியத்திற்கான இந்த பட்டியலில் பெருமாள் முருகனின் படைப்பு மட்டுமே இரண்டாம் முறையாக இடம் பெற்றுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்