Aran Sei

இலங்கையில் எரியூட்டப்படும் உடல்கள் – இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம்

லங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த இஸ்லாமியர்களின் உடலை வலுக்கட்டாயமாக எரியூட்டுவது கண்டனத்திற்குரியது என்றும் சிறுபான்மை மக்களின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்பிடிஐ) வலியுறுத்தியுள்ளது.

“ஒருவர் கொரோனா தொற்றால் இறந்தாலோ, இல்லை கொரோனாவால் இறந்ததாகச் சந்தேகப்படப்பட்டாலோ, அவரின் சடலத்தைத் தகனம் செய்யப்படும்.” என்று இலங்கை சுகாதாரத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளதாக, கடந்த ஏப்ரல் 12-ஆம்தேதி ‘தி இந்து’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்களை, “அடக்கம் செய்யலாம் அல்லது தகனம் செய்யலாம்.” என்று உலகச் சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

பிரான்ஸ் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பயங்கரவாதத்தின் பின்புலம்

இதுதொடர்பாக, நேற்று (நவம்பர் 5) எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலைக் கையாள்வது தொடர்பான உலகச் சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்களில் கூட இத்தகைய எரியூட்டும் வழிகாட்டுதல்கள் இல்லை என்றும், இலங்கை அரசின் இத்தகைய சிறுபான்மை மக்களுக்கு எதிரான விரோத நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.

“ஒரு முஸ்லிம் மரணித்தால் குளிப்பாட்டுவது, உடலைத் துணியால் போர்த்துவது, இறுதித் தொழுகை நடத்துவது, அடக்கம் செய்வது என்பது கட்டாய கடமையாகும் என்கிறபோது, கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த இஸ்லாமியரின் உடலை குறைந்த பட்சம் இறுதித் தொழுகை நடத்தி அடக்கம் செய்யக்கூட அனுமதிக்காமல்  உடலை எரியூட்டுவது என்பது மத உரிமைகளை மறுக்கும் அதேவேளையில் மனித உரிமைக்கு எதிரான நடவடிக்கையாகும்.” என்று கண்டித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் இஸ்லாமிய வெறுப்புணர்வு

இஸ்லாமியர்கள் மட்டுமின்றி கிறிஸ்தவர்களும் இறந்த உடல்களை தங்கள் மத வழக்கப்படி அடக்கம்தான் செய்து வருகின்றனர். இலங்கை அரசின் இத்தகைய நடவடிக்கை காரணமாக அவர்களும் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

”இத்தகைய நெருக்கடியை நீக்க வலியுறுத்தி, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்தும், இலங்கை அரசு அரசியல் காரணங்களுக்காகக் கோரிக்கையைச் செவிமடுக்க முன்வரவில்லை என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.” என்று மாநில தலைவர் நெல்லை முபாரக், அறிக்கையில் மேற்கோள்காட்டியுள்ளார்.

இதுதொடர்பாக இறந்த உடலில் இருந்து வைரஸ் வெளியேறி நோய்ப் பரவலுக்கு வழிவகுக்கும் என்ற இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கும் உயிரியல் காரணங்கள் தவறானவை எனச் சர்வதேச அளவிலான மருத்துவர்களின், உயிரியல் வல்லுநர்களின் கூற்றுகள் தெரிவிக்கின்றன என்று அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

’முஸ்லீம்கள் மீது வெறுப்பை பரப்புவதா?’- உச்சநீதி மன்றம் கேள்வி

சர்வதேச அளவில் மரணித்தவர்களின் உடல்கள் அதிகளவில் மண்ணில்தான் அடக்கம் செய்யப்படுகின்றன என்றும், ”கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களும் அவ்வாறே அடக்கம் செய்யப்படுகின்றன. எங்கும் எரியூட்டப்படுவதில்லை.” என்று நெல்லை முபாரக் கூறியுள்ளார்.

ஆகவே, தவறான உயிரியல் காரணங்களை முன்வைத்து, இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் உடல்களை எரியூட்டுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளவர்,” உடல் அடக்கம் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் அனைத்து மத உரிமைகளும் பாதுகாக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

இஸ்லாமியர்களுக்கு எதிராக வதந்தி பரப்பிய தொலைக்காட்சி – தோலுரித்த ALT news

இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மே 15 தேதி, இந்திய இலங்கை தூதருக்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாகக் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

“அதன் பின்னரும் கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி மறுத்து எரியூட்டும் நிகழ்வுகள் தொடர்வதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது கவலை அளிக்கிறது. ஆகவே, சிறுபான்மை மக்களின் உடல் அடக்கம் உட்பட அனைத்து மத உரிமைகளும் பாதுகாக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று இலங்கை அரசை எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக மாநில நெல்லை முபாரக் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இறுதியாக, ”இலங்கை அரசின் இத்தகைய இனவாத ரீதியிலான நடவடிக்கையைக் கண்டித்து, நாளை (நவ.06) காலை 11 மணிக்கு, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் தலைமையில், சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று மாலை 4.30 மணி அளவில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இலங்கை தூதரகத்தின் முன்பு, ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமை வகித்துள்ளார்.

டெல்லி வன்முறை : இசுலாமியர்களுக்கு எதிராக போலீஸ் பாரபட்சம்

கடந்த சில ஆண்டுகளாகவே, இலங்கையில் உள்ள சிங்கள-பௌத்த அமைப்புகளும், பிரதமர் ராஜபக்‌சேவின் ஆதரவு அமைப்புகளும் பசுவதைச் சட்டத்தை அமல்படுத்த கோரிக்கை வைத்து வந்துள்ளனர். மேலும் கடந்த செப்டம்பர் மாதத்தில், இலங்கையில் உள்ள இந்து மத அமைப்பான சிவசேனாவும் சில பௌத்த மத அமைப்புகளும் பசுவதை சட்டத்தை அமல்படுத்தக் கோரி போராட்டங்கள் நடத்தி வந்துள்ளனர் என்று கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி, ‘தி இந்து’ இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது.

செப்டம்பர் 8-ஆம் தேதி, பிரதமர் ராஜபக்‌சே பசுவதைச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளார். அதற்கு ஆளும் கட்சியான அவரின் இலங்கை பொதுஜன முன்னணிக் கட்சியினர், ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து அமைச்சர்களின் ஒப்புதலுடன் அச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ‘தி வயர்’ தெரிவித்துள்ளது.

இலங்கை மக்கள் தொகை 70 சதவீதம் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களையும், 10 சதவீதம் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்களையும் கொண்டது. மற்றவர்கள் கிருஸ்துவர்களும் இந்துக்களும். இதில் முஸ்லிம்கள், கிருத்துவர்கள், இந்து மதத்தில் சில வகுப்பினர் மட்டுமே மாட்டுக்கறி உண்பவர்கள் என்று ‘தி இந்து’ குறிப்பிட்டுள்ளது.

மேலும், பசுவதை தடுப்புச் சட்டம் முஸ்லிம்களை நேரடியாதத் தாக்கக்கூடியதாக உள்ளதாகப் பலர் அரசுக்குக் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்