தமிழகம் முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, மருத்துவமனை நிறுவனச் சட்டம் மற்றும் மாநில மருத்துவ சேவைகள் இயக்குநரகத்தின் நிர்வாக அதிகாரி உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை மிக, மிக அதிகமாக உள்ளது. தற்போது நிலவிவரும் இக்கட்டான சூழலில், படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டியது அத்தியாவசியமாகி உள்ளது. அதன் அடிப்படையில் மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும் தங்களிடம் உள்ள மொத்த படுக்கைகளில் குறைந்தபட்சம் 50 சதவீத படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்க வேண்டும்.” என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அவசரமில்லாத சாதாரண சிகிச்சைகளுக்கு உள்நோயாளிகளை அனுமதிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக மத்திய அரசு வெளியிட்டுள்ள நடைமுறைகளை அனைத்து மருத்துவமனைகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், “மருத்துவமனை நிர்வாகங்கள், கொரோனா சிகிச்சை தொடர்பான விவரங்களை மாவட்ட இணை சுகாதாரத் துறை இயக்குநரகத்திலோ அல்லது சென்னையில் உள்ள பொது சுகாதாரத் துறை இயக்குநரகத்திலோ நாள்தோறும் தெரிவிக்க வேண்டும். கொரோனா சிகிச்சைகளுக்காக தனியார் மருத்துவமனைகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை மாவட்ட இணை சுகாதாரத் துறை இயக்குநர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.