Aran Sei

கேரளா: பேரிடர் காலத்தில் விடுமுறை – மருத்துவர்கள் பணிநீக்கம்

Image Credits: The Indian Express

`எந்த முன் அனுமதியும் இன்றிப் பேரிடர் காலத்தில் விடுப்பு எடுத்ததால் 385 அரசு மருத்துவர்கள் உட்பட 432 மருத்துவப் பணியாளர்களைப் பணியிலிருந்து நீக்கியுள்ளது கேரளா அரசு’ என்று கலைஞர் செய்திகள் வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கிறது.

கேரளாவின் சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா வெளியிட்டுள்ள அரசாணையில் பணிக்குத் திரும்பப் பல்வேறு வாய்ப்புகள் அளிக்கப்பட்டும் பணிக்குத் திரும்பாததால் அவர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அதிகமான மனிதவளம் தேவைப்படுகின்ற இந்தப் பேரிடர் காலத்தில் எந்த முன் அனுமதியும் இன்றி இவர்கள் விடுப்பு எடுத்தது மேலும் மருத்துவப் பணியாளர்களைப் பணிக்கு அமர்த்த தடையாக இருந்த காரணத்தினாலும் இந்த நடவடிக்கை எடுத்ததாகக் கூறியுள்ளார். மேலும் பணிக்குத் திரும்பாதவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

85 அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் , மருந்தாளுநர்கள் , சுகாதாரத் துறை ஆய்வாளர்கள், மருத்துவ உதவியாளர்கள், ரேடியோகிராபர்கள் உட்பட பலர் வேலை இழந்துள்ளனர்.

`கேரளா மாநிலத்தில் அதிகமாகக் கொரோனா தொற்று பரவி வரும் இவ்வேளையில் பல மருத்துவப் பணியாளர்கள் முதல் நிலை ஊழியர்களாக இருந்து நோய் பரவாமல் தடுப்பதற்கும் நோயாளிகளைப் பாதுகாப்பதற்கும் களப்பணி செய்து வருகின்ற இந்தத் தருணத்தில் இதுபோன்று அறிவிக்கப்படாத விடுமுறை எடுத்துப் பணிக்கு வராமல் இருப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது’ என்று கேரளா அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை ஆரம்ப நிலையிலேயே கட்டுக்குள் கொண்டு வந்த மாநிலம் கேரளா . முதல் தொற்று ஏற்படுத்துவதற்கு முன்பே மருத்துவமனைகளைத் தயார் நிலையில் வைத்து அதற்கான தனி வார்டையும் உருவாக்கி வைத்திருந்தது கேரளா. “ப்ரெக் தி செயின்” (சங்கிலியை உடைத்தல்) எனும் விழிப்புணர்வு நடவடிக்கை மூலம் கை கழுவுதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது முதலியவற்றை மக்களிடம் தெளிவாகக் கொண்டு சேர்த்தது. கொரோனா சோதனைகள் அதிக அளவில் செய்யப்பட்டதும் இங்குதான். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாகக் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

கேரளா மாநிலத்தில் ஜனவரி 30 முதல் மே 3-ம் தேதி வரை வெறும் 499 கொரோனா நோயாளிகள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று ஒரு நாளைக்கு 9000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதற்கான காரணம் சமூக விலகல் இன்றி ஓணம் பண்டிகையைக் கொண்டாடியதே ஆகும் எனக் கூறியுள்ளார் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன். வருகின்ற காலம் பண்டிகைக் காலம் என்பதால் மற்ற மாநிலங்கள் இதை முன்மாதிரியாக வைத்துக்கொண்டு சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு, கேரளாவின் சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா மத்திய அரசு ஊரடங்கைத் தளர்த்திய பின் ஓணம் பண்டிகைக்காக 9 லட்சம் மக்கள் மற்ற நாடுகளிலிருந்தும் மாநிலங்களிலிருந்தும் கேரளாவுக்கு வந்ததாகவும் ஒரு வாரம் நடந்த ஓணம் பண்டிகை, கல்யாணங்கள், போராட்டங்கள் ஆகியவற்றில் மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்காததே தொற்றுப் பரவலுக்குக் காரணம் என்று பதிலளித்து இருந்தார்.

இந்நிலையில்தான் பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்பட்டும் பணிக்குத் திரும்பாததால் மருத்துவ ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.ஷைலஜா கூறியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்