Aran Sei

விலை அதிகம் என்று கூச்சலிடுபவர்கள் கோவிஷீல்ட்-ஐ வாங்கத் தேவையில்லை – அதார் பூனாவாலா

ஆஸ்ட்ரா செனிகா (AstraZeneca) நிறுவனத்தின் கோவிஷீல்ட் தடுப்பு மருந்தை, இந்தியாவில் தயாரிக்கும் சீரம் இன்ஸ்ட்டியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அதர் பூனாவாலா, சிஎன்பிசி (CNBC) தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கோவிஷீல்ட் தடுப்பு மருந்து 400 ரூபாய்க்கே விற்கப்படும் என்று கூறியுள்ளார்.

அந்த பேட்டியின் ஒருபகுதி…

மத்திய அரசுக்கு ஒரு விலை, மாநில அரசுக்கு ஒரு விலை, தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு விலை என்று, ஏன் வேறுபட்ட விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது?

வெவ்வேறு விலைகள் கிடையாது. இனி புதிய ஒப்பந்தம் செய்யும், அனைத்து அரசாங்கங்களுக்கும் கோவிஷீல்ட் தடுப்பு மருந்து 400 ரூபாய்க்கு தான் வழங்கப்படும். இதற்கு முன்னர் மத்திய அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அவர்களுக்கு மட்டும் 150 ரூபாய்க்கு வழங்கப்பட்டது. அதன்படி, 11 கோடி தடுப்பு மருந்துகள் அந்த விலைக்கு வழங்கப்படும். அதன் பிறகு, மத்திய அரசு புதிய ஒப்பந்தம் செய்துகொள்ளும் பட்சத்தில், அவர்களுக்கும் 400 ரூபாய் தான் விலை நிர்ணயம் செய்யப்படும்.

மாநில அரசுகளுக்கு தற்போது 400 ரூபாய் என்று எதன் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது?

மத்திய அரசு எந்த விலைக்கு வேண்டுமானாலும் விற்றுக்கொள்ளலாம் என்று கூறியது. அது நியாயமானதாக இருக்க வேண்டும் என்றும் கூறியது. முதலில் 600 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. பிறகு அது 400 ரூபாயாக குறைக்கப்பட்டது. கடந்த ஆண்டு தடுப்பு மருந்தின் விலை 1000 என்று கூறினோம். உயிரை காப்பாற்றுவதற்கு இந்த விலை நியாயமான ஒன்றுதான். இன்று நிமோனியாவுக்கு எதிரான தடுப்பு மருந்து 1000 ரூபாய்க்கு தான் விற்கப்படுகிறது. தற்போதைய பெருந்தொற்று காலத்தை எங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. அதனால்தான், 400 ரூபாய் என்று மிகவும் குறைந்த அளவில் விலை நிர்ணயம் செய்துள்ளோம்.

150 ரூபாய்க்கு விற்பதால் நீங்கள் நஷ்டமடைகிறீர்களா?

ஆமாம். தடுப்பு மருந்தில் வரும் வருவாயில் 50 சதவீதத்தை ஆஸ்ட்ரா செனிகா (Astra Zeneca) நிறுவனத்திற்கு வழங்க வேண்டும். தொடக்கத்தில், தேசத்திற்கு உதவ வேண்டும் என்பதற்காக, இடைக்காலமாக இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அப்போதே, ஒரு குறிப்பிட்ட காலத்தில் விலையை ஏற்றிக்கொள்ளலாம் என்ற உத்தரவாதம் வழங்கப்பட்டது. அதன்படி, தற்போது விலையை உயர்த்தியுள்ளோம்.

தற்போது எவ்வளவு தடுப்பு மருந்து தயாரிக்கப்படுகிறது?

தற்போது மாதம் 6 கோடி முதல் 7 கோடி மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. ஜூலை முதல் அது 10 அல்லது 11 கோடியாக உயர்த்தப்படும்.

தனியாருக்கு எப்படி விற்கப்போகிறீர்கள்?

ஒவ்வொரு மாநிலத்திலும், அந்த மாநிலத்தில் உள்ள மற்ற தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கும் திறன்படைத்த ஒரு நிறுவனத்திற்கு விற்கப்படும். மாநிலங்களை பொருத்தவரை, அவர்களுக்கு விருப்பம் இல்லை என்றால், 400 ரூபாய் விலை கொடுத்த வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், மத்திய அரசு அவர்களுக்கு ஏற்கனவே வழங்கிவரும் தடுப்பு மருந்துகளை தொடர்ந்து வழங்கப்போகிறது. அதேபோல், அந்த மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளும் தடுப்பு மருந்துகளை வழங்க உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் பல தனியார் மருத்துவமனைகள் உள்ளன. அவை, பெரும் மக்கள் தொகைக்கு தடுப்பு மருந்து அளிக்கும் திறன் படைத்தவை. ஆகவே, மாநில அரசு செலவு செய்ய வேண்டிய தேவை இல்லை. தடுப்பு மருந்தின் விலை அதிகம் என்று கூச்சலிடும் மாநிலங்களுக்கு மட்டும் இதைநான் கூறவில்லை. இது அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். கூடுதலாக பணம் இருக்கும் மாநிலங்கள் மட்டும் வேண்டுமென்றால் தடுப்பு மருந்தை வாங்கிக்கொள்ளலாம்.

தனியார் மருத்துவமனைகள் தடுப்பு மருந்தை 600 ரூபாய் கொடுத்து வாங்க தயாராக உள்ளனரா?

அவர்கள் 1000 ரூபாய் என்றாலும் வாங்கத் தயாராக உள்ளனர். கடந்த ஆண்டே அவர்கள் 1000 ரூபாய்க்கு முன்பதிவு செய்து, முன் பணம் கொடுக்கவும் தயாராக இருந்தார்கள். ஆனால், அப்போது உரிய அனுமதி இல்லை என்பதால், அவர்களிடமிருந்து பணம் வாங்க முடியவில்லை. ஆகவே, 600 ரூபாய் என்ற விலையை அனைவரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டுள்ளனர். மாநிலங்கள்தான் புதிய தடுப்பு மருந்துகளுக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று கோரின. மருத்துவ பரிசோதனைகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரின. விலை நிர்ணம் செய்ய சந்தையை திறந்துவிடுங்கள் என்று கோரின. ஆகவே, மோடி அதை செய்துள்ளார். இனி, பல நிறுவனங்களின் தடுப்பு மருந்துகள் இந்தியாவில் கிடைக்கவுள்ளன. அதுதான் இப்போதைய தேவையும் கூட.

கோவிஷீல்ட் தடுப்பு மருந்து இரத்த உறைவை ஏற்படுத்துகிறது என்ற காரணத்தை கூறி சில நாடுகள் அதற்கு தடை விதித்துள்ளன. சில நாடுகள் அந்த மருந்தை மறுஆய்வுக்கு உட்படுத்தியுள்ளன. இதுகுறித்து இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு கழகத்திடம் நீங்கள் முன்வைத்த விளக்கம் என்ன?

சில நாடுகளில் அரசியல் காரணமாக இது நடந்துள்ளது. தற்போது அந்த நாடுகள் மற்ற தடுப்பு மருந்துகளிலும் இதுபோன்ற ரத்தம் உறைதல் ஏற்படுவதை கண்டுபிடித்துள்ளன. ஆனால், இது 10 லட்சத்தில் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ ஏற்படும் பிரச்சனை. ஆனால், தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ளலாமல் இருந்தால், 20 முதல் 30 சதவீதத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அதை ஒப்பிடும்போது, ரத்தம் உறைதல் பெரிய பிரச்சனை இல்லை. அதாவது, தடுப்பு மருந்தால் கிடைக்கக் கூடிய பலனை ஒப்பிட்டால், அதனால் ஏற்படும் பிரச்சனை மிக மிக சிறியது.

Source: CNBC

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்