Aran Sei

பிரசவத்துக்குப் பின் எதிர்கொள்ளும் மன நலப் பிரச்னைகள் – தீர்வுகள்

Photo Credit : womensmentalhealth

தாய்மையடைதல் பெண்களுக்கு மிக முக்கியமான கட்டம். இக்காலகட்டத்தில் அவர்கள் உடலளவிலும், மனதளவிலும் பல மாறுதல்களைச் சந்திக்க நேரிடும். குழந்தையைப் பிரசவிக்கும் வரைதான் என்றில்லை. பிரசவத்துக்குப் பின்பும் அவர்களுக்கு மன நலம் சார்ந்த பிரச்னைகள் வரலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். என்ன மாதிரியான பிரச்னைகளை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும் என்றும், அதற்கான மருத்துவத் தீர்வு குறித்தும் அரண்செய்க்காக உளவியல் மருத்துவர் ஜெயக்குமாரிடம் பேசினோம்.

“குழந்தை பிறந்து 4-6 வாரங்களுக்குள் 30 – 75 சதவிகிதப் பெண்களுக்கு baby blues எனும் பிரச்சினை ஏற்படலாம். இலேசான சோர்வு, சோகம், அழுகை, குழப்ப நிலை ஆகியவை இதன் தன்மையாகும். பிரசவத்துக்குப் பிறகு நிகழும் ஹார்மோன்களின் திடீர் மாற்றங்களின் விளைவாக இப்பிரச்சினை ஏற்படுகிறது. இது இயல்பான பிரச்சினை என்பதால் இதற்கு மருந்து, மாத்திரைகள் தேவையில்லை. கவுன்சிலிங்கே போதுமானது.” என்கிறார்.

இரண்டு வாரங்களுக்கும் மேல் இப்பிரச்சினை தொடர்கிறது என்றால் அப்பெண்ணுக்கு postpartum depression இருக்கிறதா? எனப் பரிசோதிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

“பிரசவத்துக்குப் பிறகு 3-6 மாதக் காலங்களில் 10 – 15 சதவிகிதப் பெண்களுக்கு postpartum depression ஏற்படலாம். அதைக் கண்டறிந்து முறையான சிகிச்சை வழங்காமல் விட்டால் அது தீவிரத் தன்மையை நோக்கி நகர்ந்து விடும். ஆண்டுக்கணக்காகக் கூட இப்பிரச்சினை நீடிக்க வாய்ப்பிருக்கிறது. இப்பிரச்சினைக்கு ஆட்பட்டவருக்கு மன அழுத்தம், கவலை ஆகியவை மிகத்தீவிரமாக இருக்கும். தங்களது குழந்தையை ஏதாவது செய்து விடுவோமோ? என்கிற பயம் கூட வரலாம். குழந்தையை ஏதாவது செய்வதற்கான எண்ணங்கள் கூட வந்து போகலாம். அப்படிப்பட்ட சூழலில் அவரிடமிருந்து குழந்தையைக் கண்காணிக்க வேண்டும். தற்கொலை எண்ணங்கள் கூட வரலாம் என்பதால் உடனடியாகத் தீர்வை நோக்கி நகர வேண்டும்.” என்கிறார்.

மேலும், “மகிழ்ச்சியின்மை, உணர்ச்சிகளை உணர முடியாமல் இருக்கும் நிலை ஆகியவை இப்பிரச்னையின் முக்கிய அறிகுறிகள். anhedonia எனும் in ability to feel plesure தன்மை இப்பிரச்னைக்கு உண்டு. மன நல மருத்துவத்தை நாடுவதே இதற்கான தீர்வு. மருந்து, மாத்திரைகள் மற்றும் கவுன்சிலிங் மூலம் இப்பிரச்னையிலிருந்து பாதிக்கப்பட்டவரை விடுவிக்க முடியும். இதிலேயே கொஞ்சம் அரிதாக postpartum psychosis எனும் பிரச்னை ஆயிரத்தில் ஒருவருக்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

தீவிர மனநோய்களுக்கான அறிகுறிகள் இப்பிரச்னையால் ஏற்படும். சீர்கெட்ட நம்பிக்கை, தனக்கு எதிராக எல்லோரும் செயல்படுகிறார்கள் என்பது போன்ற எதிர்மறையான எண்ணங்கள் ஏற்படலாம். hallucination எனும் காதில் குரல் கேட்கும் பிரச்சினைக்கும் ஆளாகலாம். அந்தக் குரல் குழந்தையைக் கொன்று விடு என்றும் சொல்லலாம். அதன் காரணமாக நூற்றில் 4 பேர் குழந்தையைக் கொல்வதற்கும், 5 பேர் தற்கொலை செய்துகொள்வதற்கும் வாய்ப்பிருப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிப்பது மட்டுமே இதற்கான தீர்வாக இருக்கும். மன நலப் பிரச்னைகளை நாம் பொருட்படுத்த வேண்டும். இல்லையென்றால் அதற்கு நாம் கொடுக்கும் விலை அதிகமாக இருக்கும்’ என்கிறார் ஜெயக்குமார்

– கி.ச.திலீபன்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்