Aran Sei

கொரோனா நோய் பரப்பும் கூடாரமாக ‘ஓயாமரி’ மின் மயானம்

திருச்சியில் கொரோனா பாதுகாப்பு உடைகளை மயானத்தின் வெளியே வீசி செல்வதாலும், தொற்றால் இறந்தவர்களின் உடல்கள் காக்க வைக்கப்படுவதாலும் கொரோனா பரவும் என்ற  அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.

திருச்சியில் மாநகராட்சிக்கு சொந்தமாக காவிரி கரை ஓரத்தில் உள்ள ஓயாமரி, உறையூர் கோணக்கரை, கருமண்டபம் ஆகிய மூன்று இடங்களில் மின் மயானங்கள் உள்ளன. தினமும் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் வந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்கள், விபத்துகளில் இறந்தவர்களின் உடல்கள் உட்பட  நாளொன்றுக்கு 25-க்கும் மேற்பட்ட  உடல்கள் , இந்த மின் மயானங்களில் எரியூட்டப்பட்டு, தகனம் செய்யப்படுகின்றது.

காவிரிக் கரையோரத்தில் உள்ள ஓயாமாரி சுடுகாட்டிற்கு ,  திருச்சி மாநகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து சடலங்களை எரிக்கவும் புதைக்கவும் வருகிறார்கள். நாள்தோறும் 8 முதல் 10 சடலங்கள் எரியூட்டப் படுகின்றன.

இங்குள்ள எரிவாயு தகன மேடையை பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வந்த ‘பைரவ்’ என்ற தொண்டு நிறுவனத்தின் ஒப்பந்தம்  10 மாதங்களுக்கு முன்பாகவே காலாவதியாகி விட்டது. அதையடுத்து மாநகராட்சி மூலமே சடலங்கள் எரியூட்டப்பட்டு வருகின்றன. ஒரு சடலத்தை எரியூட்டப்பட ரூ.1,500 கட்டணம் பெறுகிறார்கள்.

இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக தகனம் செய்யும் ஊழியர்கள் பாதுகாப்பு உடை அணிந்து தகனம் செய்ய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியிருக்கிறது.  ஆனால் கடந்த சில நாட்களாக சடலங்களை குறிப்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் சடலங்களை மூன்று மணி நேரம் முதல் நான்கு மணி நேரம் வரை காக்க வைத்து, பின்னர் உடல் தகனம் செய்யப்படுகிறது.

மேலும், தொற்று பாதித்து இறந்தவர்களின்  உடல்களை 108 ஆம்புலன்சில் கொண்டுவரும் மாநகராட்சி பணியாளர்கள் தாங்கள்  பயன்படுத்திய பிபிஇ கிட் (PPE Kit)  எனப்படும் கவச உடைகளை தகனம் செய்யும் இடத்தின் அருகிலேயே வீசிவிட்டு செல்கின்றனர்.

அவை முறையாக எரிக்கப்பட்டு அழிக்கப்படவேண்டும். ஆனால் தொற்று பரவும் அபாயம் தெரிந்தும் கவச உடைகளை, பொது வெளியில் வீசி செல்வது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமீப காலங்களில் திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி ஊழியர்களின் இந்த அலட்சியப் போக்கால் ஓயாமரி சுடுகாட்டிற்கு வரும் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று பரவ வாய்ப்பிருக்கிறது. மேலும் ஓயாமரி மின்மயானத்தில் எவ்வித நோய் தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், அறிவிப்பு கூட வைக்காமலும் கொரோனா தொற்றுக்கு வழி வகுக்கும் மாநகராட்சி அதிகாரிகள் இதற்கு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் குணா அவர்களிடம் அரண்செய் பேசிய போது, “ஒரு முக கவசத்தைக்கூட எப்படி அப்புறப்படுத்த வேண்டும் என்று விதிமுறைகள் இருக்கிறது. அதை மக்கள் சரியாக பின்பற்றுவதில்லை. முதலில் அரசாங்கத்திடம் வருவோம். இந்த கொரோனா தொற்று காலத்தில் எத்தனையோ சுகாதார நடவடிக்கைகளை செய்ய சொல்கிறது அரசாங்கம்.

ஆனால் சுகாதார பணியாளர்களும், மருத்துவமனை ஊழியர்களும் பிபிஇ கிட்டை எப்படி அப்புறப்படுத்த வேண்டும் என்று ஒரு விதிமுறைகளை அவர்களுக்கு சொல்லவில்லையா? இல்லை அது முறையாக கண்காணிக்கப்படுவதில்லையா? என்று தெரியவில்லை.

அதை அப்புறப்படுத்த ஒரு இடத்தை ஒதுக்கி, எப்படி செய்ய வேண்டும் என்று அவர்களை பயிற்றுவித்திருக்க வேண்டும். இதை சுகாதார துறை அதிகாரிகள் தான் செய்திருக்க வேண்டும்.” என்றார்.

மயானத்தில் சடலங்கள் காக்க வைக்கப்படுவது குறித்து கேட்ட போது, “ஏற்கனவே கொரோனாவால் இறந்தவரின் ஒரு சடலம் எரியூட்டப்படுவதற்காக காத்திருக்கிறது என்றால், அடுத்து வரும் சுகாதார ஊழியர்கள் ஆம்புலன்ஸில் இருந்து, உடலை இறக்கி வைத்து விட்டு போய் விடுகிறார்கள். மூன்று, நான்கு சடலங்கள் எப்போதும் காத்திருக்கிறது.

ஆம்புலன்ஸ் ஊழியர்களும், மயானத்தில் இருக்கும் ஊழியர்களும் நம்மை போன்ற மனிதர்கள் தான். அவர்களும் பாவம் தான். இவற்றை ஒழுங்குப்படுத்த முறையான சுகாதார குழுவை மாநில அரசும், மாநகராட்சியும் சேர்ந்து ஏற்படுத்த வேண்டும்.” என்று கூறினார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்