Aran Sei

ஹத்ராஸ் சம்பவம்: உ.பி.காவல்துறையின் கூற்றுக்கு முரணாகக் கருத்து தெரிவித்த அரசு மருத்துவர் பதவி நீக்கம்

த்தரப் பிரதேச மாநில ஹத்ராஸ் பகுதியில் கும்பல் பாலியல் வன்புணர்வால்  கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி 15 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் போராடி உயிரிழந்த 19 வயதேயான சிறுமியின் மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அச்சிறுமி தனது மரண வாக்குமூலத்தில் “தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக” தெளிவாகக் கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாரும் அதை உறுதிப்படுத்தினர். உ.பி மாநில அரசும் காவல்துறையும் “அச்சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதற்கான எந்தத் தடயமும் இல்லை” எனத் தொடர்ந்து மறுத்து வருகின்றன. இந்நிலையில் சிறுமி அனுமதிக்கப்பட்டு 14 நாட்களாக சிகிச்சை பெற்ற ‘ஜவகர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை’ தலைமை மருத்துவ அதிகாரி அசீம் மாலிக் மருத்துவமனையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் காவல்துறையின் வாதத்திற்கு முரண்பட்டுக் கருத்து தெரிவித்திருந்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமி உயிரிழந்து இரண்டு நாட்களுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த உ.பி மாநிலச் சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் பிரவீன் குமார், “தடயவியல் அறிக்கையின் அடிப்படையில் சிறுமியின் உடம்பிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் விந்தணுக்கள் இல்லை” எனவும், “அதனால் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்படவில்லை” எனவும் கூறினார்.

இதுதொடர்பாக மருத்துவர் அசீம் மாலிக் கடந்த அக்டோபர் 5-ம் தேதி த இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “விந்தணுக்கள் 2 – 3 நாட்களுக்குமேல் உயிர்வாழாது என்பதால், அரசு வழிகாட்டுதலின்படி தடயவியல் ஆதாரம், சம்பவம் நடந்து 72 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட வேண்டும்; அதிகபட்சம் 96 மணிநேரம்; ஆனால் இச்சிறுமியின் உடம்பில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் நாளிலிருந்து 11 நாட்களுக்குப்பின் எடுக்கப்பட்டவை. ஆதலால் இத்தடயவியல் அறிக்கையை நம்ப முடியாது” எனக் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்தான் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் (AMU) கீழ் செயல்படும் ஜவகர்லால் நேரு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் (JNMCH) தலைமை மருத்துவ அதிகாரியான அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஜவகர்லால் நேரு மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மாணவரான அசீம், கடந்த ஆகஸ்ட் மாதம், முன்பு பணியில் இருந்த நபருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், அவருக்குப் பதிலாக தற்காலிகத் தலைமை மருத்துவ அதிகாரி பதவியில் நியமிக்கப்பட்டார். மருத்துவர் அசீமின் பதவிக்காலம் நவம்பர் மாதம் இறுதிவரை இருக்கும் நிலையில், அக்டோபர் 20-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அவசர அறிவிப்பில், “கொரோனா நோய்த்தொற்று காலத்தில் மருத்துவர் அசீம் தம் கடமையைச் சரிவரச் செய்வதில்லை என்று மருத்துவமனை ஊழியர்களிடத்தில் இருந்து புகார் வருவதன் காரணத்தால், அவர் உடனடியாக அப்பதவியில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக” அறிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக த வயர் ஆங்கில இணையத்தளத்திடம் பேசிய மருத்துவர் அசீம் மாலிக், “நான் பத்திரிகையிடம் பேசிய செய்தி வெளியான அடுத்த நாளே, தலைமை மருத்துவக் கண்காணிப்பாளர், கல்லூரி முதல்வர் இருவரையும் அழைத்து மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர், கடுமையாகத் திட்டியுள்ளார்; நான் பதவி நீக்கம் செய்யப்படுவேன் என்று முன்பே எனக்கு தெரியும்; ஆனால் நான் பத்திரிகையிடம் பேசியதில் எந்தத் தவறான தகவலும் அளிக்கவில்லை. எந்த மருத்துவரை வேண்டுமானாலும் கேளுங்கள் அவரும் இதையேதான் சொல்லியிருப்பார்” என்று தன் கருத்தில் உறுதியாக இருந்தார்;

மேலும், “நான் அளித்த பேட்டி தலைப்புச் செய்தியாகப் பரபரப்பாகப் பேசப்பட்ட காரணத்தால், நிர்வாக ரீதியாக நான் முறையாகப் பணிசெய்யவில்லை என்று சொல்லிப் பழி வாங்கப்பட்டிருக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக த வயர் இணையத்தளம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தாரிக் மன்சூரைத் தொடர்புகொண்டபோது, அவர் சார்பில் பேசிய பல்கலைக்கழகச் செய்தித்தொடர்பாளர் சஃபி கிட்வைய், “மருத்துவர் அசீம் மாலிக்கின் பதவிநீக்கம் முழுக்க முழுக்க நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட முடிவு” எனவும் “த இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டிக்கு இதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” எனவும் தெரிவித்தார். மேலும் “மருத்துவர் அசீம் தற்காலிகமாகவே இப்பதவியில் நியமிக்கப்பட்டார், கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மருத்துவமனையில் குறைந்து வருவதால் தற்சமயம் அவரின் சேவை தேவைப்படவில்லை என்பதால் இம்முடிவை மருத்துவமனை நிர்வாகம் எடுத்திருப்பதாகவும் இதில் எவ்வித அரசியல் தலையீடுகளும் இல்லை” எனவும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மருத்துவமனையிலிருந்து சேகரித்த தகவலின் அடிப்படையில், மருத்துவர் அசீம் மாலிக் பதவி நீக்கத்தை மறைக்க, மற்ற இரண்டு மருத்துவ அதிகாரிகளும் ‘கடமையை முறையாகச் செய்யவில்லை’ என்ற காரணம் கூறி, பதவிநீக்கம் செய்யப்படவிருப்பதாக த வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹத்ராஸ் சம்பவத்தில் உ.பி. மாநில அரசு, காவல்துறை மற்றும் தற்போது விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுத்துறை ஆகியோரின் செயல்பாடுகள், தொடர்ந்து பாதிக்கப்பட்ட பட்டியல்சாதி சிறுமிக்கு எதிராகவும் அவர் குடும்பத்திற்கு மற்றும் அவர்களுக்கு ஆதரவாகக் களத்தில் நிற்பவர்களுக்கும், கருத்து தெரிவிப்பவர்களுக்கும் எதிராகவும் இருப்பதால் அரசு நிர்வாகத்தின் அனைத்துப் பிரிவினரும், இச்சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்ற முனைகின்றனரா என்கிற ஐயத்தை தவிர்க்கமுடியவில்லை.

ஹத்ராஸ்: சாதிய, பெண் விரோதப் பாரம்பரியங்களின் குவியல் : உண்மை அறியும் அறிக்கை

மேலும் உயிரிழந்த சிறுமியின் நடத்தையைக் கொச்சைப்படுத்தியும் பாதிக்கப்பட்ட அக்குடும்பத்தைக் குற்றம் சாட்டியும் சில ஊடகங்கள் செய்தி வெளியிடுவதன் மூலமாக இவர்கள் மீதான நம்பகத்தன்மை குறைந்து, அந்தச் சந்தேகம் இன்னும் வலுப்பெறவே செய்கிறது.

தேசத்தின் கூட்டு மனசாட்சியின் கோரமுகத்தை அப்பட்டமாக வெளிகாட்டியுள்ள இக்கொடூரக் குற்றத்தில், உண்மையான குற்றவாளிகள் அனைவருக்கும் அவர்கள் நிகழ்த்திய அனைத்து மனிதத்தன்மையற்ற செயல்கள் அனைத்திற்கும் உரிய தண்டனையை விரைவாகப் பெற்றுத்தருவதுதான், பாதிக்கப்பட்டு உயிரிழந்த அச்சிறுமிக்கு நீதி வழங்குவது மட்டுமல்லாது அனைத்துப் பெண்களுக்கும் குறிப்பாகப் பட்டியல்சாதி பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்கொடுமைகள் பற்றி, ஆணாதிக்க சாதிய பொதுச்சமூகம் கொண்டிருக்கும் கள்ள மௌனத்தைக் கலைக்கும் விதமாகயிருக்கும்.

(கட்டுரையாளர் நவநீத கண்ணன் மருத்துவ இளங்கலை மாணவர்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்