Aran Sei

காற்றில் பரவுமா கொரோனா? தெளிவில்லாத வழிகாட்டல்

Image Credits: Firstpost

மெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) கடந்த 18-ம் தேதி கொரோனா வைரஸ் பரவலுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டலை நிறுத்தி வைத்தது. திருத்தப்பட்ட வழிகாட்டலில் காற்று துகள்களின் மூலம் வைரஸ் பரவும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இத்திருத்தங்கள் அனைத்தும் இப்போது திரும்பப் பெறப்பட்டுள்ளன.

“இந்தப் பரிந்துரைகளில் முன்மொழியப்பட்ட மாற்றங்களின் வரைவு பதிப்பானது ஏஜென்சியின் அதிகாரபூர்வ வலைத்தளத்தில் பிழையாக வெளியிடப்பட்டது” என்று பழைய வழிகாட்டுதல்களைக் கொண்ட வலைத்தளத்தில் சி.டி.சி குறிப்பிட்டுள்ளது.

“தற்போது வைரஸின் காற்றுவழி பரவல் தொடர்பான அதன் பரிந்துரைகளைப் புதுப்பித்து வருகிறது” என்றும் “செயல்முறை முடிந்ததும் திருத்தப்பட்ட வழிகாட்டல்கள் வெளியிடப்படும்” என்றும் சி.டி.சி தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 18 அன்று தவறுதலாக வெளியான வழிகாட்டலில் சுவாசத் துளிகளின் மூலம் மட்டுமில்லாமல் காற்று மூலம் கூட வைரஸ் பரவும் என்று தெரிவிக்கப்பட்டது. மூன்று நாட்களுக்குப் பிறகு (செப்டம்பர் 21) நடந்த திருத்தத்தில் காற்று துகள்களை பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை.

இருமும்போது, தும்மும்போது, பேசும்போது வெளியாகும் துளிகள் மற்றும் துகள்கள் போலவே சுவாசிக்கும் போதும், பேசும் போதும், பாடும்போதும் இவ்வகை துளிகளும் துகள்களும் வெளியேறும் என்று 18-ம் தேதி வெளியான வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டது. ஆனால் செப்டம்பர் 21-ம் தேதி, சுவாசிக்கும்போதும், பாடும்போதும் இவ்வகை துளிகளும் துகள்களும் வெளியேறும் எனும் செய்தி அகற்றப்பட்டது.

இத்துகள்கள் மூக்கு, வாய், காற்றுப்பாதைகள் மற்றும் நுரையீரலுக்குள் சுவாசிக்கப்பட்டு தொற்றுநோயை ஏற்படுத்தும் என்று முன்னர் குறிப்பிடப்பட்டிருந்தது. இது வைரஸ் பரவலுக்கான முக்கிய காரணியாகக் கருதப்பட்டது. ஆனால் இப்போது, இத்துளிகள் அருகிலுள்ளவர்களின் வாயில் அல்லது மூக்கில் இறங்கலாம் அல்லது நுரையீரலில் நுழையலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இத்துளிகளும் துகள்களும் காற்றில் இடைநிறுத்தப்பட்டு மற்றவர்களால் உள்ளிழுக்கப்படலாம் என்றும் 6 அடி தூரம்வரை இது பரவக்கூடும் என்றும் முன்னர் குறிப்பிடப்பட்டது. இப்போது, காற்று இடைநிறுத்தல் பற்றியும், வைரஸின் தொலை தூரப் பயணத்தைப் பற்றியும் எவ்வித தகவலும் இல்லை.

சுவாசிக்கும்போது உள்ளிழுக்கக்கூடிய துகள்கள் “வைரஸ் பரவுவதற்கான முக்கிய வழி” என்று கருதுவது ஏரோசோல்கள் போன்ற சிறிய துகள்கள் ஒப்பீட்டளவில் சிறிய பங்கைக் கொண்டுள்ளன என்றாகிவிடும். எனவே, வைரஸ் பரவும் வெவ்வேறு வழிகளைப் பற்றிய, ஒப்பீட்டு முக்கியத்துவம் குறித்த தெளிவின்மை காரணமாகச் செப்டம்பர் 18-ம் தேதி வெளியான வழிகாட்டுதல்கள் நீக்கப்பட்டிருக்கலாம் என்று தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்