Aran Sei

கொரோனா தடுப்பு மருந்துகள் சோதனை முடிவுகள் – விலை கட்டுப்படியாகுமா?

டுத்த ஆண்டு இறுதிக்குள் 100 கோடிக்கும் அதிகமான பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட முடியும் என்று தி கார்டியன் தெரிவிக்கிறது. அமெரிக்க உயிரிதொழில்நுட்ப நிறுவனமான மடெர்னா அதன் mRNA அடிப்படையிலான தடுப்பூசி சோதனையில் 95% பேருக்கு நோய்த் தடுப்பு கிடைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

சென்ற வாரம் ஃபைசர்/பயோஎன்டெக் தடுப்பு மருந்து 90% திறன் உடையதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஃபைசர்/பயோஎன்டெக் மற்றும் மடெர்னா தடுப்பு மருந்துகள் mRNA என்ற மரபணு பொருளை உடலுக்குள் செலுத்துகின்றன. இந்த மரபணு பொருள் “ஸ்பைக் புரதங்களை” உற்பத்தி செய்வதற்கான நிரல்களைக் கொண்டுள்ளன. இந்த “ஸ்பைக் புரதங்கள்” கொரோனா நுண்ணுயிரியின் வெளிப்புறம் இருந்து கொண்டு அது மனித செல்களுக்குள் செல்வதை சாத்தியமாக்குகின்றன.

தடுப்பு மருந்துகளில் செலுத்தப்படும் mRNA உடலுக்குள் “ஸ்பைக் புரதங்களை” உற்பத்தி செய்வித்து, செல்களின் வெளிப்புறம் இடம் பெறச் செய்து அவற்றுக்கு எதிரான உடலின் எதிர்ப்பு சக்தியை தூண்டுகின்றன.

“மடெர்னா சோதனைகளில் வயதானவர்களும் அதிக பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புடையவர்களும் சேர்க்கப்பட்டிருந்தது, கொரோனா நோய்த்தொற்றினால் மிக அதிகமாக பாதிக்கப்படும் வாய்ப்பு உடையவர்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கும்” என்ற நம்பிக்கை அளிப்பதாக லண்டன் இம்பீரியல் கல்லூரியின் பேராசிரியர் பீட்டர் ஓப்பன்ஷா தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில் உலகளாவிய கொரோனா நோய்த் தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 5.43 கோடியாகவும், மொத்த உயிரிழப்புகள் 13.1 லட்சமாகவும் உள்ளது. தினமும் 4.7 லட்சம் புதிய தொற்றுகள் ஏற்படுகின்றன, 6,248 உயிரிழப்புகள் நிகழ்கின்றன என்று கார்டியன் வெளியிட்டுள்ள புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

சென்ற வாரம் அறிவிக்கப்பட்ட ஃபைசர் தடுப்பு மருந்தை உற்பத்தியிலிருந்து நோயாளிக்கு செலுத்துவது வரை -70 டிகிரி முதல் -80 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும்.

மடெர்னா தடுப்பு மருந்தை போக்குவரத்துக்கும் சேமிப்புக்கும் ஆறு மாதங்கள் வரை -20 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையிலும், 30 நாட்களுக்கு வழக்கமான குளிர்சாதன பெட்டி வெப்பநிலையான 2 டிகிரி முதல் 8 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையிலும் வைத்திருந்தால் போதும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

2021 இறுதிக்குள் 100 கோடி முறைக்கான மருந்துகளை உற்பத்தி செய்ய முடியும் என்று மடெர்னாவும், 130 கோடி முறைக்கான மருந்துகளை உற்பத்தி செய்ய முடியும் என்று ஃபைசரும் தெரிவித்துள்ளன. இந்த இரண்டு தடுப்பு மருந்துகளையும் ஒரு நபருக்கு இரண்டு முறை ஊசி மூலம் செலுத்த வேண்டும். இந்த மருந்துகளின் சோதனை முடிவுகளை ஒழுங்குமுறை அதிகாரிகள் வரும் வாரங்களில் சரிபார்க்கவுள்ளனர்.

30,000 தன்னார்வலர்கள் மீது சோதிக்கப்பட்டு வரும் மடெர்னா தடுப்பு மருந்து அமெரிக்காவுக்கு வெளியே அடுத்த ஆண்டுதான் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020 இறுதிக்குள் அமெரிக்காவுக்குள் வழங்குவதற்கு 2 கோடி மருந்துகளை தயாரித்து விட முடியும் என்றும் 50 கோடி முதல் 100 கோடி மருந்துகளை உலக அளவில் உற்பத்தி செய்ய முடியும் என்று மடெர்னா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கு 10 கோடி முறைக்கான மருந்துகளை வழங்க மடெர்னா ஒப்பந்தம் போட்டுள்ளது, கூடுதலாக 40 கோடி முறைக்கான மருந்துகளை வாங்கவும் அமெரிக்காவுக்கு உரிமை உள்ளது. ஜப்பான், கனடா, ஸ்விட்சர்லாந்து, கத்தார், இஸ்ரேல் போன்ற நாடுகளும் ஒப்பந்தம் போட்டுக் கொண்டுள்ளன. ஐரோப்பிய ஆணையம் 8 கோடி முதல் 16 கோடி முறைக்கான மருந்துகளை வாங்க மடெர்னாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது என்று தி கார்டியன் செய்தி தெரிவிக்கிறது.

  • மடெர்னாவின் தடுப்பு மருந்தின் விலை இரண்டு முறை செலுத்துவதற்கு $50 (சுமார் ரூ 3,750) முதல் $60 (சுமார் ரூ 4,500) வரை செலவாகும்.
  • அஸ்ட்ராஜெனிக்கா/ஆக்ஸ்ஃபோர்ட் தடுப்பு மருந்து ஒரு முறைக்கு $5 (சுமார் ரூ 375) செலவு பிடிக்கும்.
  • ஜான்சன் & ஜான்சன் மற்றும் சனோஃபி, ஜிஎஸ்கே தடுப்பு மருந்துகள் ஒரு முறைக்கு சுமார் $10 (சுமார் ரூ 750) செலவு வைக்கும்.
  • ஃபைசர் இரண்டு முறைக்கான மருந்துக்கு $30 (சுமார் ரூ 2250) விலை நிர்ணயித்துள்ளது.

இந்நிலையில் குறைந்த, நடுத்தர வருமான நாடுகளிலுள்ள மக்களுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி கிடைக்க 18 நிறுவனங்கள் சேர்ந்த கூட்டமைப்பு ஒன்றாக செயல்படுகிறது.

குறைந்த, நடுத்தர வருமான நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசி – மருந்து நிறுவனங்கள் நம்பிக்கை

வழக்கமாக 10 ஆண்டுகள் பிடிக்கும் தடுப்பூசி உருவாக்க நிகழ்முறையை அதன் ஒரு சிறிய பகுதியில் செய்து முடிக்கும்படி சுருக்குவது சரியான திட்டமிடலுக்கும் விலை நிர்ணயிப்புக்கும் அடிப்படை சவாலாக உள்ளது என்று ஒரு மூத்த ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி கூறியுள்ளதாக பைனான்சியல் டைம்ஸ் தெரிவிக்கிறது.

“இதனை 12 முதல் 18 மாதங்களுக்குள் சுருக்க முயற்சிப்பதோடு மட்டுமில்லாமல், பல கோடி எண்ணிக்கையில், பல நூறு கோடி எண்ணிக்கையில் உற்பத்தி செய்ய முயற்சிக்கிறோம். இது மிகவும் அபாயம் நிறைந்த நிகழ்முறை” என்று அவர் கூறியுள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தை உருவாக்கியவரும், உலகெங்கும் அறக்கட்டளைகள் மூலம் தடுப்பூசிகளை வழங்குவதில் ஈடுபடுபவருமான பில் கேட்ஸ், “ஏழை நாடுகள் ஒரு முறை மருந்துக்கு $3 (சுமார் ரூ 225) அல்லது அதற்கும் குறைவான விலையில் பெறும்படி பணக்கார நாடுகள் மானியம் அளிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

“பணக்கார நாடுகள் நிலையான செலவுகளில் பெரும்பகுதியையும், நடுத்தர வருமான நாடுகள் சிறிதளவு நிலையான செலவுகளையும், ஏழை நாடுகள் ஒரு முறைக்கான மருந்தை உற்பத்தி செய்வதற்கான செலவை மட்டும் கொடுப்பதாக மூன்று அடுக்கு விலையை நிர்ணயிக்க வேண்டும்” என்று பில், மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் பில் கேட்ஸ் ஃபைனான்சியல் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்திருக்கிறார்.

ஐக்கிய நாடுகளின் ஆதரவிலான கவி (Gavi) என்ற தடுப்பு மருந்து கூட்டணியும் கேட்ஸ் அறக்கட்டளையும் அஸ்ட்ராஜெனிகா, நோவாவேக்ஸ் தடுப்பு மருந்துகளை உரிமம் பெற்று 20 கோடி முறைக்கான மருந்துகளை ஏழை மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கு, ஒரு முறைக்கான மருந்துக்கு அதிகபட்சம் $3 விலையில் (சுமார் ரூ 225) வழங்குவதற்கான ஒப்பந்தம் போட்டுள்ளது. இன்னும் பல மடங்கு மருந்தை பெறுவதற்கான உரிமையையும் அவை பெற்றுள்ளன.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்