Aran Sei

கொரோனா வார்டு பணிச்சுமையில் அரசு மருத்துவர்கள்

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கையையும் செவிலியர்களின் எண்ணிக்கையையும் உயர்த்தக்கோரி, கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்துவந்த போராட்டத்திற்கு அரசு செவி சாய்க்கவில்லை என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கென்று படுக்கைகளின் எண்ணிக்கைகளைத் தமிழக அரசு அதிகரித்துள்ளது. இது வரவேற்புக்குரியது. ஆனால், படுக்கைகளை அதிகரித்ததற்கு ஏற்ப மருத்துவர்களையோ, செவிலியர்களையோ அரசு அதிகரிக்கவில்லை. இதனால் மருத்துவர்களும் செவிலியர்களும் கடுமையான பணிச்சுமைக்கு உள்ளாகி உள்ளனர்” என்று அந்த அமைப்பின் செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

“நாள்தோறும் 6 மணி நேர பணியை ஒரு வாரத்திற்குச் செய்த பின், சுகாதார பணியாளர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். அவர்களுக்குக் கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும். இது குறித்து அரசு அறிவிக்கைகள் இருந்தும் கூட சில மருத்துவமனைகள் அவ்விதிகளைப் பின்பற்றுவதில்லை” என்று ரவீந்திரன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அரண் செய்-யுடன் பேசிய தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் உறுப்பினரும் பயிற்சி மருத்துவருமான ஹரிகணேஷ் “கோவிட் வார்டில் பணியாற்றும் சில மருத்துவர்களுக்கு ஒரு முறைக்கும் மேல் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது” என்று கூறினார்.

“அரசாங்கம் அளிப்பதாகக் கூறிய ரூ.4 லட்ச நிவாரணத் தொகை மருத்துவர்களுக்கு மட்டுமா அல்லது பயிற்சி மருத்துவர்களுக்கும் தரப்படுமா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை” என்றும் ஹரிகணேஷ் கூறினார்.

’ஏற்கனவே, தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்பு (MD/MS) மற்றும் உயர் சிறப்புச் சிகிச்சை மருத்துவம் (DM/Mch) பயிலும் மருத்துவர்கள் அரசிடம் ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி கோரிக்கை வைத்துள்ளனர்’ என்றும் ஹரிகணேஷ் கூறினார்.

சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனைத் தொடர்புகொண்ட போது “பேரிடர் காலத்தில் அனைவருக்கும் பணிச்சுமை இருக்கிறது. மருத்துவர்களைத் தனிமைப்படுத்தும் விதியை பின்பற்றாத மருத்துவமனையின் விவரத்தைக் கொடுத்தால், அக்குற்றச்சாட்டு உண்மையாக இருப்பின் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

“அனைவரும் பாதுகாப்பு கவசங்கள் அணிந்தும் விதிமுறைகளைப் பின்பற்றியும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்” என்றும் “துப்புரவுத் தொழிலாளர்களின் விடுப்பை உறுதி செய்வது தான் எங்களுக்கு உண்மையில் சவாலாக இருக்கிறது” என்றும் ராதாகிருஷ்ணன் கூறினார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்