Aran Sei

அரிசி சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா?

credit: thehealthsite.com

அரிசி சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமா? அரிசி சாப்பிடுவதற்கும் சர்க்கரை நோய்க்கும் தொடர்பு உள்ளதா? போன்ற கேள்விகளை வைத்து 21 நாடுகளில் உள்ள 35 வயதுக்கும் 70 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடைய 1.32 லட்சம் (1,32,372) மக்கள் மத்தியில் பத்து ஆண்டுகள் ஆய்வு செய்யப்பட்டது.தீட்டப்பட்ட (தவிடு நீக்கிய) செய்யப்பட்ட அரிசி சாப்பிடுவதற்கும் சர்க்கரை நோய்க்கும் தொடர்பு உள்ளது என்பது ஆய்வின் முடிவுகளில் தெரிய வருகிறது.

இந்த ஆய்வை கனடாவின் மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தின் மக்கள் ஆரோக்கிய ஆய்வு மைய பேராசிரியர் பவதாரணி பாலாஜியின் தலைமையிலான குழு நடத்தியது. இந்த ஆய்வுக்கு ஆசியா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, அய்ரோப்பா மற்றும் ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளைச் சேர்ந்த பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் பங்களிப்பு செய்துள்ளனர். இந்த ஆராய்ச்சி முடிவுகள் டயாபெட்டிஸ் கேர் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் அரிசி சாப்பிடுவதற்கும் சர்க்கரை நோய்க்கும் உள்ள  தொடர்பு குறித்த ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கிறன. ஆனால், அந்த ஆய்வுகள் உறுதியான முடிவுகளை தரவில்லை என்பதோடு அவை ஒரு சில நாடுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்டன. இந்த குறைபாட்டை நீக்குவதற்கு, தற்போது செய்யப்பட்ட ஆய்வு தனது ஆராய்ச்சி எல்லையை ஐந்து கண்டங்களில் உள்ள 21 நாடுகளுக்கு விரிவாக்கியது.

ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நாடுகளில் மிக அதிக அளவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், பூடான், நேபாளம், மாலத் தீவுகள் ஆகிய நாடுகள் அடங்கிய தெற்காசியாவில், நாளொன்றுக்கு ஒரு நபர் சராசரியாக 630 கிராம் அரிசி சாப்பிடுகிறார். அதைத் தொடர்ந்து, தென் கிழக்கு ஆசியாவில் நாளொன்றுக்கு ஒரு நபர் சராசரியாக 239 கிராம் அரிசியும் சீனாவில் 200 கிராம் அரிசியும் சாப்பிடுகின்றனர் என்பதை ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன..

தெற்காசிய நாடுகளில் மக்கள் சாப்பிடும் உணவில் 80 விழுக்காடு அளவுக்கு மாவுச்சத்து நிறைந்துள்ளதற்கு அரிசி பயன்பாடே காரணமாகும். இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது என்று ஆய்வு முடிவு காட்டுகிறது. அதேபோல், தெற்காசியாவில் .தீட்டப்படாத அரிசியை பயன்படுத்துவது குறைந்துள்ளது. தீட்டப்பட்ட அரிசி சமைப்பதற்கு சிறிது நேரமே எடுத்துக்கொள்வதுடன் சாப்பிடுவதற்கும் லேசாக இருக்கிறது. ஆனால், தீட்டப்பட்ட வெள்ளை அரிசியில் விட்டமின் பி1 போன்ற ஊட்டச்சத்துகள் நீக்கப்படுகின்றன. இது விட்டமின் பி1 குறைபாட்டினால் உண்டாக்கக் கூடிய நோய் தெற்காசிய நாடுகளில் அதிகமாகக் காணப்படுவதற்கு காரணமாகிறது.

தென்காசிய நாடுகளில் தீட்டப்பட்ட அரிசி பயன்பாடு அதிகரித்ததற்கு வேகமான நகரமயமாக்கலும் பொருளாதார வளர்ச்சியும் முக்கியமான காரணம் என்று ஆய்வு குறிப்பிடுகிறது.

தெற்காசியாவில் முக்கியமான நாடு இந்தியா. இந்தியாவைப் பற்றி ஆய்வு முடிவுகள் கூறுவதாவது, கடந்த ஐம்பது ஆண்டுகளில் கைக் குத்தல் அரிசிக்கு பதிலாக அரிசி ஆலையில் தீட்டப்பட்ட  அரிசி பயன்பாடு அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், இந்தியாவில் சர்க்கரை நோயின் அளவு  நகர்ப்புறங்களில் 1970-ம் ஆண்டுகளில் 2 விழுக்காடாக இருந்தது. இது 2015-ம் ஆண்டு 25 விழுக்காடாக அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களில் 1 விழுக்காட்டிலிருந்து 14 முதல் 16 விழுக்காடு ஆக அதிகரித்துள்ளது.. இந்தியாவில் ஏற்பட்ட சமூக பொருளாதார மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக அரிசி முக்கியமான உணவாக மாறியுள்ளது. அது சர்க்கரை நோய் அதிகரிப்பதற்குக் காரணமாக இருக்கின்றது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்