Aran Sei

ஆக்ஸ்ஃபோர்டு கொரோனா தடுப்பு மருந்து சோதனை : ‘ தடுப்பு சக்தி மேம்படுகிறது ‘

கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான, சோதனைகளில் இருக்கும் தடுப்பு மருந்துகளில் முன்னணியில் இருப்பது ஆக்ஸ்ஃபோர்டு ஆராய்ச்சியாளர்களும் அஸ்ட்ராஜெனிகா மருந்து நிறுவனமும் சேர்ந்து தயாரிக்கும் மருந்து ஆகும். அந்தத் தடுப்பு மருந்து இளம் வயதினர், வயதானவர்கள் இரு தரப்பினரிடமும் தடுப்பு சக்தி எதிர்வினையை தோற்றுவித்திருக்கிறது என்று அஸ்ட்ராஜெனிகா அறிவித்திருக்கிறது என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்றால் இதுவரை உலகில் 11.5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர், உலகப் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டது, இயல்பு வாழ்க்கை உலகெங்கும் பாதிக்கப்பட்டது.

இந்தத் தடுப்பு மருந்தின் உற்பத்தியில் உதவி செய்யும் அஸ்ட்ராஜெனிகா, இந்த மருந்து வயதானவர்களிடம் குறைந்த அளவு பக்க விளைவுகளையே ஏற்படுத்தியது என்று தெரிவித்திருக்கிறது.

அந்த தடுப்பு மருந்தின் பெயர் AZD1222, இப்போது கிடைத்துள்ள தரவுகள், இம்மருந்தின் பாதுகாப்பையும், தடுப்பு சக்தி அதிகரிக்கும் திறனையும் மேலும் உறுதி செய்துள்ளது என்று அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியிருக்கிறார்.

ஆக்ஸ்ஃபோர்டு/அஸ்ட்டோஜெனிகா தடுப்பு மருந்துக்கும் Pfizer மற்றும் BioNTech உருவாக்கி வரும் தடுப்பு மருந்துக்கும் முதன் முதலில் ஒழுங்குமுறை அமைப்புகளின் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கான ஆய்வுப் பணி ஆக்ஸ்ஃபோர்டில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது. AZD1222 அல்லது ChAdOx1 nCoV-19 என்று அழைக்கப்படும் இந்த வைரஸ் தடுப்பு மருந்து, சிம்பான்சி குரங்குகளில் நோய்த்தொற்று ஏற்படுத்தும் சாதாரண சளி வைரசின் பலவீனமாக்கப்பட்ட வடிவத்திலிருந்து உருவாக்கப்பட்டது.

இந்த சிம்பான்சி குரங்கு சளி வைரசை, மரபணு ரீதியாக மாற்றி, அதில் மனித செல்களுக்குள் நுழைய கொரோனா வைரஸ் பயன்படுத்தும் ஸ்பைக் புரதம் சேர்க்கப்பட்டது. இந்த தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட மனித உடல், மீண்டும் கொரோனா வைரஸ் நுழையும் போது அதை தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த தடுப்பு மருந்து தொடர்பான சோதனை முடிவுகள் ஒரு மருந்தக ஆய்விதழில் விரைவில் வெளியிடப்படும் என்று பைனான்சியல் டைம்ஸ் தெரிவிக்கிறது.

இதற்கிடையில், தங்கள் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்து அவசரகால பயன்பாட்டுக்காக வருகிற ஜனவரி மாதத்தில் கிடைக்கும் என ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது என்று லைவ்மின்ட் இணையதளம் தெரிவிக்கிறது. பாதுகாப்பு பிரச்சனைகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட அவற்றின் மருந்து சோதனை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

பீகார் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் பீகார் மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் என்று பாஜக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது சர்ச்சைக்குள்ளாகியது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தடுப்பூசி – பாஜகவின் பீகார் தேர்தல் வாக்குறுதியும் உண்மை நிலவரமும்

அதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தமிழ்நாட்டில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பு மருந்து போடப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்