Aran Sei

காலை உணவைத் தவிர்ப்பவரா நீங்கள்? – கவனம்

மது பணிச்சூழல் மற்றும் வாழ்வியல் மாற்றத்தின் விளைவாக காலை உணவை தவிர்க்கும் பழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் பல்வேறு காரணங்களுக்காக காலை உணவைத் தவிர்க்கின்றனர். இது பற்றிய விழிப்புணர்வு பெரிய அளவில் ஏற்படுத்தப்படுவதில்லை. காலை உணவைத் தவிர்ப்பதால் என்னென்ன பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்? என மருத்துவர்களிடம் கேட்டோம்…

எச்சூழலிலும் காலை உணவைத் தவிர்க்கக்கூடாது என்கிறார் இரைப்பை மற்றும் குடலியல் மருத்துவர் எம்.ராதா…

“இரைப்பையில் அமிலம் சுரக்கும் தன்மை அதிகாலை நேரத்தில் அதிகமாக இருக்கும். நாம் சாப்பிடும் உணவு அந்த அமிலத்தை நீர்த்துப் போகச் செய்து விடும். ஆனால் நாம் சாப்பிடவில்லையென்றால் அந்த அமிலம் இரைப்பையின் சுவர்களில் பட்டு அரிக்க ஆரம்பித்து விடும்.

இதனால் இரைப்பையில் புண்கள் ஏற்பட்டு அது அல்சராக மாறி விடும். அல்சர் ஏற்பட்ட பின் நாம் உட்கொள்ளும் உணவு அந்தப் புண்களின் மீது படும்போதெல்லாம் வலியும் வாந்தியும் ஏற்படும். இதனால் தேவையான அளவு உணவை உட்கொள்ள முடியாது. இதன் காரணமாக அல்சர் மேலும் அதிகமாகும். அதன் விளைவாக உடல் எடை குறைய ஆரம்பிக்கும். நாள்பட்ட அல்சர் உள்ளவர்களுக்கு நெஞ்செரிச்சலும், உணவு விழுங்குவதில் சிரமமும் ஏற்படும்.

நீரிழிவு, இதய நோய் போன்ற நாள்பட்ட வியாதிகளுக்கு ஆளானவர்கள் சரியான நேரத்துக்கு சாப்பிடுவது மிக மிக முக்கியம். சரியான நேரத்தில் தேவையான உணவை எடுத்துக் கொள்ளும்போது ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

“நாம் உட்கொள்ளும் உணவு 4 முதல் 6 மணி நேரத்தில் செரித்து இரைப்பையிலிருந்து சிறுகுடலுக்குச் சென்று விடும். அதன் பின்னர் இரைப்பை காலியாகி விடும். ஆகவேதான் நாளொன்றுக்கு மூன்று வேளை உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுகிறது.”

“சரியான நேரத்தில் சாப்பாடுதான் சாப்பிட வேண்டும் என்றில்லை பிஸ்கட் போன்ற தின்பண்டங்களையும் சாப்பிடலாம். குறிப்பாக காலை உணவைத் தவிர்க்கவே கூடாது. ஏனென்றால் காலையில் சாப்பிடும் உணவு மூளைக்குத் தேவையான க்ளுகோஸைக் கொடுத்து அன்றைய நாளுக்கான சுறுசுறுப்பை அளிக்கிறது. என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பது மட்டுமல்ல சரியான நேரத்தில் மூன்று வேளைகளும் சாப்பிட வேண்டும் என்பது மிக முக்கியம்.” என்கிறார் ராதா.

காலையில் நீர்ம உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது என்கிறார் சித்த மருத்துவர் காசிப்பிச்சை…

“காலை உணவைத் தவிர்க்கக்கூடாது. திட உணவாக இல்லாமல், கரைத்த பழைய சோறு, கேழ்வரகுக் கஞ்சி போன்ற நீர்ம உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. அதற்கு வாய்ப்பில்லா விட்டாலும் சாப்பிடாமல் இருக்கக்கூடாது. ஓரளவு க்ளுக்கோஸ் வழங்கக்கூடிய உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.”

“முந்தைய இரவு உணவுக்கும் காலை உணவுக்கும் 12 மணி நேரத்துக்கும் அதிகமான இடைவெளி எடுத்துக் கொள்கிறோம். அப்படியிருக்கையில் உடலில் உள்ள க்ளுக்கோஸின் அளவு குறைந்திருக்கும்.   ஆகவே அதை ஈடுகட்ட காலை சாப்பிட்டே ஆக வேண்டும். எந்த வயதினராக இருந்தாலும் இதன் விளைவுகள் ஒன்றுதான் என்றாலும் வயதானவர்கள் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும்” என்கிறார் காசிப்பிச்சை.

– கி.ச.திலீபன்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்