Aran Sei

பக்க விளைவை ஏற்படுத்துமா கொரோனா தடுப்பூசி? பரிசோதனை முடிவுகள் வராமல் அவசர அனுமதி ஏன்? – கே.பாலகிருஷ்ணன் கேள்வி

முழுமையான பரிசோதனை தரவுகள் பெறாமல் கொரோனா தடுப்பூசிக்கு அவசரப்படுவது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

கொரோனா தடுப்பூசி முதல்கட்டமாக ஜனவரி 16 ஆம் தேதி நாடு முழுவதும் முன்களப் பணியாளர்களுக்கு செலுத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பினைத் தொடர்ந்து, தமிழகத்திற்கு சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்ட் தடுப்பூசிகள் 5.36 லட்சம் வந்துள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் 20 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசியும் வந்துள்ளது.

தடுப்பூசிக்கு அவசர அனுமதி – சு.வெங்கடேசன் சொல்லும் காரணம் என்ன?

இதுகுறித்து, இன்று (ஜனவரி 14) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தடுப்பூசிகள் தயாரிப்பில், தடுப்பூசிக்கு நோயைத் தடுக்கும் ஆற்றல் உள்ளதா, இதனால் உடல்ரீதியான பாதிப்புகள் வேறு ஏதேனும் ஏற்படுமா, பக்க விளைவுகள் பாதிப்பை ஏற்படுத்துமா என்பதையெல்லாம் தடுப்பூசி தயாரிப்பின் போது மூன்று கட்ட பரிசோதனைகளை நடத்திய பின்னரே தடுப்பூசியின் ஆற்றல் தொடர்பான விபரங்களை முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்.” என்று கூறியுள்ளார்.

‘முதல் கொரோனா தடுப்பூசியை பிரதமர் எடுத்துக்கொள்ள வேண்டும்’ – காங்கிரஸ் அறிவுரை

இதுவரை இரண்டு கட்ட பரிசோதனை தரவுகளே வெளிவந்துள்ளன. மூன்றாம் கட்ட பரிசோதனை தரவுகள் முழுமையாக வெளிவராத நிலையில், அவசர கோலத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வது மருத்துவ அறிவியலுக்கு பொருத்தமானதல்ல என்று எச்சரிக்கும் கே.பாலகிருஷ்ணன், “மக்கள் மத்தியில் அச்சம், பதற்றம் ஏற்படுவது தவிர்க்க இயலாதது. கொரோனா நோய்த் தொற்று சற்று குறைந்துள்ள சூழ்நிலையில் முழுமையான பரிசோதனை தரவுகள் வெளிவந்த பிறகு தடுப்பூசி செலுத்துவதே மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

பாரத் பயோ டெக் நிறுவனத்தின் தடுப்பூசி கோவேக்சின் உற்பத்தி தொடக்க நிலையிலேயே உள்ளது என தெரிகிறது என்றும் மூன்றாம் கட்ட தரவுகளும், செயல்திறனும் உறுதிப்படுத்தப்படுவதை தொடர்ந்தே உற்பத்தியை முழுமையாக முன்னெடுக்க முடியும் என்று கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பூசி- புலம்பெயர்ந்தோரின் வெற்றிக் கதை

தடுப்பூசி தயாரித்துள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா நிறுவனமும், பாரத் பயோடெக் நிறுவனமும் மக்கள் அச்சத்தை அகற்றும் வகையில் மூன்றாம் கட்ட பரிசோதனை தரவுகளையும், அதன் செயல்திறனையும் முழுமையாக வெளியிட வேண்டுமெனவும், இந்திய மருத்துவ கவுன்சில் கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பாக வலியுறுத்தியுள்ளார்.

மேற்கண்டபடி கொரோனா தடுப்பூசிகளின் செயலாற்றலையும், பாதுகாப்பு அம்சங்களையும் உறுதி செய்து அனைத்து மக்களுக்கும் இலவசமாக குறிப்பிட்ட கால வரையறைக்குள் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்