Aran Sei

“ஒரு சில மானிட்டர்களும், ஒரு வென்டிலேட்டரும் ஐசியு ஆகி விடாது” : டாக்டர் கலந்த்ரி

கொரோனா நோய்த்தொற்றை சமாளிப்பதற்கு ஆரம்ப சுகாதார நிலையங்களும், மாவட்ட மருத்துவமனைகளும் தயாராக இல்லாத நிலையில் அதிகமான சுமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மீதுதான் விழுகிறது என்கிறார் வார்தாவில் உள்ள மகாத்மா காந்தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் இயக்குநர் டாக்டர் எஸ்.பி கலந்த்ரி. டாக்டர் கலந்திரியின் நேர்முகம் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் வெளியாகியுள்ளது.

“மெலிதான அல்லது மிதமான கொரோனா நோய்க்குறிகள் உள்ள கிராமத்து மக்கள் அருகில் உள்ள பொது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் வார்தா நகரத்துக்கு வந்து விடுவது ஏன்” என்ற கேள்விக்கு

“ஆரம்ப சுகாதார நிலையங்கள், இரண்டாம் நிலை மருத்துவமனைகள், மூன்றாம் நிலை மருத்துவ வசதிகள் இவற்றுக்கு இடையேயான உறவு மொத்தமாக முறிந்து போயிருப்பதை கொரோனா நோய்த் தொற்று வெளிப்படுத்தியிருக்கிறது. அதற்கான விலையை நாம் இப்போது கொடுக்கிறோம்” என்கிறார் டாக்டர் எஸ்.பி கலந்திரி.

ndtv.com வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தின்படி அக்டோபர் 18 நிலவரப்படி இந்தியாவில் 7.83 லட்சம் கொரோனா நோயாளிகள் உள்ளனர், கொரோனா நோய்த் தொற்றால் ஏற்கனவே 1.14 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில் மொத்தம் 74.9 லட்சம் பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது.

போதுமான மருத்துவர்களையும் செவிலியர்களையும், மருத்துவ உதவியாளர்களையும் நியமிக்காமல் மாவட்ட மருத்துவமனைகளையும், ஆரம்ப சுகாதார நிலையங்களையும் அரசு புறக்கணித்திருக்கிறது என்கிறார் டாக்டர் கலந்திரி..

“மாவட்ட மருத்துவமனைகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காலியிடங்கள் இப்போது கூட நிரப்பப்படவில்லை. அங்கு மருத்துவர்களும், உள்ளூர் செவிலியர்களும், மருத்துவ உதவியாளர்களும் கொரோனா நோய்த் தொற்றை கையாள்வது குறித்து போதுமான அளவு பயிற்றுவிக்கப்படவில்லை.  முறையாக திட்டமிட்டு மருத்துவ ஊழியர்களை பயிற்றுவிக்க அரசுதவறி விட்டது”

பெரும்பாலான கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்கள் நகரத்துக்கே செல்ல வேண்டியிருக்கிறது ஏன் என்பதை டாக்டர் கலந்திரி விளக்குகிறார்.

“கிராமப்புறத்தைச் சேர்ந்த ஒருவர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்றால், அவரை மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்புவதைத் தவிர வேறு ஒன்றும் அவர்களால் செய்ய முடியவில்லை. மாவட்ட மருத்துவமனைகளில் இருந்து மருத்துக் கல்லூரிக்கு அனுப்பி விடுகிறார்கள்.”

“இதனால் மூன்றாம் நிலை மருத்துவ நிலையங்களிலும் மருத்துவக் கல்லூரிகளிலும் கொரோனா நோயாளிகள் பெரும் எண்ணிக்கையில் குவிந்து விடுகின்றனர். அவற்றின் மீது அளவுக்கதிகமான சுமை ஏறியுள்ளது.”

பெரிய மூன்றாம் நிலை மருத்துவமனைகளில் கொரோனா சுமையால் பிற நோயாளிகளுக்கான சிகிச்சைகள் எப்படி பாதிக்கப்பட்டிருக்கின்றன என்பது குறித்து டாக்டர் கலந்திரி குறிப்பிடுகிறார்.

“பல மருத்துவமனைகள் கொரோனா அல்லாத பிற நோய்களுக்கான சிகிச்சையை பெருமளவு குறைத்திருக்கின்றன. இருந்தாலும் நாங்கள் கொரோனா நோயாளிகளையும், கொரோனா அல்லாத நோயாளிகளையும் சமன் செய்வது என்ற அசாத்திய பணியை செய்து வருகிறோம். இல்லையென்றால் இருதய பிரச்சனை, நுரையீரல் பிரச்சனை, அல்லது புற்றுநோய் கொண்ட நோயாளிகள் எங்கு போவார்கள்? புற்றுநோய்க்கான சிகிச்சையை தாமதித்தால் அதற்கு அறுவை சிகிச்சை சாத்தியமில்லாமல் போய் விடலாம்.” என்கிறார் டாக்டர் கலாந்திரி.

“ஏற்கனவே கிராமப் புற மக்கள் மருத்துவ வசதிகளை பெறுவது போராட்டமாக உள்ளது. அவர்களுக்கு சிகிச்சை மறுத்தால் அதன் பிறகு அவர்கள் திரும்பி வர மாட்டார்கள். உள்ளூர் போலி மருத்துவர்களிடம் சிக்கி விடுவார்கள்” என்று கிராமப் புற மக்கள் மீது அக்கறையுடன் கூறுகிறார், டாக்டர் கலந்திரி.

“அரசு மாவட்ட மருத்துவமனைகளுக்கு வென்டிலேட்டர்களையும் ஆக்சிஜனையும் அதிக அளவு கொடுத்திருக்கிறது அல்லவா” என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்

“ஒரு சில ஐசியு மானிட்டர்கள், வென்டிலேட்டர்கள், ஹீமோ டயாலிசிஸ் கருவிகளை மாவட்ட மருத்துவமனைகளுக்கு அரசு அனுப்பி வைத்திருக்கிறது. ஆனால், அவற்றை பயன்படுத்துவதற்கு அங்குள்ளவர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படவில்லை”

வெறும் கருவிகள் மட்டும் போதாது, போதுமான மருத்துவர்களும், பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்களும் தேவை என்பதை வலியுறுத்துகிறார் டாக்டர் கலந்திரி.

“ஒரு சில மானிட்டர்களும், ஒரு வென்டிலேட்டரும் இருந்தாலே அது ஐசியு ஆகி விடாது. வென்டிலேட்டரை சரியாக பயன்படுத்தத் தெரியா விட்டால் அது உயிரிழப்புக்கோ, மோசமான பாதிப்புக்கு இட்டுச் செல்லலாம். மாவட்ட மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் அவற்றைப் பயன்படுத்த தயங்குகிறார்கள். ஏனென்றால், அவர்களுக்கு தங்களது சொந்தத் திறமை மீது நம்பிக்கை இல்லை” என்று தெரிவிக்கிறார் டாக்டர் கலந்திரி.

“எனவே மக்கள் உள்ளூர் மருத்துவ நிலையங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் போய் விடுகிறார்கள். தனியார் மருத்துவமனைகளில் மேலும் சிறந்த மருத்துவ கருவிகள் இருப்பதால் அவை அரசு மருத்துவமனைகளை விட சிறந்தவை என்று நம்புகிறார்கள். ஆனால், தனியார் மருத்துவமனைகளில் தேவையில்லாத சிடி ஸ்கேன்களை எடுக்க வைக்கிறார்கள், PPE, மருந்துகள், எக்ஸ்ரே, கண்காணிப்பு ஆகியவற்றுக்கு அதிக பணம் வசூலிக்கிறார்கள்.” என்று தனியார் மருத்துவக் கொள்ளையைப் பற்றி கூறுகிறார் டாக்டர் கலந்திரி.

(மகாராஷ்டிராவில் உள்ள வார்தாவில் 1944-ம் ஆண்டு டாக்டர் சுசீலா நாயரால் தொடங்கப்பட்ட கஸ்தூர்பா மருத்துவமனை 1969-ம் ஆண்டு மகாத்மா காந்தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் ஆக விரிவாக்கப்பட்டது, டாக்டர் சுசீலா நாயர் காந்தியடிகளின் தனிப்பட்ட மருத்துவராக பணி புரிந்தவர்.)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்