Aran Sei

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் பின்னடைவா?

கொரோனா பொதுமுடக்கத்தின் காரணமாக கடந்த ஆறுமாத காலத்தில், உலக அளவில் தடுப்பூசிகள் எடுத்துக்கொள்ளப்படும் விகிதம் குறைந்துள்ளதாக கேட்ஸ் ஃபவுண்டேசன் தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் தடுப்பூசி பயன்பாட்டில் 20 ஆண்டுகளுக்கு உலகம் பின் தங்கி விட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

தடுப்பூசி குறித்து அதிக அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மையானது. கேட்ஸ் ஃபவுண்டேசன் அறிக்கையைத் தாண்டி, தடுப்பூசி வழங்கப்பட்ட விகிதத்தில் தமிழகத்தின் நிலை என்னவாக இருக்கிறது?
“தமிழ்நாட்டில் கடந்த ஆறு மாதங்களில் தடுப்பூசி பயன்பாடு குறித்த அதிகாரப்பூர்வ ஆய்வு முடிவுகள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. ஆனா 20-30 சதவிகித அளவில் தடுப்பூசி பயன்பாடு குறைந்துள்ளாதாக தனியார் நிறுவன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.” என்கிறார் மருத்துவர் எழிலன். 

“குழந்தை பிறந்து 6-வது வாரத்தில் போடக்கூடிய போலியோ தடுப்பூசி, 10-வது வாரத்தில் போடக்கூடிய முத்தடுப்பான் தடுப்பூசி மற்றும் 14-வது வாரத்தில் போடக்கூடிய  காசநோய் தடுப்பூசி ஆகியவற்றின் பயன்பாட்டில் எந்த விதக் குறைவும் இல்லை. மக்கள் அதிக விழிப்புணர்வுடனே இருக்கின்றனர். ஆனால் 9-வது மாதம் போடக்கூடிய தட்டம்மை தடுப்பூசியின் பயன்பாட்டு விகிதம்தான்  23.7 சதவிகித அளவு குறைந்திருக்கிறது. மேலும், 15-வது மாதத்தில் போடக்கூடிய ரூபெல்லா தடுப்பூசியின் பயன்பாட்டு விகிதமும் குறிப்பிட்ட அளவில் குறைந்திருக்கிறது” என்கிறார். 

கொரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் கொரோனா தவிர்த்து பிற சிகிச்சைகளுக்காக மருத்துவமனை செல்வது குறைந்ததே இதற்கு முக்கியக் காரணம் என்கிறார். 

“ஒவ்வொரு தடுப்பூசியையும் சரியான தட்பவெப்பநிலையில் வைத்துப் பராமரிக்க வேண்டியிருக்கிறது. இந்த அவசரநிலைக் காலத்தில் தடுப்பூசி பராமரிப்பதற்கான வாய்ப்பு குறைந்து போனதும் ஒரு காரணம். பொதுவாகவே குழந்தைக்கு ஆறு மாதங்களைக் கடந்து விட்டாலே தடுப்பூசி போடுவது பற்றியான கவனம் குறைந்து விடுகிறது. வட இந்தியாவோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மிகப்பெரிய அளவில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், கொரோனா அச்சம் காரணமாகவே குழந்தைகளை மருத்துவமனைகளுக்குக் கூட்டி வர பெற்றோர் தயங்குகின்றனர். நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பு போன்ற பிரச்னைகளுக்கு ஆளானவர்கள் கூட மருத்துவமனைக்குச் செல்வதில்லை. 

தட்டம்மை தடுப்பூசியும், 15வது மாதத்தில் போடக்கூடிய ரூபெல்லா தடுப்பூசியும் மிக முக்கியமானது. தட்டம்மை தடுப்பூசிதான் வளரிளம் பருவத்தில் தட்டம்மை நோய்த்தொற்றிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கிறது. மேலும் ரூபெல்லா தடுப்பூசி வழியாக செலுத்தப்படும் ஜெர்மன் தட்டம்மை, கர்ப்பப்பை பிரச்னைகளை ஏற்படுத்தும் நோய்த்தொற்றிலிருந்து காக்கிறது. இந்த இரண்டு தடுப்பூசிகளும் அவசியம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டே ஆக வேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் அவர்கள் பெரும் துயரை சந்திக்க நேரும்” என்கிறார். 

கொரோனா தொற்றுப்பரவல் ஏற்பட்ட இந்த நெருக்கடியான காலத்தில் அரசு தடுப்பூசி விசயத்தில் கவனம் செலுத்தாததை குற்றச்சாட்டாக வைக்காலாமா? 

“கொரோனா காலத்தில் மருத்துவத் துறை மிகவும் நெருக்கடியான சூழலில் இயங்கி வருகிறது என்பது உண்மைதான். உதாரணத்துக்கு நானே நாளொன்றுக்கு 40-50 கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கிறேன். மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் என அனைவருமே கடுமையான பணி நெருக்கடியில்தான் இருக்கிறார்கள். இந்த நெருக்கடிக் காலத்தில் தலைமை சரியான முடிவுகளை எடுக்காததே இதற்குக் காரணம். 

தற்போது, சமூக இடைவெளியைக் கடைபிடித்து, பாதுகாப்புக் கவசங்களோடு தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டிருக்கிறது. ஆனால் இந்நடவடிக்கையை பொதுமுடக்கத்தின் தொடக்கத்திலேயே மேற்கொண்டிருக்கலாம்.” என்கிறார் எழிலன். 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்