Aran Sei

‘கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் அனுமதியை பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்காது, தனியாருக்கு வழங்கியது ஏன் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி

டுப்பூசி தயாரிப்பில் பொதுத்துறை நிறுவனங்களைப் புறக்கணித்துவிட்டு தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கையில், நோய்த்தொற்றாலும் மரணங்களின் எண்ணிக்கையாலும் மக்கள் கதிகலங்கி நிற்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் இந்நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை மக்கள் மத்தியில் அச்சத்தை அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

“தடுப்பூசி தேவையை உரிய முறையில் கணக்கில் கொள்ளாத மத்திய அரசு தற்போது இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமே தடுப்பூசி தயாரிப்பிற்கான அனுமதியை வழங்கிவிட்டு, தடுப்பூசி தயாரிப்பில் மிக நீண்ட அனுபவமும், பெருமளவிற்கான தயாரிப்புத் திறன் கொண்டதுமான பொதுத்துறை நிறுவனங்களை முற்றாக நிராகரித்துள்ளது. இத்தகைய பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பின் மூலமாகத்தான் உலகிலேயே பல்வேறு நோய்களுக்கான தடுப்பூசிகள் தயாரிப்பில் இந்தியா முதலிடம் வகித்து வந்தது.” என்று கே.பாலகிருஷ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘கொரோனா தடுப்பூசி தொற்றை தடுக்காது; ஆனால், உங்கள் உயிரை காக்கும் ’ – டெல்லி எய்ம்ஸ் இயக்குனர்

குறிப்பாக, மத்திய பொதுத்துறை நிறுவனங்களான செங்கல்பட்டில் இயங்கி வரும் `ஹிந்துஸ்தான் பயோடெக்’, நீலகிரியில் செயல்படும் ‘பாஸ்டியர் ஆய்வகம்’, சென்னையில் உள்ள ‘பி.சி.ஜி. ஆய்வகம்’, சிம்லாவில் உள்ள ‘மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம்’ உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் தடுப்பூசி உற்பத்தியை மேற்கொண்டிருந்தால் நாட்டின் ஒட்டுமொத்தத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என்று அவர் விளக்கியுள்ளார்.

“மத்திய அரசு இந்த நிறுவனங்களை உற்பத்தியில் ஈடுபடுத்தியிருந்தால் இன்று ஏற்பட்டிருக்கும் தடுப்பூசி பற்றாக்குறைக்கும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்திற்கும் மக்கள் ஆளாக வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது. ஆனால், மத்திய அரசு, சீரம் இன்ஸ்டியூட், பாரத் பயோடெக் ஆகிய இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி செய்து அவர்கள் மூலம் தடுப்பூசியை உற்பத்தி செய்யப் பணித்திருப்பதும் தற்போது அதிக விலை கொடுத்து தடுப்பூசியை மாநில அரசுகள் வாங்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியிருப்பதும் நாட்டு மக்களின் உயிரோடு விளையாடும் காரியமாகும்.” என்று கே.பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஒரே தடுப்பூசிக்கு 3 விலை எவ்வாறு இருக்க முடியும் – பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பிய சோனியா காந்தி

தற்போதைய நிலைமையையும், தேவையையும் கவனத்தில் கொண்டு, பொதுத்துறை நிறுவனங்களில் தடுப்பூசிகளைத் தயாரிக்கும் அனுமதியை உடனடியாக வழங்குவதோடு, தயாரிப்பைத் தொடங்குவதற்கான நிதி உதவியையும் மத்திய அரசே வழங்க வேண்டும் என்றும் கட்டாய உரிமம் (Compulsory Licencing) எனும் முறையை அமலாக்குவதன் மூலம் அரசு பொதுத்துறை நிறுவனங்களிலும் தேவையான தடுப்பூசிகளை விரைந்து தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“சந்தையில் தடுப்பூசி விற்பனை எனும் கொள்கையைத் திரும்பப் பெறுக, அண்மையில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய தடுப்பூசி கொள்கையின் மூலம் இனிமேல் தடுப்பூசி, மருந்துக் கடைகள், தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட பரவலான இடங்களில் கிடைக்கும், அதை வாங்கி மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அனைத்து மக்களுக்கும் முற்றிலும் இலவசமாகத் தடுப்பூசி அளிக்க வேண்டிய மத்திய அரசு, தனது கடமையிலிருந்து விலகி நிற்பதோடு சந்தையை நோக்கி மக்களைத் தள்ளிவிடுகிற ஆபத்தான முடிவையும் எடுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.” என்று கே.பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

லாபமற்ற விலையில் தடுப்பூசி மருந்தை வழங்கத் தயார் – ஃபைசர் நிறுவனம் தகவல்

“ஏற்கெனவே கடந்த ஆண்டு கொரோனா பரவலின்போது மக்களின் அச்சத்தைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் மருத்துவமனைகளிலும், கள்ளச் சந்தைகளிலும் பகிரங்கமாக நடைபெற்ற கட்டணக் கொள்ளையைப் போலவே, இம்முறையும் சந்தைகளில் தடுப்பூசியின் விலை பலமடங்கு உயர்த்தப்படுவதற்கான வாய்ப்பையே அரசின் முடிவு உருவாக்கும் என்பதால் சந்தையில் தடுப்பூசி விற்பனை எனும் அரசின் கொள்கையைத் திரும்பப் பெற்று அனைவருக்கும் இலவசத் தடுப்பூசி எனும் முடிவை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்