Aran Sei

கொரோனா – தனிமைப்படுத்துதலும், தகரம் அடிப்பதும் இனி பயன்தராது.

Image Credits: The Quint

கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளும், பகுதிகளிலும் எதன் அடிப்படையில் தகரம் கொண்டு அடைக்கப்படுகிறது என சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக, வழக்கறிஞர் பிரியங்கா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், தன்னுடைய கணவருக்கு அறிகுறியே இல்லாத கொரொனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் தங்களிடம் எங்கு சிகிச்சை பெற வேண்டும் என்ற விருப்பத்தைக் கூட கேட்காமல், தன் கணவரை  வலுக்கட்டாயமாக சிகிச்சை மையத்திற்கு அழைத்து சென்றதாக குற்றம் சாட்டி உள்ளார்.

தனது கணவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட மையத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்றும், தனிமனித இடைவெளி கூடப் பின்பற்றபடவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

தன் கணவரை சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் சென்ற பின் அவரது வீட்டை தகரம் வைத்து அடைத்தாகவும் கூறியுள்ளார்.

அறிகுறி இல்லாத மற்றும் குறைவான அறிகுறியுடன் கொரொனா பாதிப்பு உள்ளவர்களை கொரொனா மையத்தில்தான் சிகிச்சை பெற வேண்டும் என்று கட்டாயப்படுத்த கூடாது எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் பிரியங்கா தனது மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, தனக்கு கொரோனா தொற்று பாதித்தபோது என் வீட்டின் முன் ஏன் தகரம் அடிக்கவில்லை என நீதிபதி சத்தியநாராயணன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசு மற்றும் மாநகராட்சிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தடுப்பை வைக்கும் நடைமுறை

ஒருவருக்கு கொரோனா தோற்று உறுதியாகிவிட்டது எனக் கண்டறிந்த தருணம், அவர்களின் முகவரி மற்றும் விவரங்கள் ஆய்வகத்திலிருந்தே மாநகராட்சியுடன் பகிரப்படுகின்றன. அதன்பிறகு, மாநகராட்சி பிரதிநிதிகள் வந்து, குடியிருப்பு முழுவதும் தகரத்தால் அடைகிறார்கள் என்று சிட்டிசன் மேட்டர்ஸில் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒரு தனி குடியிருப்பாக இருந்தால் தொற்றால் பாதிக்கப்பட்டவரின் குடும்பம் தனிமைப்படுத்துதலில் இருக்கும். அதுவே அது ஒரு அடுக்குமாடி குடியிருப்பாக இருக்கும் பட்சத்தில், அக்குடியிருப்பில் உள்ள மற்றவர்களும் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது.

பின்னர், அனைத்து வழிப்போக்கர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும், இந்த வீட்டில் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர் இருக்கிறார் என்பதை தெரியப்படுத்தும் வகையில், அடைக்கப்பட்ட தகரத்தின் மேலே அறிவிப்பு பதாகைகள் வைக்கப்படும்.

வீட்டில் தீ பிடித்தாலோ அல்லது மற்ற அவசர நிலை ஏற்பட்டாலோ அங்கிருந்து வெளியேறுவது சிக்கல் ஆகிவிடும் என்று சிட்டிசன் மேட்டர்சில் வெளியான கட்டுரையில் ஸ்ரீராம்  என்பவர் குறிப்பிடுகிறார். இதுபோன்று அசாதாரண சூழ்நிலைகள் ஏற்படுவது அரிது என்றாலும், இவை நடக்கவே நடக்காது என்று முற்றிலும் மறுத்துவிட முடியாது என்று அவர் கூறுகிறார்.

விதிகளை பின்பற்றாமல் சிலர் இருக்கக்கூடும் எனும் காரணத்தினால் மாநகராட்சி இந்த நடவடிக்கையை எடுத்திருக்கும். இருப்பினும், வேறு சில வகையான கண்காணிப்புகள், குறிப்பாக தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்த இந்த காலங்களில் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும் என்று அவர் கூறிள்ளார்.

சென்னை குடிமக்கள் மிகவும் பொறுமையாக இருக்கிறார்கள். இவ்வகை கட்டுப்பாடுகளை பொறுத்துக்கொள்கிறார்கள். பெங்களூரில் இப்படியான தடுப்புகளை அமைக்க எதிர்ப்புகள் எழுந்தன. அங்குள்ள குடிமக்கள் மாநகராட்சியை தடுப்புகளை அகற்றுவது மட்டுமல்லாமல் மன்னிப்பு கேட்கவும் கட்டாயப்படுத்தியுள்ளார்கள் என்றும் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டோரின் நிலை

பெயர் குறிப்பிட விரும்பாத வங்கி ஊழியர் ஒருவர் அரண்செய்யுடன் பேசியபோது “என் தந்தை முடி திருத்தும் வேலை செய்பவர். அவர் நியாயவிலை கடையில் பொருட்களை வாங்க சென்றபோது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம். எங்களது வீட்டை தகரத்தை வைத்து அடைத்தால் என் தந்தையால் அவரது கடையை நடத்த முடியாது. அவரிடம் முடி திருத்திக்கொள்ள யாரும் வரமாட்டார்கள். அதனால் அவர் கொரோனா சோதனைக்கு செல்வதற்கு மறுத்துவிட்டார்” என்று கூறினார்.

“அன்று மாலை என் தம்பிக்கும் தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறி தென்பட்டது. அதற்கு அடுத்த நாள் எனக்கும் என் தாயாருக்கும் பரவியது. தொடர்ச்சியாக நாங்கள் பாதிக்கப்பட்டதற்கு பிறகும், கொரோனா பரிசோதனைக்கு செல்ல கூடாது என்பதில் என் தந்தை உறுதியாக இருந்தார். அவர் எங்களையும் சோதனைக்கு செல்ல அனுமதிக்கவில்லை. மீறி நாங்கள் பரிசோதனைக்கு செல்வதாக இருந்தால் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார்” என்று அவர் தெரிவித்தார்.

“அவர்கள் தனிமைப்படுத்தினால் கூட பரவாயில்லை வீட்டில் தகரம் அடித்து விடுவார்கள். இதனால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அரசு வழங்கும் நிவாரண தொகையும் மிகவும் சொற்பமானது. என்னை போல் மாத சம்பளதாரர்கள் கூட பரவாயில்லை. முறைசாரா தொழிலாளர்களின் நிலை மிகவும் மோசம். இது போல் சோதனை செய்து கொள்ளாத பல பேர் இருக்கிறார்கள். இப்போது இதில் சிக்கியுள்ளவர்கள் கூட கட்டாயத்தின் பெயரில் சோதனை செய்துகொண்டவர்கள் தான்” என்கிறார்.

“நாங்கள் அனைவரும் எங்களது குடும்ப மருத்துவரிடம் இருந்து சிகிச்சை பெற்று, 5-6 நாட்களில் குணமடைந்து விட்டோம். இரண்டு வாரம் சுயமாக தனிமைப்படுத்திக் கொண்டோம். அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், சரியான சிகிச்சை அளித்தால் நான்றாக இருக்கும்,” என்கிறார் அந்த வங்கி ஊழியர்.

மருத்துவரின் பார்வை

கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ரகுபதி அரண்செய்யுடன் பேசியபோது “தனிமை படுத்துதல் தேவைப்படும். ஆனால் தகரம் அடிப்பது வன்முறைதான். கொரோனா தொற்று ஏற்படும் அனைவரது வீட்டிலும் இந்த தகரம் அடிக்கப்படுகிறதா என்பதை பார்க்கவேண்டும். மந்திரிகள், அமைச்சர்கள் அளவுக்கு கூட செல்ல வேண்டாம், சாதாரணமாக குரலை உயர்த்தி பேசும் அரசு ஊழியரின் இல்லத்தில் கூட தகரம் அடிக்க மாட்டார்கள். சமூகத்தில் மேலடுக்கில் இருப்பவர்களின் வீட்டிலும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படாது. ஏமாந்தவர்களின் வீட்டில் தான் தகரம் அடிக்கப்படுகிறது” என்று கூறினார்.

“மருத்துவரீதியாகவும் தகரம் அடிக்கும் அளவிற்கு தனிமைப்படுத்துதலை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. இயல்பிலேயே அரசும் பொதுமக்களும் அவ்வளவு விழிப்புணர்வுடன் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை. ஆரம்ப காலத்தில் இதற்கு சமமாக, கிராமத்தில் விளையாடிக்கொண்டிருந்தவர்களை ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணித்தார்கள். அதுவும் வன்முறை தான்” என்றார்.

“இவை அனைத்தும் ஒருவகை உரிமை மீறல்தான். முன் இருந்தது போல் இப்போது மருத்துவமனைகளில் அனைவரையும் சேர்த்துக்கொள்வதில்லை. பல விதிமுறைகளை தளர்வு செய்து உள்ளார்கள்” என்கிறார் ரகுபதி.

“கொரோனா பேரிடரை நாம் தட்டையாக புரிந்துகொள்ள கூடாது. ஆரம்பத்திலேயே சரியான தனிமைப்படுத்துதல் நடவடிக்கை எடுத்திருந்தால்  சமூகத்துக்கு அது பரவியிருக்காது. ஆரம்பத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்களை ஒழுங்காக கண்காணித்து தனிமை படுத்தியிருக்க வேண்டும். பொது கூட்டங்களை தவிர்த்திருக்க வேண்டும்” என்று கூறினார்.

“இப்போது தொற்று சமூக பரவலாக மாறியிருக்கும் காலகட்டத்தில் தனிமைப்படுத்துதல் செல்லுபடி ஆகாது. இப்போது சிகிச்சை தான் அளிக்க முடியும். தொற்றின் அறிகுறி இருந்தால், மரண அபாயம் இருக்கிறதா என்பதை கண்டறிந்து அவர்களை மேற்பார்வையில் வைக்க வேண்டும். சிகிச்சை தேவைப்பட்டால் 3-ம் கட்ட சிகிச்சை அளிக்க வேண்டும். அதிலும் பொது சிகிச்சை அளிக்கவேண்டுமா அல்லது தீவிர சிகிச்சை அளிக்கவேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டும். இப்போது உள்ளநிலை அதுதான்” என்று மருத்துவர் ரகுபதி கூறினார்.

“அறிவியல் பூர்வமாக இதற்கு மேல் தனிமைப்படுத்துதலை பின்பற்றிலும் பிரயோஜனம் இல்லை. ஏனென்றால் இனிமேல் உதவ போவது 3-ம் நோய் எதிர்ப்பு சக்தி தான் (3rd immunity). அதாவது, பரவலாக தோற்று ஏற்படும் பொது ஒரு சமூகமே அதற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்ளும். இனி நம் சமூகமே 3-ம் நோய் எதிர்ப்பு சக்தியை நோக்கி நகரும் நிலைமையில் உள்ளது. இந்த நிலையில் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்றால் தொற்று பரவட்டும் என்று விட்டுவிடுவது நல்லது” என்கிறார் மருத்துவர்.

“மருத்துவ சமூகமும் சுகாதாரத்துறையும் ஏற்கனவே இந்த முடிவை எடுத்துவிட்டார்கள். நோயோடு வாழ பழகவேண்டும் என்ற எண்ணத்திற்கு அவர்கள் சென்றுவிட்டார்கள். அவர்களே இந்த முடிவுக்கு வந்ததற்கு பிறகு கதவில் தகரம் அடிப்பது என்பது முற்றிலும் நியாயமற்றது. இதன் மூலம் தகரம் அடிப்பவர்க்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தலாமேயொழிய நோயை கட்டுப்படுத்த முடியாது,” என்று கூறுகிறார் மருத்துவர் ரகுபதி.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்