Aran Sei

கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு ஒப்புதல் – அறிவியல் முறை பின்பற்றப்பட்டதா?

Image Credit : thewire.in

னவரி 3-ம் தேதி காலை 11 மணிக்கு ஒரு குறுகிய, எட்டு நிமிட அறிக்கையின் மூலம், இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையர் (டி.சி.ஜி.ஐ) டாக்டர் வி.ஜி சோமானி, இந்தியாவில் வரம்புக்குட்பட்ட பயன்பாட்டிற்காக இரண்டு சோதனை கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு தனது துறை ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இந்தியா அதிகாரபூர்வமாக உலகின் மிகப்பெரிய தடுப்பு மருந்து இயக்கத்தைத் தொடங்கி வைக்கிறது. இந்தத் தருணம் நம்பிக்கை நிரம்பியிருந்தாலும் இன்று முதல் என்ன நடக்கப் போகிறது என்பதை எப்போதுமே நினைவில் வைத்துக் கொள்வது நல்லது:

இது அறிவியல் ரீதியாக நன்கு புரிந்து கொள்ளப்பட்ட அல்லது நன்கு திட்டமிடப்பட்ட நிகழ்வு அல்ல, அறிவியல் தொடர்பான கொண்டாட்டங்கள் எல்லாம் ஒரு புறம் இருக்க, இது அதிர்ஷ்டத்தை சார்ந்திருக்கும் ஒரு நிகழ்வாகவே இருக்கப் போகிறது.

கொரோனாவுக்கான அஸ்ட்ராஜெனெகாவின் சோதனை தடுப்பு மருந்துக்கு இங்கிலாந்து ஒப்புதல் அளித்த சில மணி நேரங்களிலேயே, அந்த நாட்டில் தடுப்பு மருந்தை முன்னுரிமையாக பெற வேண்டிய குழுக்களிடையே விநியோகிப்பதற்காக அந்நிறுவனம் ஆயிரக்கணக்கான முறைகளுக்கான மருந்தை வழங்கத் தொடங்கியது. அஸ்ட்ராஜெனெகா, தனது சோதனை மருந்துக்கு ஒப்புதல் கிடைத்து விடும் என்ற அனுமானத்தில், உடனடியாக வினியோகிப்பதற்கு போதுமான அளவு மருந்துகளை பெருமளவுக்கு உற்பத்தி செய்து கைவசம் வைத்திருந்தால் மட்டுமே இது சாத்தியமாகியிருக்கும்.

சாதாரண காலங்களில் இந்த அணுகுமுறை அவசரத்தனமாகவும், முகம் சுழிக்க வேண்டியதாகவும் தோன்றியிருக்கலாம். ஆனால், இப்போது பெருந்தொற்று நோய்க் காலத்தில் அத்தகைய அவசரம் தேவைப்படுகிறது. குறிப்பாக, மேலும் அதிக வேகத்துடன் பரவக்கூடிய வகையில் பரிணாம மாற்றம் பெற்ற நோய்க்கிருமி சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இது இன்னும் அவசியமாகிறது. அதுவும் அஸ்ட்ராஜெனெகாவின் சோதனை மருந்து இதுவரையில் உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்துகளில் விலை மலிவானது.

இப்படித்தான், தடுப்பு மருந்து உற்பத்தி, விநியோகம் ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களை முடிந்தவரை துரிதப்படுத்துவதற்கு, ஒரு சில நிபுணர்கள் உட்பட, பலர் காரணம் கூறுகின்றனர்.

இது துரதிர்ஷ்டவசமானது. அஸ்ட்ராஜெனெகா தனது சோதனை மருந்து உருவாக்கத்தை துரிதப்படுத்தியதற்கு நோய்த்தொற்று ஒரு காரணம் மட்டும்தான். அதுவும் முதன்மையான காரணம் அல்ல.

ஃபைசர்/பயோஎன்டெக் கூட்டு முயற்சி அமெரிக்காவில் மிக முந்திச் சென்று விட்டதும், அமெரிக்கச் சந்தையில் மடேர்னா நிறுவனத்தின் தடுப்பு மருந்து உருவாக்க முயற்சி அதற்கு மிக அருகில் இரண்டாவது இடத்தில் இருப்பதும்தான் அதற்கு முதன்மையான காரணம். அந்த இரு நிறுவனங்களின் தடுப்பு மருந்துகள் அதிக திறனுடைய mRNA வகையிலானவை.

இந்த மூன்று சோதனை தடுப்பு மருந்துகளுமே இரண்டு முறை கொடுக்கப்பட வேண்டியவை. அமெரிக்கா (அமெரிக்க ஐக்கிய நாடுகள்), இங்கிலாந்து (ஐக்கிய முடியரசு) இரு நாடுகளின் மொத்த மக்கள் தொகை 40 கோடி. எனவே, இப்போதைய உற்பத்தி திறனைக் கொண்டு எந்த ஒரு மருந்தை மட்டும் பயன்படுத்தி ஒட்டு மொத்த மக்கள்தொகைக்கான தேவையையும் நிறைவு செய்ய முடியாது. எனவே, மூன்று மருந்துகளுமே பரிசீலனையில் உள்ளன.

இந்த நிறுவனங்கள் அனைத்தும் பங்குச் சந்தை மீதும் ஒரு கண்ணை வைத்துக் கொண்டுதான் தமது செயல்பாடுகளை திட்டமிட்டு வந்தன. ஃபைசரின் சோதனை தடுப்பு மருந்து அமெரிக்காவில் அவசர நிலை பயன்பாட்டுக்கு ஒப்புதல் பெற்றதும் அந்நிறுவனம் பங்குச் சந்தையில் குவித்த ஜாக்பாட் லாபமும் அதன் தலைமை நிர்வாக அதிகாரிக்குக் கிடைத்த பெருமளவு லாபங்களும் பெருந்தொற்று பற்றிய கதைகளில் ஒன்றாகச் சேர்ந்து விட்டது. ஒரு மதிப்பீட்டின்படி, ஃபைசர் நிறுவனம் 2021-ம் ஆண்டில் மட்டும் $1300 கோடி (சுமார் ரூ 1 லட்சம் கோடி) லாபம் ஈட்ட உள்ளது.

ஆகவே, அஸ்ட்ராஜெனெகா ஏற்கனவே பின்தங்கியிருந்தது, முன்னணியில் இருக்கும் நிறுவனங்களை ரீதியாக எட்டிப் பிடிக்க வேண்டுமானால், அது உருவாக்கி வரும் தடுப்பு மருந்தை அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் விரைவில் கிடைக்கச் செய்ய வேண்டும், எங்கெல்லாம் சாத்தியமோ, அங்கெல்லாம் முதலில் உருவாக்கியவர் என்ற ஆதாயத்தை தானும் பெற முயற்சிக்க வேண்டும்.

ஆதாயத்தை பயன்படுத்துதல்

அத்தகைய ஒரு இடம் இந்தியா. சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா, அஸ்ட்ராஜெனெகாவின் சோதனை தடுப்பு மருந்தை மற்ற நாடுகளின் சந்தைகளில் விற்பனை செய்வதற்கும், ‘கோவிஷீல்ட்’ என்ற பெயரில் இந்தியாவில் விற்பனைக்கு விநியோகிப்பதற்கும் அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.

ஜனவரி 1-ம் தேதி, மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (சி.டி.எஸ்.கோ) துறைசார் நிபுணர் குழு, சோதனை தடுப்பு மருந்துக்கு வரம்புக்குட்பட்ட பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கும்படி பரிந்துரைத்தது. ஜனவரி 3-ம் தேதி, டி.சி.ஜி.ஐ டாக்டர் சோமானி சோதனை மருந்துக்கு ஒப்புதல் அளித்தார், அதே போல் கோவாக்சின் என்ற பாரத் பயோடெக்கின் சோதனை மருந்துக்கும் அவர் ஒப்புதல் அளித்தார்.

இது பிரமிக்க வைக்கும் வேகம்தான். ஆனால் இந்தியாவில் என்பதால், இது வணிகம் செய்வதில் இருக்கும் ஒரு வினோதமாகக் கூட இருக்கலாம். தி வயர் வெளியிட்ட செய்தியின்படி, “அமெரிக்க, ஐரோப்பிய அரசுகள் தடுப்பு மருந்து தயாரிப்பாளர்களுக்கு  ஏற்படக் கூடும் சாத்தியமான இழப்புகளை ஈடுகட்ட பல நூறு கோடி டாலர்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளன”. அதற்குப் பதிலாக சோதனை மருந்துகளுக்கு ஒப்புதல் வழங்கப்படுவதற்கு முன்னரே அந்நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடங்க வேண்டும்.

ஆனால் ஆகஸ்ட் 2020 வரை, இந்திய அரசாங்கம் அத்தகைய வாக்குறுதிகள் எதையும் வழங்கவில்லை. எனவே, பெரிய அளவு இழப்புகளை ஏற்றுக் கொள்ளக் கூடிய நிறுவனங்கள் மட்டுமே முன்கூட்டியே உற்பத்தி செய்வது சாத்தியமாக இருந்தது. சீரம் இன்ஸ்டிட்யூட், அத்தகைய ஒரு நிறுவனமாக இருந்தது. அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவாலா, ரூ 3,300 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்து உற்பத்தியை தொடங்குவது சாத்தியமாக இருப்பதால், முந்திக் கொள்ள விரும்புவதாக நியூயார்க் டைம்ஸிடம் கூறினார்.

“அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்! தடுப்பு மருந்தை உற்பத்தி செய்து சேர்த்து வைத்ததன் மூலம் சீரம் இன்ஸ்டிட்யூட் எடுத்த ரிஸ்க் இறுதியில் பலனளித்து விட்டது. கோவிஷீல்ட், இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பு மருந்தாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, அது பாதுகாப்பானது, பயனுள்ளது, வரும் வாரங்களில் வினியோகிக்கத் தயாராக உள்ளது.” pic.twitter.com/TcKh4bZIKK

– ஆதார் பூனாவாலா ஜனவரி 3, 2021

கோவிஷீல்டைப் பற்றியோ அல்லது பிற சோதனை தடுப்பு மருந்துகளைப் பற்றியோ நமக்கு நிறைய விஷயங்கள் தெரியாமல் உள்ளன என்பதற்கு இவை எதுவும் நியாயப்படுத்தல் ஆகாது. ஏனென்றால், நம்மை நாமே முட்டாளாக்கிக் கொள்ளும் அபாயத்தை நாம் எதிர்கொள்கிறோம்.

கோவிஷீல்ட் விஷயத்தில் தடுப்பு மருந்து சோதனையில் பங்கேற்ற ஒருவருக்கும் சீரம் நிறுவனத்திற்கும் இடையே தீர்க்கப்படாத தகராறு ஒன்று உள்ளது. கோவிஷீல்ட் மருந்து வழங்கப்பட்டதால் தனக்கு ஏற்பட்ட நரம்பியல் பக்க விளைவுக்காக ரூ 5 கோடி இழப்பீடு கோரி அவர் வழக்கு தொடுத்துள்ளார். சீரம் நிறுவனம் அதை அவதூறு என்று கூறி அவருக்கு எதிராக ரூ 100 கோடிக்கு வழக்கு தொடுப்பதாக அச்சுறுத்தியுள்ளது.

தி வயர் சயின்ஸ் பகுதியில் ஸ்ரேயா தாஸ்குப்தா எழுதியபடி, சீரம் இன்ஸ்டிடியூட்டின் பதில், நடந்தது பற்றிய அதன் தரப்பு வாதங்கள் மீது நம்பிக்கை ஏற்படுத்துவதாக இல்லை. மேலும் மருந்தக பரிசோதனைகளின் போது பெறப்படும் ஒப்புதல் ஒப்பந்தம், பங்கேற்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிராக நிறுவனத்துக்குக் கிடைக்கும் உறுதியான பாதுகாப்பு என்ற கருத்து தவறானது.

அஸ்ட்ராஜெனெகாவின் சோதனை தடுப்பு மருந்தும் இங்கிலாந்தில் ஆழமான சிக்கலில் சிஉள்ளது. மருந்து கொடுக்க வேண்டிய இரண்டு முறைகளில் முதல் முறையில் பாதி அளவு மருந்தை கொடுத்தால், சோதனையில் உள்ள தடுப்பு மருந்து அதிக பலனளிப்பதாக இருந்தது என்று அந்நிறுவனம் கூறுவது குறித்து அங்கு அரசாங்கத்தின் ஆலோசனைக் குழு சந்தேகம் எழுப்பியுள்ளது.

இந்த உரிமைகோரல் அதன் இரண்டாவது கட்ட மருந்தக சோதனைகளின் போது ஏற்பட்ட ஒரு தவறை அடிப்படையாகக் கொண்டது. பங்கேற்பாளர்களின் துணைக்குழு ஒன்று, தவறுதலாக, ஒரு முறை முழு அளவையும் ஒரு முறை அரை அளவையும் பெற்றது, அக்குழு 28 சதவீத புள்ளிகள் அதிக செயல்திறனைப் பதிவுசெய்தது.

ஒப்புதலுக்காக அரசுடன் பகிர்ந்து கொண்ட தரவுகளில் அதன் சோதனைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தரவுகள் மட்டுமே கொடுக்கப்பட்டன என்று தெரிந்த பின்னர் அஸ்ட்ராஜெனெகா இன்னும் சிக்கலுக்கு உள்ளாகியது.

சீரம் நிறுவனமும் இதையே பின்பற்றுவதாகத் தெரிகிறது. நிறுவனம் இந்தியாவில் இணைப்பு சோதனைகளை நடத்தி வருகிறது. இணைப்பு சோதனைகள் என்பவை வேறு நாடுகளில் பரிசோதிக்கப்பட்ட ஒரு சோதனை தடுப்பு மருந்து இந்திய மக்களிடமும் நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குமா என்பதைக் கண்டறிவதற்கானவை.

1,600 பங்கேற்பாளர்கள் அடங்கிய குழுவில் இருந்து 100 தன்னார்வலர்கள் தொடர்பான தரவுகளை மட்டும்தான் சீரம் நிறுவனம் சி.டி.எஸ்.சி.ஓ-வின் துறைசார் பொருள் நிபுணர் குழுவிடம் சமர்ப்பித்தது என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் 100 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தரப்பட வேண்டிய தடுப்பு மருந்து இது என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஆனால், நிபுணர் குழுவோ வெறும் நூறு பேர் மீதான பரிசோதனை தரவுகளின் அடிப்படையில் சோதனை மருந்தை ஒப்புதலுக்கு பரிந்துரைத்துள்ளது.

Image Credit : thewire.in
டாக்டர் வி ஜி சோமானி பத்திரிகையாளர் சந்திப்பில் – Image Credit : thewire.in

பாரத் பயோடெக்கைப் பொறுத்தவரை: கோவாக்சின் சோதனை தடுப்பு மருந்தின் செயல்திறன் தொடர்பான தரவுகள் பொது வெளியில் வைக்கப்படவில்லை. அதன் முதல் இரண்டு கட்ட பரிசோதனைகளின் முடிவுகளும் வெளியிடப்படவில்லை. அதன் செயல்திறன் சுமார் 60% என்பது எப்படி மதிப்பிடப்பட்டது என்பதும் தெளிவுபடுத்தப்படவில்லை. டி.சி.ஜி.ஐயின் ஒப்புதல் முழுவதும் வெளிப்படைத்தன்மை அற்று இருப்பதால் இது மேலும் சிக்கலை ஏற்படுத்துகிறது.

விமர்சனத்தை புறக்கணித்தல்

இது மட்டும் இல்லை. அஸ்ட்ராஜெனெகா தனது சோதனை மருந்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பித்த தரவுகளை, இங்கிலாந்தின் ஆலோசனைக் குழு பகுப்பாய்வு செய்தபோது, முழு அளவிலான / அரை-அளவிலான மருந்து பெற்ற பங்கேற்பாளர்களின் துணைக்குழுவில் அதிக செயல்திறன் இருப்பது இரண்டு முறைகளுக்கு இடையிலான நீண்ட இடைவெளியின் காரணமாக இருந்திருக்கலாம், மாற்றப்பட்ட அளவினால் அல்ல என்று கண்டறிந்ததாக அக்குழுவின் தலைவர் முனீர் பீர்முகமது சமீபத்தில் தெரிவித்தார்.

மருந்து வழங்கப்பட வேண்டியவர்களுக்கு முதல் முறைக்கான மருந்தை விரைவில் விநியோகிப்பது என்ற ஒரு செயல்உத்திக்கு இங்கிலாந்து ஒப்புதல் அளித்துள்ளது, ஏனெனில் முதல் முறை தரப்படும் தடுப்பு மருந்து நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது என்று நம்புவதற்கு போதுமான தரவு உள்ளது. எவ்வாறாயினும், எதிர்ப்பு சக்தியின் வலுவும், கால அளவும் எவ்வாறு மாறுபடும் என்பது நமக்குத் தெரியாது. மேலும் இரண்டாவது முறை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் தாமதமாகிவிட்டால் சோதனை தடுப்பு மருந்து எவ்வளவு திறனுடன் செயல்படும் என்பதும் நமக்குத் தெரியாது.

இன்னும் ஒரு எச்சரிக்கையும் உள்ளது: இரண்டு முறை தடுப்பு மருந்து கொடுப்பதற்கு இடையேயான காலத்தை அதிகரிப்பதற்கான காரணம், அது செயல்திறனை அதிகப்படுத்துகிறது என்பதால் மட்டுமின்றி, அஸ்ட்ராஜெனெகா மருந்தை உற்பத்தி செய்து வினியோகிப்பதில் உள்ள சிக்கலால் கூட இருக்கலாம்.

தடுப்பு மருந்து ஒன்றுக்கு ஒப்புதல் வழங்குவதற்கு, தற்செயலான தரவுகளும் பரிசோதனை சமரசங்களும் நிரம்பிய எவ்வளவு சொதப்பலான வழிமுறை இது!

மருந்து கண்டுபிடிப்பு வேதியியலாளர் டெரெக் லோவ் கூறியது போல், நோய்ப் பெருந்தொற்றும் புதிய பரிணாம மாற்றம் அடைந்த நோய்க்கிருமி வேகமாக பரவும் சாத்தியமும் இந்த வகையான தலை தெறிக்கும் வேகத்தை நியாயப்படுத்த முடியும். ஆனால் இங்கிலாந்து அரசாங்கத்துக்கோ அல்லது வேறு யாருக்குமோ உண்மையில் அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஒரு சோதனை தடுப்பு மருந்து எதிர்பார்த்தபடி செயல்படும் என்ற நம்பிக்கையில், கோடிக்கணக்கான மக்களை பணயம் வைத்து நடத்தப்படும் (ஓரளவு சாதகமான பகடையுடன், இருந்தாலும்) சூதாட்டம் இது. இந்த விளையாட்டில் அஸ்ட்ரா ஜெனக்கா மட்டும் இல்லை.

இந்திய மருத்துவ நெறிமுறைகள் ஆய்விதழின் ஆலோசனை ஆசிரியர் சந்தியா சீனிவாசன் சென்ற ஆண்டு பிற்பகுதியில் எழுதியது போல, நம்மிடம் இருப்பது தடுப்பு மருந்துகள் இல்லை, இவை சோதனை தடுப்பு மருந்துகள். இது ஒரு முக்கியமான வேறுபாடாகும்,

ஏனென்றால் சோதனை மருந்துகள் மோசமான நோயை தடுப்பதில் அவை திறனுடன் செயல்படுகின்றனவா என்பதை சரிபார்க்கும் வகையில் பரிசோதனைகள் நடத்தப்படவில்லை. மேலும், முதலில் மருந்தை பெறவிருக்கும் உயர் முன்னுரிமை குழுவினருக்கு, குறிப்பாக முதியவர்களுக்கு அது பாதுகாப்பானதா என்பதும் சோதித்தறியப்படவில்லை. சந்தியா சீனிவாசனும் புது டெல்லியில் உள்ள ஓய்வுபெற்ற விஞ்ஞானி எஸ். சுவாமிநாதனும் மருந்தக பரிசோதனைகள், தாக்கங்களின் உச்சவரம்பை தளர்த்துவதன் மூலம், தடுப்பு மருந்தின் செயல்திறனை மிகைமதிப்பீடு செய்வது குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்த நடைமுறைகளை நியாயப்படுத்துவதற்கான மிகவும் தீங்கு விளைவிக்கும் எதிர்வினை என்னவென்றால், சங்கடமான கேள்விகளைக் கேட்கும் எவரையும் “தடுப்பு மருந்து மறுப்பாளர்கள்” என்று குற்றம் சாட்டுவதாகும்.

நோய்த்தொற்றுகளை தடுப்பதற்கு தடுப்பூசிகளைப் பயன்படுத்துவதை எதிர்க்கும் ஒரு இயக்கமான ‘தடுப்பு மருந்து மறுப்பாளர்கள்’ என்பதற்கு சுருக்கமான பெயர் “தடுப்பு மருந்து மறுப்பு” என்பதாகும். தடுப்பு மருந்துகள் நோய்களை தடுப்பதற்கு பதிலாக புதிய நோய்களை ஏற்படுத்தும் என்று அந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் நம்புகிறார்கள்.

தடுப்பு மருந்து எதி்ரப்பாளர்கள் பொதுவாக தீவிர வலதுசாரி சித்தாந்தங்களை ஆதரிப்பவர்கள், ஆனால், மருந்து ஒப்புதல் பற்றிய பொறுப்பான பதில் தரும்படி கேட்பவர்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துபவர்கள் அவர்களைப் போன்றே தீவிரமான, சாத்தியமற்ற, நிலைப்பாட்டை எடுக்கின்றனர்.

இந்தியாவில் மட்டுமாவது, மருந்து ஒப்புதல் நிகழ்முறை இல்லாமலே இருக்கலாம், ஏனென்றால் அந்த நிகழ்முறையை அவ்வளவு இரகசியம் சூழ்ந்துள்ளது. கார்ப்பரேட் முதலாளிகள் முறைகேடான முறைகளையும் தேசியவாத தர்க்கங்களையும் பயன்படுத்தி முறைகேடான நடைமுறைகள், தவறுகள் பற்றிய புகார்களை ஒதுக்கி விடுகின்றனர்.

தடுப்பு மருந்து இனவெறி

இதற்கு மேல் சேர்ந்து கொள்வது புதிதாக வளர்ந்து வரும் – ஆனால் வரலாற்று ரீதியாக நன்கு அறிமுகமான தெரிந்த – “தடுப்பு மருந்து இனவெறி”. டிசம்பர் 31, 2020 அன்று தி இன்டர்செப்ட் அறிவித்தபடி, ஃபைசர் / பயோஎன்டெக் சோதனை தடுப்பு மருந்துக்கு “அர்ஜென்டினா, தென்னாப்பிரிக்கா, பிரேசில், ஜெர்மனி, துருக்கி போன்ற நாடுகளிலும் அமெரிக்காவிலும்” மொத்தம் கிட்டத்தட்ட 44,000 பங்கேற்பாளர்களுடன் பரிசோதனை நடத்தப்பட்டது.

எனினும், அர்ஜென்டினா, தென்னாப்பிரிக்கா, பிரேசில், துருக்கி ஆகியவை ஃபைசரின் நன்றியுடன் மட்டும் திருப்தி அடைய வேண்டியிருக்கும், ஏனென்றால், தங்கள் மக்களுக்கு தடுப்பு மருந்து அளிப்பதற்கு போதுமான மருந்தை அவர்கள் பெறப் போவதில்லை. குறைந்தபட்சம் கூடிய விரைவில் பெறப் போவதில்லை. இதற்கிடையில், அமெரிக்காவும் ஜெர்மனியும் – கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்ற பகுதிகளும் சேர்ந்து – பல்வேறு கொரோனா தடுப்பு மருந்துகளை தமது மக்கள் தொகைக்கு வழங்கும் அளவுக்கு ஒப்பந்தம் செய்துள்ளன.

அஸ்ட்ராஜெனெகாவின் சோதனை தடுப்பு மருந்தின் மருந்தக பரிசோதனைகளின் போது பாதகமான மருந்து எதிர்வினை ஏற்பட்டது தொடர்பாகவும் இதுபோன்ற இனப்பாகுபாடு பற்றிய விபரங்கள் வெளியாகின.

இங்கிலாந்தில் நடந்த சோதனைகளில் ஒரு பாதகமான எதிர்வினை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டபோது, நிறுவனம் தற்காலிகமாக சோதனைகளை நிறுத்தி வைத்தது, முன்னரே தீர்மானிக்கப்பட்ட, நன்கு புரிந்துகொள்ளப்பட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில் விசாரணையை நடத்தி அதை பரிசீலித்தது. அந்த எதிர்வினை நிகழ்வு பற்றி செய்திகள் ஓரிரண்டு நாட்களுக்குள் உலக அளவில் ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக வெளியாகின. விசாரணை முடிந்த பிறகுதான், சோதனைகள் எந்தவித தடையும் இல்லாமல் மீண்டும் தொடங்கின.

இந்தியாவில், சீரம் நிறுவனம், இந்திய சட்டத்தின் படி, இதேபோன்ற செயல்முறையைப் பின்பற்றியதாகக் கூறுகிறது, ஆனால் அதன் பரிசோதனை நிகழ்முறையில் பங்கேற்றவர், தனக்கு ஏற்பட்ட பாதகமான எதிர்வினை தொடர்பாக வழக்குத் தொடர வேண்டியிருந்தது. அக்டோபர் தொடக்கத்தில் நிகழ்ந்த இந்த நிகழ்வு நவம்பர் பிற்பகுதியில்தான் வெளிச்சத்திற்கு வந்தது. அதே சோதனையின் பிற பங்கேற்பாளர்களும் இந்த பாதகமான எதிர்வினை குறித்த தகவல் தங்களுக்கு தெரிவிக்கப்படாததால் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து சிந்தித்து வருவதாகக் கூறினர்.

பணக்கார மேற்கு நாடுகளில், தடுப்பு மருந்து தயாரிப்பாளர்கள் “மறைக்க என்ன இருக்கிறது” என்ற அணுகுமுறையை கொண்டுள்ளனர். ஆனால் இந்தியாவிலும், பிற ‘வளரும் நாடுகளிலும்’, “பார்க்க என்ன இருக்கிறது” என்ற அணுகுமுறையே பிரதானமாக உள்ளது.

இதனால்தான் இது தொடர்பாக அக்கறை கொண்டவர்கள் – நடைமுறையில் எல்லோருமே இதில் அக்கறை உள்ளவர்கள்தான் – இந்தியாவில் சோதனை தடுப்பு மருந்துகளுக்கு எவ்வாறு ஒப்புதல் அளிக்கப்படுகின்றது அவை எப்படி, விற்கப்படுகின்றன என்பது குறித்து மேலும் கேள்விகளைக் கேட்க வேண்டும், மேலும் தெளிவு பெற வேண்டும்.

உடன்படாதவர்களை ‘ஒதுக்கித் தள்ளுவது’ நம்மை நாமே ‘ஒதுக்கித் தள்ளுவதற்கு’ சமம்.

– வாசுதேவன் முகுந்த்

thewire.in தளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்