Aran Sei

மருத்துவ ஊழியர்களுக்கு பாதுகாப்பு : புதிய மசோதா

Image Credits: The Hindu

கொரோனா தொற்றுக் காலத்தில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெருந்தொற்று நோய்கள் தடுப்பு திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. விவாதத்திற்கு பின் மாநிலங்களவையைத் தொடர்ந்து மக்களவையிலும் அம்மசோதா நிறைவேற்றப்பட்டது.

“இம்மசோதாவைக் குறித்து பரிந்துரைகளையும் கருத்துகளையும் கேட்கும்போது மத்தியப் பிரதேசம், திரிபுரா, கோவா மற்றும் இமாச்சலப் பிரதேசம் மாநிலங்கள் மட்டும் தான் ஆரம்பத்தில் பதிலளித்தன. இப்போது, மற்ற 10 மாநிலங்கள் கருத்துக்களை அனுப்பியுள்ளன, 14 மாநிலங்களின் பரிந்துரைகளையும் நாங்கள் பரிசீலிப்போம்,” என்று மத்திய சுகாதார அமைச்சர் மருத்துவர் ஹர்ஷ் வர்தன், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது கூறினார்.

“இப்பேரிடர் காலகட்டத்தில் நாம் அசாத்தியமான சூழ்நிலையை எதிர்கொள்கிறோம். வைரஸ் குறித்த தவறான புரிதல் காரணமாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்னணி சுகாதார ஊழியர்களுக்கு எதிராக பலர் பாகுபாட்டைக் காட்டுகிறார்கள். மருத்துவ ஊழியர்கள் முழு நாள் கொரோனாவுடன் போராடிவிட்டு வீடு திரும்பும்போதும் அவர்களை வீட்டுக்குள் அனுமதிக்காத நிலை கூட ஏற்பட்டுள்ளது. இது சுகாதார ஊழியர்களின் மன உறுதியைக் கணிசமாகக் குலைத்தது”.

“இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் ஏப்ரல் 22 அன்று தொழிலாளர்கள் மீதான தாக்குதல் அல்லது வன்முறையை, பிணையில் எடுக்கமுடியாத குற்றமாக மாற்றி நாங்கள் ஆணை பிறப்பித்தோம்” என்று அவர் கூறினார்.

“ஆகையால் நாடு முழுவதும் சுகாதார ஊழியர்களுக்கு எதிரான வன்முறை இப்போது குறைந்துள்ளது”

அரசாங்கம் இந்த மசோதாவை அவசரமாகக் கொண்டு வந்ததால் சில விதிகள் கவலைக்குரியதாக உள்ளன என்று காங்கிரஸின் எம்.பி ஆதிர் சவுத்ரி கூறியுள்ளார்.

இம்மசோதாவில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகள் என்று நிரூபிக்கப்படும் வரை அவர்களைக் குற்றவாளிகளாகக் கருதும் ஒரு  விதி உள்ளது. இது நாட்டின் குற்றவியல் சட்டத்தின் கொள்கைகளுக்கு  முற்றிலும் மாறானது என்று கூறி ஆதிர் சவுத்ரி இதனை எதிர்த்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்