Aran Sei

கொரோனா மன அழுத்தமா, இருதய நோயா? – நிபுணரின் ஆலோசனை

Credit : https://commons.wikimedia.org

தீவிரமான இதயத் துடிப்பை இருதயச் செயலிழப்பு அல்லது முக்கிய இருதயப் பிரச்சினை என்று நினைத்து காணொலி உரையாடல் மூலம் சிறப்பு மருத்துவர்களை மக்கள் அணுகிவருகிறார்கள்.

விரிவான பரிசோதனைகள் மற்றும் ஸ்கேன்கள் மட்டுமே பிரச்சினையின் உண்மையான காரணத்தைக் கண்டறிய மருத்துவர்களுக்கு உதவும் என்று  இருதயநோய் நிபுணர் எச்சரித்துள்ளார். இந்தத் தகவலை தி இந்து வெளியிட்டுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனைகளின் மூத்த ஆலோசகரும் இருதயநோய் நிபுணருமான பி.ஹைக்ரிவ் ராவ், சத்தீஸ்கரைச் சேர்ந்த 25 வயது இளஞரின் ‘இருதயப் படபடப்பு நோய்’ புகாரை மேற்கோள் காட்டி பின்வருமாறு கூறியுள்ளார்.

“அவருக்கு முன்னதாக இருதயப் பிரச்சினைகள் எதுவும் இல்லை, ஆரோக்கியமாக இருந்துள்ளார். பல்வேறு காரணங்களால் தூண்டப்பட்ட மன அழுத்தமும் பதற்றமும் ஓர் அசாதாரண இதயத் துடிப்பின் உணர்வைத் தரக்கூடும்.

இந்த இளைஞனின் வாழ்க்கை முறை புதிய இயல்பைக் காட்டுகிறது. அவர் வீட்டிலிருந்து வேலை செய்கிறார், எப்போதாவது வெளியே செல்கிறார். சமூகமயமாக்கலில் இருந்து விலகி இணையத்தில் கொரோனா தொடர்பான புள்ளிவிவரங்களைப் படிக்கிறார். அவருக்கு இருதயப் பிரச்சினை இல்லை என்பதை உணர எனக்கு அதிக நேரம் எடுக்கவில்லை. அவரது கவலைக்கு ஆறுதலும் சில நாட்களுக்கு மருந்தும் மட்டுமே தேவைப்பட்டது.

ஆலோசனைக்காக வரும்போது, நோயாளிகள் இருதயப் பிரச்சினைகளால் உண்மையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா அல்லது அது மன அழுத்தம் மற்றும் பதற்றத்தால் ஏற்பட்ட அச்சமா என்பதை அறிய மருத்துவர்கள் அவர்களின் பின்னணி, வாழ்க்கை முறை, உயிரணுக்கள் மற்றும் ஈசிஜி அறிக்கைகள் பற்றிய தகவல்களைச் சரிபார்க்கிறார்கள். மருத்துவரை அணுகுவது இந்த அசாதாரண இருதயத் துடிப்பின் பின்னணியில் உள்ள காரணத்தை அறிய உதவுகிறது.

வேலை பாதுகாப்பின்மை, நிச்சயமற்ற எதிர்காலம், நிதி நெருக்கடி, கொரோனா தொற்று குறித்து அச்சம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற சிக்கல்கள் மக்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கும். மனநல மருத்துவர்களின் ஆலோசனை இதுபோன்ற பதற்றத்தால் தூண்டப்படும் பிரச்சினைகளுக்கு ஆளானவர்களுக்கு உதவும்.

கொரோனா நோயாளிகளில் இரண்டு பிரிவினர் உண்மையிலேயே இருதயப் பிரச்சினைகளால் பாதிக்கப்படலாம். முன்கூட்டியே இருதயப் பிரச்சினை உள்ளவர்கள் ஒரு வகை, கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்ட உடன் அவர்களின் இருதயப் பிரச்சினை மேலும் தீவிரமடையும். இரண்டாவது தொற்று நோய் வந்தபின் இருதயப் பிரச்சினைகளுக்கு ஆளாவார்கள்” இவ்வாறு இருதயநோய் நிபுணர் பி.ஹைக்ரிவ் ராவ்  கூறியுள்ளார்.

இது குறித்து அரண்செய் யுடன் பேசிய தஞ்சாவூர் அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவர் அருணந்தி “கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு ரத்த உறைவுக் காலம் அதிகரிக்கும். இந்த உறைவால் இருதயப் பிரச்சினை ஏற்படலாம். ஆகையால் தமிழக அரசு மருத்துவமனை விதிமுறைகள்படி இரத்த உறைவைத் தடுக்கும் மருந்துகள் நோயாளிகளுக்கு அளிக்கப்படும்.

இருப்பினும், கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட இருதய நோயாளிகள், தெலங்கானாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் குணமடைந்துள்ளனர்” என கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்