Aran Sei

செவிலியர்களின் சேவையைக் கருத்தில் கொண்டு பணிநிரந்தரம் செய்யுங்கள் – தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை

கொரோனா பேரிடர் காலத்தில் பணியில் அமர்த்தப்பட்ட செவிலியர்களின் சேவையைக் கருத்தில் கொண்டு அவர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, இன்று (ஜனவரி 30) மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,“ஊதியத்திற்கு அப்பாற்பட்டு சகிப்புத்தன்மையுடன் தாய்க்கு நிகரான பரிவுடனும், மனிதநேயத்துடனும் மகத்தான சேவையாற்றி வருபவர்கள் செவிலியர்கள். கோரோனா பேரிடர் காலத்தில் தங்கள் உயிர்களைப் பொருட்படுத்தாமலும், தங்கள் குடும்பத்தாருடன் நேரம் செலவழிக்காமலும் மக்களின் உயிர் காக்கும் பணியில் தங்களை ஈடுபத்திக் கொண்டவர்கள் செவிலியர்கள்.” என்று அவர் நினைவூட்டியுள்ளார்.

தமிழகத்திற்கான இடஒதுக்கீடு மறுப்பு – அண்ணா பல்கலையில்., எம்.டெக் மாணவர் சேர்க்கை நிறுத்தம்

மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியம், படிகள் வழங்க வேண்டும் என்றும் கொரோனாவால் இறந்த செவிலியர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கருப்புப் பட்டை அணிந்து தமிழகம் முழுவதும் பதினான்காயிரம் செவிலியர்கள் இன்று (ஜனவரி 30) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று வைகோ சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், “உலகின் இரண்டாவது பெரிய மக்கள்தொகை கொண்ட நாட்டில் போதுமான மருத்துவர்கள், செவலியர்கள் மருத்துவ உதவியாளர்களை நியமித்து மக்களைப் பாதுகாப்பது மத்திய, மாநில அரசுகளின் கடமை. உலக நல்வாழ்வு நிறுவனம் (WHO) மற்றும் இந்திய செவிலியர் ஆணையம் (INC) வழிகாட்டுதலின் அடிப்படையில், அனைத்து அரசு பொது மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு நோயாளிக்கு ஒரு செவிலியர், மூன்று குழந்தை நோயாளிகளுக்கு ஒரு செவிலியர், சாதாரண ஐந்து நோயளிகளுக்கு ஒரு செவிலியர் என்று நியமிக்கப்பட வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆன்லைன் மருந்து வணிகச் சட்டம் : ‘2 கோடி பேரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்’ – ஸ்டாலின் கண்டனம்

“செவிலியர்களின் நீண்ட நெடிய உறுதியான போராட்டத்தின் காரணமாக 2015-ம் ஆண்டு தமிழக அரசு, அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற செவிலியர் கல்லூரிகளில் படித்தவர்களைத் தேர்வு செய்து, செவிலியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக மருத்துவப் பணியாளர் தேர்வு ஆணையம் (MRB) உருவாக்கி, 7,700 செவிலியர் பணிகளுக்குத் தேர்வு நடத்தியது. 45,000 பேர் பங்கேற்று, 19,000 பேர் தேர்ச்சி பெற்றனர்.” என்று வைகோ தெரிவித்துள்ளார்.

கேரளா: பேரிடர் காலத்தில் விடுமுறை – மருத்துவர்கள் பணிநீக்கம்

இவர்களுள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 7,700 பேருக்குப் பணி ஆணை வழங்கி, நாள் ஒன்றுக்கு 256 ரூபாய் குறைந்த அளவு ஊதியம், 2 ஆண்டுகள் கழித்துப் பணி நிரந்தரம் வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது என்றும் இதற்குப் பின் 3,300 செவிலியர்களைப் பணியில் அமர்த்தி 11,000 பேராக ஆன நிலையில், இரண்டு ஆண்டுகள் கடந்தும் பணி நிரந்தரமும், ஊதிய உயர்வும், பணி கால நேரமும் வரையறுக்கப்படாமல் செவிலியர்கள் ஏமாற்றப்பட்டதாகச் சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினார்கள் என்று 2017 ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தை அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.

கோரோனா பேரிடர் காலத்தில் பணியில் அமர்த்தப்பட்ட செவிலியர்களும் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திப் போராடி வருகிறார்கள் என்றும் அவர்களின் சேவையைக் கருத்தில் கொண்டு அவர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் வைகோ கோரியுள்ளார்.

“மாதவிடாயை தள்ளிவைக்க மருந்துகள் உட்கொண்டேன்” – கொரோனா மருத்துவர்

மேலும், “செவிலியர் கேட்பது பிச்சை அல்ல; அவர்களின் உரிமை. செவிலியர்களுடைய பிரச்சினையைக் கனிவோடு பரிசீலனை செய்து தீர்வு காண வேண்டும். பெருகி வரும் விலைவாசி உயர்வு, குடும்பத்தில் வறுமை என்று பெரும்பான்மையான செவிலியர்கள் பாதி வயது கடந்தவர்களாக வாழ்வோடு போராடிக் கொண்டு இருக்கின்றார்கள்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்து, ஊதிய உயர்வை முறையாக வழங்க ஆணையிட வேண்டும் என்று தமிழக அரசை மதிமுக சார்பில் கேட்டுக் கொண்டுள்வதாக மாநிலங்களவை உறுப்பினரும் மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்