Aran Sei

கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் செயல்பாடுகள் – அறிவியல் வல்லரசு என்பது பகல்கனவே

Image Credit - thewire.in

னிதர்கள் மூலமாகவே பரவினாலும், மனிதர்கள் எல்லைகளால் பிரிக்கப்பட்டிருந்தாலும், தனக்கு எல்லைகள் இல்லை என்று புதிய கொரோனா வைரஸ் மிக விரைவாகவே காட்டிவிட்டது‌. சீனாவின் கொரோனா தொற்று விரைவில், உலக கொரோனா பெருந்தொற்றாக மாறிவிட்டது.

அதைப்போலவே, இந்த 2020-ல், ஒரு நோய்த் தொற்று நெருக்கடி என்பது தன்னிச்சையாக வரையறுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் நடக்கும் நிகழ்வாக கருதுவது அறிவுக்கு ஏற்றதல்ல. அதன் பெயரே அதற்கு அத்தாட்சி ஆகும். கொரோனா (கோவிட் 19), 2019-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் பெரும்பாலான அதன் அழிவுகள் 2020-ல்தான் நிகழ்ந்தன. இன்னும் சில மாதங்களுக்கும் இது நீடிக்கும்.

இந்த நுண்கிருமி சிரமமின்றி இட மற்றும் கால எல்லைகளை மீறி பரவி வந்தாலும், இதனுடைய பாதிப்பை இடம் மற்றும் கால அடிப்படையிலான பிரிவுகளாகப் பிரித்து புரிந்து கொள்வது உதவியாக இருக்கும். இந்த முறையில், இந்தப் பிரிவுகளில் அது ஏற்படுத்தி உள்ள பாதிப்பை ஒப்பிட்டு நோக்கி முரண்பாடுகளை கண்டறிய நமக்கு வாய்ப்புக் கிடைக்கும். ஏனெனில், இந்தியா பல வழிகளில் நிச்சயமாக ஒரு விதிவிலக்காகவே உள்ளது.

எடுத்துக்காட்டாக, சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோரானா தடுப்பு மருந்தான கோவி-ஷீல்ட் சோதனையில் பங்கேற்ற ஒருவர் ஐந்து கோடி ரூபாய் நட்ட ஈடு கேட்டு அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்த போது, “ஏன் இந்தியாவில் எந்த ஒன்றும் திட்டமிட்டபடி நடப்பதில்லை? ஏன் எல்லாவற்றையும் போட்டு குழப்பிக் கொள்கிறார்கள்?” என்ற கேள்விதான் முதன் முதலில் என் சிந்தையில் உதித்தது.

Image Credit - thewire.in
Image Credit – thewire.in

இந்தியா முழுவதும் உள்ள செய்தியாளர்கள் இந்த கொரோனா தொற்று காலத்தில், விரல் நுனியில் நின்று கொண்டும், இருக்கையின் முனையில் உட்கார்ந்து கொண்டும் இருக்கிறார்கள். கடந்த பத்து மாதங்களாக செய்தியாளர்களும், பத்திரிகை ஆசிரியர்களும், ஆளும் கட்சி மற்றும் அதன் அடிவருடிகளின் முரட்டுத்தனமான தடைகளையும் மீறி, இந்த கெடு வாய்ப்பான நிலைமையிலும், தக்க சமயத்தில், அறிவு பூர்வமாக, அறிவியல் கருத்துக்களையும் முடிவுகளையும் சரியான சமூக, அரசியல் கண்ணோட்டத்தில் செய்திகளாக்கி கொடுத்துக் கொண்டிருப்பது மனதை கவர்கிறது.

அவர்களுடைய இந்தப் பணியால், அரசு அதன் பிற தோல்விகளுக்கு இந்த நெருக்கடியை கையாள்வதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளை காரணமாகக் கூறுபவற்றை உடனுக்குடன் தோலுரித்துக் காட்ட முடிந்தது. எனினும் இவற்றில் நிறைய செய்திகள் செய்தியாக வேண்டியவையே இல்லை. ஏனெனில் அவை எளிதாக சரி செய்து கொள்ளக் கூடிய, ஆனால் சரி செய்து கொள்ளப்படாத நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகளின் விளைவுகள்தான். அரசு அதிகாரிகள் பொய் சொன்னதால்தான் அவை செய்திகள் ஆயின.

சீரம் நிறுவன விவகாரம் அரசின் படுதோல்விக்கான ஒரு சமீபத்திய எடுத்துக்காட்டு. குறிப்பாக, இப்போது பரிசோதனையில் பங்கு கொண்ட மற்றவர்களும், இந்த தடுப்பூசியால் மோசமான விளைவும் கூட ஏற்படும் என முன்னரே தங்களுக்குத் தெரியப்படுத்தாதற்காக, அந்த நிறுவனத்தின் மீதும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ICMR) மீதும் வழக்குத் தொடர திட்டமிட்டு வருகின்றனர்.

பிற உதாரணங்களில்,

  • மணிப்பால் வைராலஜி இன்ஸ்டிட்யூட்-ஐ மூடியது
  • பரவல் பற்றிய துவக்க கால ஆய்வு முடிவுகள்
  • நோய் எதிர்பொருள் பரிசோதனை கருவிகளின் தரச் சோதனை
  • மருந்து மற்றும் தடுப்பூசி மருந்தக பரிசோதனைகள்
  • தொற்று நோயியல் நிபுணர்களின் அறிவுரைகளைப் புறக்கணித்தது
  • பொதுமுடக்கம் மற்றும் தனிமைப் படுத்துதல் குறித்த முடிவுகள்
  • ஆயுஷ்துறை வெளியிட்ட பல்வேறு அறிவிப்புகள்
  • சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற பகுதிகளுக்கிடையே குளறுபடி
  • தொற்று நெருக்கடியை இனப்பிரச்சினையாகக் காட்ட முயன்ற முயற்சிகள் உட்பட முட்டாள்தனமான அறிவிப்புகளை வெளியிட்ட ஊடகவியலாளர் சந்திப்புகள்,
  • மறக்க முடியாத ஒன்றான ஹைட்ரோஆக்ஸி குளோரோகுயின், ரெம்டெசிவிர், ஃபாவிப்ரவிர், இட்டோலிஜுமாப் மற்றும் டாசிலிஜுமாப் ஆகியவற்றின் விளைவுகளைப் பற்றி போதிய ஆதாரங்கள் இல்லாமல் அவற்றிற்கு அனுமதி அளித்தது ஆகியவை அடங்கும்

இந்தச் செய்திகள் பற்றிய உள்ளார்ந்த உண்மைகளை அறிய செய்தியாளர்கள், பொய்களும், வஞ்சகமும் நிறைந்த சதுப்புக்காட்டின் ஊடே சிரமத்துடன் நடைபோட வேண்டியிருக்கும். “இன்று, பல்வேறு வரம்பு மீறல்கள் இருந்தும் ஒன்றிய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஐசிஎம்ஆர் மறுககும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.” என்று தி வயர், ஜுலை 1, 2020 தேதியிட்ட தலையங்கத்தில் எழுதியது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துடன் இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் (DCGI) நிறுவனமும் சேர்ந்து கொண்டது. அந்நிறுவனத்தின் இப்போதைய இயக்குநர், வி.ஜி. சோமானி, ஒரு இணையவழி கருத்தரங்கில் இந்தியாவின் மருந்து ஒப்புதல் மற்றும் தர விதிகள் குறித்து பேசினார். அவர் மிக உன்னிப்பாக பல்வேறு புதிய மருந்துகளுக்கான மருந்தக பரிசோதனை விதிகள் 2019-ம் பல்வேறு அம்சங்களைப் பற்றியும் தடுப்பூசி விதிமுறைகளை அதனோடு தொடர்புபடுத்தியும் விரிவாகப் பேசினார்.

சீரம் நிறுவன குளறுபடி காரணமாக சோமானி இவ்வாறு பேச வேண்டி வந்தது என்பது பார்ப்பவர்களுக்கு வெளிப்படையாகத் தெரிந்தது. ஆனால் தனது உரையின் இறுதியில், அந்த குளறுபடி குறித்தும், அது குறித்த அரசின் நிலை குறித்தும் கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

அவருக்குப் பின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் மருத்துவர். ஷீலா காட்போலே பேசினார். அவர் மருந்தக பரிசோதனை முறைக்கும் பாதுகாப்பான மருந்திற்கும் இடையே உள்ள தொடர்பை விளக்கினார்.

இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான், பயோகான் லிமிடெட் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் சர்ச்சைக்குரிய தங்கள் இடோலிஜுமாப் பரிசோதனை பற்றிய அறிக்கையை இணையதளத்தில் வெளியிட்டார்கள் என்பது அவருக்குத் தெரியாதா? நிர்வாக இயக்குநர் கிரண் மஜும்தார் ஷா உட்பட நிறுவன உறுப்பினர்கள் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இடோலிஜுமாப் செயல் திறனுடையது என்று கூறியதற்கு ஆதரவாக பரிசோதனை முடிவுகள் இருக்கவில்லை என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

Image Credit - thewire.in
ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா – Image Credit – thewire.in

மருத்துவர் ஜம்மி நாகராஜராவின் வார்த்தைகளில் கூறினால், “அந்த 41 பக்க அறிக்கை இடோலிஜுமாப்-ன் செயல்திறன் தொடர்பான ஆதாரங்கள் அல்லது ஆதாரங்கள் இல்லாமை தொடர்பாக துல்லியமாக ஜுலை மாத நிலைக்கே நம்மை மீண்டும் கொண்டு சென்று விட்டது.” என்று கூறினார். இந்தச் செய்தி செய்திகளின் சுழற்சியில் வெளியாகி, அது ஒரு விஷயமே இல்லை என்ற வகையில் முடித்து வைக்கப்பட்டு விட்டது.

ஆயுர்வேதத்தை முன்நிறுத்தல் – ஒரு துலக்கமான உதாரணம்

அறிவியல் என்றால் என்ன என்பதை மிக மோசமாக, ஒருவேளை வேண்டுமென்றே தவறாக புரிந்து கொண்டுள்ள அரசியல் தலைவர்கள் இருக்கும்போது ஒரு நாடு எப்படி ‘அறிவியல் வல்லரசாக’ முடியும்? அல்லது அதற்கு ஆசைப்படக் கூட முடியும்?

ஆளும் பாஜக வினர் இந்திய மருத்துவ சங்கம் ‘மிக்சோபதி’ (Mixopathy) என்று அழைக்கும் (ஆயுர்வேத மற்றும் அலோபதி கருத்துக்களை கலந்தது) ஒரு வகையான மருந்தை வெளியிடும் நோக்கத்தை விட வேறு எதுவும் இதைத் தெளிவுபடுத்தவில்லை.

அறிவியல் அங்கீகாரத்தின் முதுகில் ஏற்றி ஆயுர்வேதத்தை (அல்லது அவர்கள் ஆயுர்வேதம் என்று புரிந்து கொண்டதை) மையநீரோட்ட மருத்துவ நடைமுறைக்கு கொண்டு வருவதே பாஜகவின் நோக்கம். ஆனால், எந்த வகையிலும் விளக்க முடியாமல், இணைக்கப்பட்டு வலதுசாரி பிரச்சாரத்தால் உயிரூட்டப்பட்ட கொடூரமான ஜந்துவாகவே அந்த முயற்சி உள்ளது.

பாஜகவின் எதிர்மறை தொடுதலினால் ஆயுர்வேதம் பாதிக்கப்படுவது தனித்த ஒன்றல்ல. கொரோனா நெருக்கடியின் போது பாஜக ஆளும் அரசுகள் கை வைத்த பலவும் சொதப்பலாக முடிந்தன. ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் மருந்து நிறுவனம், ஐசிஎம்ஆர் உதவியுடன் தயாரித்த கோவாக்சின் என்ற தடுப்பூசி மிக இந்த வகையில் முக்கியமான உதாரணமாகும்.

கடந்த ஜுலை மாத இறுதியில், கோவாக்சின் மருந்து மூன்றாம் கட்ட சோதனையின் துவக்கத்தில் இருக்கும் போது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் தலைவர் மருத்துவர் பல்ராம் பார்கவா,   ‘சுதந்திர தினத்திற்குள் சோதனைகள் முடிக்கப்பட்டு விட வேண்டும். இல்லையெனில் அரசின் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்று அறிவித்தார். பின்னர் அந்த அறிக்கையை கழகம் திரும்பப் பெற்றுக் கொண்டது. அதன் மூலம் தேவையில்லாத ஒரு செய்தி சுழலை முடித்து வைத்தது, ஆனால், கடந்த வாரம் வரையில் கூட சில முறை அந்தச் செய்தி இன்னும் சில முறை உயிரூட்டப்பட்டது.

இரண்டு வாரங்களுக்கு முன் ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ், தான் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்வீட் செய்தார். அவர் கோவேக்சின் மருந்தக சோதனையின் பகுதியாக தடுப்பூசியை அல்லது வெற்று மருந்தை போட்டுக் கொண்ட இரண்டு வாரத்துக்குள் இது நிகழ்ந்தது.

ஆனால், விஜ்-ன் ட்வீட்டுக்குப் பிறகு ஒன்றிய உள்துறை அமைச்சகம் செய்தியாளர்களுடன் ஒரு வினோதமான குறிப்பை பகிர்ந்து கொண்டது. “நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்புயிர்கள் இரண்டாவது முறை மருந்தை எடுத்துக் கொண்ட குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகே வலுப்பெறுகின்றன. இது இரண்டு முறை எடுத்துக் கொள்ள வேண்டிய தடுப்பு மருந்து, ஆனால் பாதிக்கப்பட்ட அமைச்சர் ஒரு முறை மட்டுமே மருந்தை எடுத்துக் கொண்டுள்ளார்” என்று அந்தக் குறிப்பில் அமைச்சகம் கூறியது.

“இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு ஹரியானா அமைச்சரின் ட்வீட்டும், சனிக்கிழமை அவர் கொரோனா தடுப்பு மருந்தைப் பெற்றவர் என்று கூறும் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் குறிப்பும் வல்லுனர்கள் பலரை ஆச்சரியமடைய வைத்துள்ளது. இவை பொறுப்பற்று வெளியிடப்பட்ட அறிக்கைகள் அல்லது மருந்தக சோதனை  தொடர்பான நடைமுறைகளை மீறியது என்று அவர்கள் கூறியுள்ளனர்” என்று ஜி எஸ் மாத்துர் தி டெலிகிராப் இதழில் எழுதினார்.

தற்போதைய இந்திய அரசு, தான் எப்போதுமே சரியாக இருப்பதாகவும், எப்போதுமே உயர்மட்டத்தில் இருப்பதாகவும் காட்டிக் கொள்வதில் தெளிவாகவே உறுதியாக உள்ளது. இந்த நோக்கங்களை அடைவதற்காக பொய் கூறுகிறது, நழுவிச் செல்கிறது, ஏமாற்றுகிறது, தவறு என ஒத்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்தால் ஓடி ஒளிந்துக் கொள்கிறது‌, ஏதாவது தவறு நடந்தால், அல்லது முற்றிலும் தனது கட்டுப்பாட்டை மீறி ஏதாவது நடந்து விட்டால், பொய் சொல்லி அந்தப் பிரச்சனையை தீர்த்துக் கட்ட முயற்சிக்கிறது. அதன் மூலம் அப்படி ஒரு பிரச்சினையே எழவில்லை என்பது போலவும் அல்லது எல்லா தடைகளையும் தாண்டி ஒரு தீர்வை கண்டுபிடித்து விட்டதைப் போலவும் ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறது. ஆனால் அரசு எப்படியும் சிக்கிக் கொள்கிறது.

ஒரே ஒரு முறைதான் அரிய நிகழ்வாக அரசு மன்னிப்புக் கேட்டுள்ளது. ஒன்றிய தகவல் ஆணையத்தின் முன் ‘ஆரோக்கிய சேது’ தொடர்பாக பொறுப்பற்ற முறையில் விபரங்களை வழங்கியதாக ஏற்றுக் கொண்டது.

இந்தியாவின் “அறிவியல் வல்லரசு” கனவு இந்த ஆண்டு, அதன் மருந்து மற்றும் உயிரியல் மருத்துவ ஆராய்ச்சித் துறையின் கையில் உள்ளது. ஆனால் தற்போதைய தெரியும் காட்சிகள் நாடு அதற்கான சரியான பாதையில் கூட செல்லவில்லை என்பதையே காட்டுகின்றன.

(www.thewire.in இதழில் வாசுதேவன் முகுந்த் எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்