Aran Sei

கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுவது சந்தேகம் – நிபுணர் குழு தலைவர்

Image Credits: Times Now

கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி தயாராகும் போது அது இந்தியாவில் உள்ள அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுமா என்பது சந்தேகம்தான் என்று இந்தத் தடுப்பு மருந்துக்கான மேற்பார்வை மற்றும் விநியோகத் திட்டமிடல் தலைவர் கூறியுள்ளார்.

தடுப்பூசியை இலவசமாக வழங்க முடியுமா முடியாதா என்பது தற்போது நடைபெற்றுவரும் மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகளைப் பொறுத்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“வரும் வாரங்களில், ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியைச் சோதிக்கும், சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா நடத்தும் தற்போதைய சோதனைகளின் (கட்டம் 3) தரவு கிடைக்கும்போதுதான் இது குறித்து தெளிவு ஏற்படும்,” என்று ஊடகவியலாளர்கள் சந்திப்பில் நிதி ஆயோக்கைச் சேர்ந்த தடுப்பு மருந்து நிபுணர் குழுத் தலைவர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.

“சோதனையின் வெற்றியையும் பிற மருந்துகளின் சோதனையையும் பொறுத்துதான் மருந்தின் தேவையான அளவையும் அது கிடைப்பதையும் தீர்மானிப்பார்கள். பின்னர் நிதியுதவி பற்றி விவாதிக்கலாம். அடுத்த மூன்று வாரங்களில் இதுகுறித்து தெளிவு ஏற்படும்,” என்றும் அவர் கூறியுள்ளார்.

“தடுப்பூசிகளை இலவசமாகக் கிடைக்கச் செய்வதில் ‘வளங்கள் ஒரு பிரச்சினையாக இருக்காது’ என்று தோன்றுகிறது,” என மருத்துவர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.

“ஆலோசனைகள் நடந்துகொண்டிருக்கின்றன; இதை நடைமுறைப்படுத்த நாங்கள் திட்டங்களை வகுக்கிறோம். தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமையிலும் அதன் இருப்பிலும் தேசிய நலனை மனதில் கொள்ளுமாறு நாங்கள் மாநிலங்களிடம் கோரிக்கை வைத்துள்ளோம்,” என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த வாரம் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, தடுப்புமருந்து தயாராகும் போது, மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் அது இலவசமாக வழங்கப்படும் என்று கூறினார். பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்காகப் பாஜக வெளியிட்ட அறிக்கையில் அவர்கள் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அங்குள்ள அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வாரியம் முழுவதும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரதாப் சாரங்கி புவனேஷ்வரில் கூறினார்.

அரசாங்கம் அதன் தேசிய நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவசமாகப் பல தடுப்பு மருந்துகளை வழங்கினாலும், தடுப்பூசியின் வளர்ச்சி தொடர்பான சிக்கலான சர்வதேச நிதி ஒப்பந்தங்களின் காரணமாக மத்திய அரசுக்கு உண்மையான செலவுகள் குறித்து நிச்சயமற்றதன்மை உள்ளது என்று ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

கிட்டத்தட்ட 180 நாடுகளை உள்ளடக்கிய காவி கோவாக்ஸ் அட்வான்ஸ் மார்க்கெட் கமிட்மென்ட் திட்டம், தடுப்பூசி தயாரானபின் உலகளவில் அது சமமாகப் பகிரப்படுவதை உறுதி செய்ய உதவும்.

இத்திட்டத்தின் கீழ், 2021-ம் ஆண்டில், 20 லட்சம் தடுப்பூசிகளைத் தயாரிக்க 20 லட்ச டாலர் தேவைப்படுகிறது. இதுவரை அனைத்து நாடுகளும் கிட்டத்தட்ட 10 லட்சம் டாலர் வழங்கியுள்ள நிலையில், அதிகமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்தத் திட்டத்திற்கான இந்தியாவின் நிதி ஒப்பந்தம் இன்னும் உறுதி ஆகவில்லை.

ஏழைகளுக்குத் தடுப்பூசி இலவசமாக வழங்கக்கூடும் அல்லது அது ரூ.120-140 வரை விற்பனை ஆகும் என்று அரசாங்க அதிகாரிகள் கூறியதாக ‘தி இந்து‘ செய்தி வெளியிட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்