Aran Sei

கொரானா தடுப்பு மருத்து பரிசோதனை : பிரேசிலில் ‘தன்னார்வலர்’ மரணம்

Image Credits: Medical News Today

ஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியின் மருத்துவப் பரிசோதனையில் ஒரு தன்னார்வலர் இறந்துவிட்டார் என்றும் ஆனால் அதன் சோதனை தொடரும் என்றும் அன்விசா – பிரேசில் சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒரு அறிக்கையில், கவனமாகப் பரிசீலனை செய்தபின், “மருத்துவப் பரிசோதனையின் பாதுகாப்பு குறித்து எந்தக் கவலையும் இல்லை” என்று கூறி பரிசோதனையைத் தொடரும் திட்டத்தை ஆக்ஸ்போர்டு உறுதிப்படுத்தியுள்ளது.

பெயர் குறிப்பிட விரும்பாத சிலர், தன்னார்வலருக்கு போலி மருந்து (placebo) வழங்கப்பட்டதாகவும் சோதனை தடுப்பூசி வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்ததாக பிரேசிலியச் செய்தித்தாளான ‘ஓ குளோபோ’ குறிப்பிட்டுள்ளது.

அஸ்ட்ராஜெனெகா கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாக ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விஷயத்தைப் பற்றி நன்கு அறிந்த சிலர் ராய்ட்டர்ஸிடம், கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதால் தன்னார்வலர் இறந்திருந்தால் இந்தச் சோதனை நிறுத்தப்பட்டிருக்கும் என்றும் உயிரிழந்த நபர் மூளைக்காய்ச்சலுக்கான மருந்தை உட்கொண்ட கட்டுப்பாட்டுக் குழுவைச் சேர்ந்த ஒருவர் என்றும் தெரிவித்துள்ளனர்.

பிரேசிலில் 3-ம் கட்ட மருத்துவச் சோதனைகளை ஒருங்கிணைக்க உதவும் சாவோ பாலோவின் பெடரல் பல்கலைக்கழகம், ஒரு சுயாதீன மறுஆய்வுக் குழுவும் சோதனையைத் தொடரப் பரிந்துரைத்திருப்பதாகக் கூறியுள்ளது. தன்னார்வலர் பிரேசிலைச் சேர்ந்த ஒருவர் என்பதை இந்தப் பல்கலைக்கழகம் முன்னர் உறுதிப்படுத்தியது. ஆனால் தனிப்பட்ட விவரங்களை எதையும் வழங்கவில்லை.

“பங்கேற்கும் தன்னார்வலர்களுக்குத் தடுப்பூசியால் கடுமையான பின்விளைவோ பாதிப்போ இல்லாமல், அனைத்தும் எதிர்பார்த்தபடி தொடர்கின்றன” என்று பிரேசிலியப் பல்கலைக்கழகம் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுவரை, திட்டமிடப்பட்ட 10,000 தன்னார்வலர்களில் 8,000 பேருக்கு ஆறு நகரங்களில் முதல் கட்ட மருந்துகள் அளிக்கப்பட்டுள்ளன. பலருக்கு ஏற்கனவே இரண்டாவது கட்ட மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன என்று பல்கலைக்கழகச் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளதாக ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

உயிரிழந்த தன்னார்வலர் ரியோ டி ஜெனிரோவில் வசித்து வந்த 28 வயது இளைஞன் என்றும் கொரோனா தொற்று ஏற்பட்டதால் இறந்து விட்டதாகவும் சிஎன்என் பிரேசில் தெரிவித்துள்ளது.

சோதனைகளில் ஈடுபடுவோரின் மருத்துவ இரகசியத்தன்மையைச் சுட்டிக்காட்டி அன்விசா மேற்கொண்டு விவரங்களை வழங்கவில்லை.

அஸ்ட்ராஜெனெகாவின் பங்குகள் 1.8% சரிந்தன

பிரேசிலின் மத்திய அரசு இங்கிலாந்து தடுப்பூசியை வாங்கி ரியோ டி ஜெனிரோவில் உள்ள பயோமெடிக்கல் ஆராய்ச்சி மையத்தில் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில், சீனாவின் சினோவாக் பயோடெக் லிமிடெட், சாவோ பாலோ மாநில ஆராய்ச்சி மையமான புட்டான்டன் நிறுவனத்தின் மூலம் மற்றொரு தடுப்பூசியைப் பரிசோதிக்கிறது.

சினோவாக் தடுப்பூசியைப் பிரேசில் அரசு வாங்காது என்று அந்நாட்டின் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்குப் பிறகு, பிரேசிலில்தான் கொரோனா வைரசால் 1,54,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்து மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கும் இந்தியாவிற்கும் அடுத்தபடியாக 52 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா நோயாளிகளுடன், வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 3-ம் இடத்தில் உள்ளது பிரேசில்.

இது குறித்து அரண்செய் யுடன் பேசிய மருத்துவர் ரகுபதி “மருந்து முதலில் விலங்குகள் மீது பரிசோதிக்கப்படும். பின்னர் மனிதர்களுக்கு மருந்து வழங்கப்பட்டு 1-ம், 2-ம், 3-ம் கட்ட சோதனைகளாக நடத்தப்படும். இது மூன்றாம் கட்ட சோதனை என்பதால் அதிகமானோருக்கு நடந்து இருக்கும். அதில் ஒருவருக்குப் பாதிப்பு ஏற்பட்டிருப்பது சிறியதுதான்” என்று கூறினார்.

“மூளையில் ஏற்பட்டுள்ள இந்தப் பாதிப்பு தடுப்பு மருந்தாலும் வரக்கூடும் என்றாலும் அதற்குப் பல காரணிகள் உண்டு. கொரோனா தோற்று போன்ற பல வைரஸ்களாலும் மூளையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு” என்றும் அவர் தெரிவித்தார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்