Aran Sei

கொரோனா : ‘ இந்தியர்கள் தடுப்பு மருந்திற்காகக் காத்திருக்கிறார்கள் ‘

Image Credits: NDTV

காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மக்களவையில், கொரோனா மரணங்கள் சரியாகப் பதிவு செய்யப்படுவதில்லை என்று கூறியுள்ளார். கொரோனா தடுப்பு மருந்து எப்போது கண்டுபிடிக்கப்படும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தனிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

“ஆரம்பத்திலிருந்தே அனைத்தும் சரியான திட்டமின்றி நடைபெறுகிறது. இந்தியாவை போன்று எந்த நாடும் இந்த அளவில் மருத்துவர்களையும், சுகாதார ஊழியர்களையும் இழக்கவில்லை. இத்தொற்று சமூக பரவல் கட்டத்தில் இருக்கிறது என்பதை இந்த அரசு இன்னும் ஏற்கவில்லை. ஒழுங்காகத் திட்டமிட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது,” என்று கொரோனா தொற்று குறித்த விவாதத்தின்போது மக்களவையில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளார்.

“பேரிடரை முற்றிலுமாகத் தவிர்த்திருக்க முடியாது என்றாலும் அதன் தீவிரத்தை குறைத்திருக்கலாம். தொற்றை குறைப்பதற்காக எடுத்த நடவடிக்கைகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. எனக்கு நம் நாட்டின் கொரோனா மரணங்களின் மீது சந்தேகம் உள்ளது. பதிவு செய்யப்படாத மரணங்கள் அதிகம் நிகழ்ந்துள்ளன என்று நான் நினைக்கிறன். எத்தனை மருத்துவமனைகள் மரணத்தின் காரணத்தைக் குறிப்பிடும் மருத்துவச் சான்றிதழை வழங்க முடியும்? எப்போது தடுப்பு மருந்துகள் கண்டறியப்படும் ஹர்ஷ வர்தன் ஜி? இந்தியர்கள் தடுப்பு மருந்திற்காகக் காத்திருக்கிறார்கள்,” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“நாடு முழுவதும் கிட்டத்தட்ட 30 தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில் மருந்து நிறுவனங்களும் துறைசார் நிபுணர்களும் ஈடுபட்டு வருகிறார்கள்”, என்று கடந்த வெள்ளிக்கிழமை (18/09/2020) ஹர்ஷ வர்தன் கூறியதாக என்.டி.டி.வி தெரிவித்துள்ளது.

“இத்தடுப்பு மருந்துகள், முன்மருத்துவ மற்றும் மருத்துவ வளர்ச்சியின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன. இதில் மூன்று மருந்துகள்  I / II / III கட்ட சோதனையின் இறுதிக்கட்டத்தில் உள்ளன, நான்கு முன்மருத்துவ கட்டத்தின் இறுதி நிலையில் உள்ளன,” என்று ஹர்ஷ் வர்தன் மக்களவையில் எழுத்து பூர்வ பதிலில் கூறியுள்ளார்.

“தடுப்பூசி தொடர்பான ஆராய்ச்சிக்கான ஆதாரங்களை மேம்படுத்துதல், மருத்துவ சோதனை தளங்களை நிறுவுதல் மற்றும் ஒழுங்குமுறை வழிகாட்டுதல்கள் இயக்குவதை அறிவித்தல் ஆகியவற்றிற்கும் ஆதரவு விரிவுபடுத்தப்படுகிறது,” என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பி.எம் கேர்ஸ் நிதியிலிருந்து பெறப்பட்ட சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சக நிதி குறித்தும் ஹர்ஷ் வர்தனிடம் கேள்வியெழுப்பினார்.

இரண்டாம் கட்டமாக இந்தத் தொற்று பரவும் என்று கருதப்படும் நிலையில், மாநிலங்களுக்கு உதவுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சவுத்ரி கேட்டுக்கொண்டார்.

“புலம்பெயர் தொழிலாளர்களுக்குத் தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும். பொதுமுடக்கத்தின் ஆரம்பத்தில் அவர்கள் தத்தமது ஊர்களை நோக்கிச் சென்றனர், அப்போது அவர்களுக்கு உதவ யாரும் இல்லை. நாம் பாராட்டக்கூடிய நடவடிக்கை எதுவும் அரசாங்கம் எடுக்கவில்லை. 1,000-க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் உயிர் இழந்தனர். பி.எம். கேர்ஸ் நிதியிலிருந்து சிறிது தொகையைப் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று சவுத்ரி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் கொரோனா நோய்த் தொற்று நிலைமை மோசமாக உள்ளது என்று கூறிய சவுத்ரி, இதனைத் தடுக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சரை வலியுறுத்தினார்.

இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்று 54 லட்சத்தைத் தண்டியுள்ளது என்றும், ஞாயிற்றுக்கிழமை 92,605 பேருக்குப் புதிதாகத் தோற்று ஏற்பட்டுள்ளது என்றும், 1,133 பேர் இறந்திருக்கிறார்கள் என்றும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்