Aran Sei

கொரோனா தொற்று அதிகரிப்பு: மீண்டும் அறிவிக்கப்படுமா பொதுமுடக்கம்?

Image Credits: The Indian Express

ற்றொரு பொதுமுடக்கத்தை தடுக்க கேரளா முடிந்தவரை முயற்சிக்கிறது. இருப்பினும், இதே வேகத்தில் கொரோனா தொற்று அதிகரித்தால், எங்களுக்கு வேறு வழிகள் இருக்காது, என்று கேரள சுகாதார துறை அமைச்சர் ஷைலாஜா கூறியுள்ளார்.

கொரோனா நிலைமையைப் பொருத்தவரை அரசு சவாலான நாட்களை எதிர்கொண்டு வருவதாகவும், நோய்க்கு எதிரான அனைத்து வழிமுறைகளையும் மக்கள் தொடர்ந்து பின்பற்றாமல் விட்டால் அரசு பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் கூறியுள்ளார்.

இத்தனை மாதங்கள் அரசால் நோய் பரவலை தடுக்க முடிந்தது. இருப்பினும், ஓணம் பண்டிகையின்போது மக்கள் அனைத்து விதிகளையும் பின்பற்றாமல் விட்டதாலும், வீதிகளில் நடந்த அரசியல் ஆர்பாட்டங்களாலும், கொரோனா தோற்று இப்போது 12% வரை உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் அனைத்து கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளையும் கடைபிடித்தால் நோய் பரவுதல் குறைக்கப்படலாம் என்று அவர் கூறியுள்ளார்.

அதிக எண்ணிக்கையில் முதியோர்கள், அதிக மக்கள் தொகை அடர்த்தி, பல நோய்களால் பாதிக்கப்பட்ட மக்கள் போன்ற சிக்கல்கள் வலுவாக இருந்தாலும், கேரளா, நோய் கட்டுப்பாட்டிற்கு, அறிவியல் உத்திகளை கடைபிடித்ததால் இறப்பு விகிதத்தை 0.39% ஆக வைத்திருக்க முடிந்தது.

ஆனால், வயதானவர்களை வீட்டிலேயே பாதுகாப்பாக வைத்திருக்கவும், தொற்று அவர்களை அடைவதைத் தடுக்கவும் அதிக கவனம் தேவைப்பட்டது.

இளைஞர்களின் பொறுப்பு

பெரும்பாலும், கொரோனா தோற்று 20-40 வயதுக்குள் இருப்பவர்களுக்குத் தான் உறுதிசெய்யப்பட்டது. இதன் பொருள் என்னவென்றால், வெளியே பயணிக்கும் இளைஞர்கள், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இதனால் அவர்கள் தங்கள் பெற்றோர்களுக்கும் வீட்டிலுள்ள மற்ற முதியவர்களுக்கும் கொண்டுசேர்க்காமல் இருக்கலாம், என்று ஷைலஜா கூறியுள்ளார்.

கேரளாவில் இறந்தவர்களில் 80% பேருக்கு ஏற்கனவே உடல்நலக்குறைவு இருந்தது மற்றும் வயது வாரியாக 72% இறப்புகள் 70 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே நிகழ்ந்தன. இருப்பினும், இறந்தவர்களில் 28% இளைய வயதினர். கொரோனா இலகுவாக எடுத்துக்கொள்ளும் நோய் இல்லை என்றும், இந்த நோய் தனிநபர்களை வித்தியாசமாக பாதித்தது என்றும் ஷைலாஜா கூறியுள்ளார்.

போதுமான படுக்கைகள்

சுகாதாரத் துறையின் அனைத்து அறிவுறுத்தல்களையும் பின்பற்றவும், மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். எனவே தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து சுகாதார அமைப்பின் திறனைப் பாதிக்காமல் இருக்கும் என்றும் ஷைலஜா கூறியுள்ளார்.

மருத்துவமனை படுக்கைகள் மற்றும் முக்கியமான பராமரிப்பு வசதிகளைப் பொருத்தவரை அரசு தன்னைத் தானே தயார்படுத்திக் கொண்டது. ஆனால் தினசரி தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தால், சுகாதார அமைப்பால் இதனைச் சமாளிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

பொதுமக்களிடம் கூடுதல் கவனத்துடனும், பொதுஇடங்களில் கூடுவதை தவிர்க்குமாறும், முக கவசத்தை பயன்படுத்தி, சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும் ஷைலஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

கேரளாவைப் போல் தமிழகத்திலும் மீண்டும் பொதுமுடக்கம் அமுல் படுத்துவது  குறித்து பரிசீலிக்க வாய்ப்புள்ளதா என தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது “இவ்வாறான யூகங்களுக்குள் நாம் செல்ல முடியாது. கேரளாவைப் பார்த்து நாம் எந்த முடிவிற்கும் வர மாட்டோம். இது தனிப்பட்ட துறை சார்ந்த முடிவாகத்தான் இருக்கும்” என்று கூறினார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்