Aran Sei

`சித்த மருத்துவத்திற்கு மத்திய, மாநில அரசு என்ன செய்தது?’- உச்ச நீதிமன்றம்

சித்த மருத்துவர் தணிகாசலம் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கடந்த மே மாதம், சித்த மருத்துவர் தணிகாசலம் சமூக ஊடகங்களில் கொரோனா மருந்து குறித்தும், முதல்வர் குறித்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், கொரோனா தொற்றைத் தடுக்க தான் மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், அதனை தமிழக அரசு புறக்கணிப்பதாகவும் கூறி, முதலமைச்சருக்கு எதிராக தணிகாசலம் பேசியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் தணிகாசலத்தைக் கடந்த மே மாதம் 6ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், கொரோனா சிகிச்சை செய்வதாகக் கூறி மக்களிடம்  பணம் பறித்ததாக அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டது.

இதையடுத்து, தனது மகன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி தணிகாசலத்தின்  தந்தை கலியபெருமாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

அந்த விசாரணையில், இந்தியாவில் சித்த மருத்துவத்தை ஊக்குவிக்காதது குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மற்ற மருத்துவ முறைகளைப் போன்று இந்திய மருத்துவ முறையையும் சமமாக ஊக்கவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்நிலையில் இன்று, இந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு வழங்கியுள்ளது. அதில், புழல் சிறையில் அடைக்கப்பட்ட சித்த மருத்துவர் தணிகாசலதின் குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலு, தணிக்காசலம் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இதுகுறித்து வழக்கறிஞர் கே.பாலுவிடம் அரண்செய் பேசிய போது, “சித்த மருத்துவத்தை வளர்க்க வேண்டும் என்று தணிகாசலம் கூறினார். அதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லாமல், சரியாக சட்ட விதிகளைப் பண்பற்றாமல் வழக்கு போட்டார்கள். அதன் அடிப்படையில்தான் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை ரத்து செய்தது.” என்று கூறியுள்ளார்.

“சித்த மருத்துவத்தின் வளர்ச்சிக்கு என்ன என்ன செய்தீர்கள்? எத்தனை அதிகாரிகளை நியமித்திருக்கிறீர்கள்? எவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறீர்கள்? என்று மத்திய மற்றும் மாநில அரசிடம் பல கேள்விகளை உயர் நீதிமன்றம் கேட்டுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கண்டுபிடிக்கப்பட்ட மருத்திற்கான பேட்டர்ன் வாங்குவது போன்ற நடவடிக்கைகள் சட்டரீதியாக நடந்துகொண்டிருக்கிறது என்றும் அந்த வேலைகள் தொடரும் என்றும் உறுதிப்படக் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்