Aran Sei

மீண்டும் மீண்டும் பரிணாமம் அடையும் கொரோனா நோய்க்கிருமி – தொடர் தடுப்பூசிகள் தேவை

கொரோனோ நோய்க்கிருமியின் பரிணாம மாற்றமடைந்த வகைகள், தடுப்பு மருந்துகளின் சக்தியை பலனற்று போகச் செய்யலாம் என்று பிரிட்டிஷ் அறிவியலாளர் கூறியுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா நோய்க்கிருமியின் மூன்று முக்கியமான வகைகள், அறிவியலாளர்களுக்கு கவலையளிப்பதாக உள்ளது. அவை

  • 20I/501Y.V2 அல்லது B.1.351 என்று அறியப்படும் தென் ஆப்பிரிக்க வகை
  • 20I/501Y.V1 அல்லது B.1.1.7 என்று அறியப்படும் பிரிட்டிஷ் வகை
  • P1 என்று அறியப்படும் பிரேசிலிய வகை

பிரிட்டிஷ் வகை, மற்ற வகைகளை விட அதிகம் பரவும் திறன் கொண்டது, ஆனால், அதிக அளவு உயிர்க்கொல்லியாக இருக்க வேண்டியதில்லை என்று கூறும் ஐக்கிய முடியரசின் மரபியல் கண்காணிப்பு திட்டத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஷேரன் பீகாக், அது “உலகம் முழுவதும் பரவ” வாய்ப்புள்ளது என்று  தெரிவித்துள்ளார்.

இந்த வகை நோய்க்கிருமி பிரிட்டனின் கென்ட் பகுதியில் முதலில் கண்டறியப்பட்டது. அது பரிணாம மாற்றம் அடைந்து வருவதால் தடுப்பு மருந்தால் கிடைக்கும் பாதுகாப்பை பலவீனப்படுத்தி விடுகிறது என்று ஷேரன் பீகாக் கூறியுள்ளதாக தி ஹிந்து தெரிவிக்கிறது.

உலகெங்கிலும், கொரோனா நோய்த்தொற்றுக்கு இதுவரை 23.5 லட்சம் பேர் பலியாகியுள்ளனர், பல நூறு கோடி மக்களின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்டு விட்டிருக்கிறது என்று கூறும் தி ஹிந்து, ஆயிரக்கணக்கான புதிய வகை கிருமிகளில் ஒரு சில, தடுப்பு மருந்துகளை மாற்றி அமைப்பதையும் மக்களுக்கு கூடுதல் ஊசி போடுவதையும் அவசியமாக்குகின்றன என்கிறது.

“சில வாரங்களாக சுற்றி வரும் 1.1.7 வகை, மீண்டும் பரிணாம மாற்றம் அடையத் தொடங்கியிருப்பதால், தடுப்பு சக்தி ரீதியாகவும் தடுப்பு மருந்து திட்ட ரீதியாகவும் நமது அணுகுமுறையை அது பாதிக்கக் கூடும்” என்று ஷேரன் பீகாக் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.

பிரிட்டனின் முதன்மை அறிவியல் ஆலோசகர், பேட்ரிக் வேலன்ஸ், “பரிணாம மாற்றம் நடந்தது ஆச்சரியமளிக்கவில்லை” என்றும், “அது பிற இடங்களிலும் நடக்கும்” என்றும் கூறியுள்ளார்.

“இந்தக் குறிப்பிட்ட வகை பரிணாம மாற்றம், குறைந்தது 5 முறை நமது சமுதாயத்துக்கு உள்ளேயே நடந்திருக்கிறது. எனவே, இது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்” என்று ஷேரோன் பீகாக் கருத்து தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய்க்கிருமியின் பரிணாம மாற்றங்களை எதிர்கொள்வதற்கு பிரிட்டிஷ் மக்கள் தொடர்ந்து தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டியிருக்கும் என்று பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் புதன் கிழமை கூறியுள்ளார்.

ஃபைசர்/பயோஎன்டெக் தயாரித்த கொரோனா தடுப்பு மருந்தும், அஸ்ட்ராஜெனகா தயாரித்த தடுப்பு மருந்தும் பிரதான பிரிட்டிஷ் வகைக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கின்றன என்று தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்