கொரோனா நோயை தடுக்கவும், சிகிச்சையளிக்கவும் மருந்து கண்பிடித்திருக்கிறோம் என “வாழும் கலை” ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்திருப்பதாக ஐ.ஏ.என்.எஸ் சொல்கிறது.
கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கியதில் இருந்தே, இந்தியாவில் பல ஆயுர்வேத மருந்துக்களும், மூலிகை மருந்துக்களும் கொரொனாவை தடுக்கும் என விளம்பரப்படுத்தப்பட்டன. எலுமிச்சை, இஞ்சி எல்லாம் வைத்து செய்யும் ‘ கொரோனா கசாயம்’ என ஒன்று வாட்ஸப் வழியே பலருக்கு பரப்பப்பட்டது. பொதுமக்கள் கண்களை மூடிக் கொண்டு இதை எல்லாம் நம்பினார்கள். தினமும் ‘கொரோனா கசாயத்தை’ குடிக்கவும் செய்தார்கள்.
‘நிலவேம்பு’ கசாயம் போல ‘கபசுர குடிநீர்’ என்றொன்று தமிழகத்தில் பரவலாக்கப்ப்பட்டது. இது நெஞ்சுச் சளிக்கு ஏற்ற மருந்து, நோய் எதிர்ப்பு சக்தி கூடும் என்றும் சொல்லப்பட்டது. இப்படி விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு மருந்தை இப்போது கொரோனா தடுப்பு மருந்து என்றும், கொரோனாவிற்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தலாம் என்றும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்திருக்கிறார்.
திங்களன்று நடந்த ஒரு இணையவழி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், தாங்கள் கண்டிபிடித்திருக்கும் மருந்தை ஆயுஷ் அமைச்சகத்துக்கு (ஆயுர்வேதா, யோகா, நேச்சுரோபதி, உனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி) அனுப்பி வைத்திருப்பதாக தெரிவித்தார். “நவீன மருத்துவத்தையும், பழங்கால மருத்துவத்தையும் நாம் பிரித்துப் பார்க்கக் கூடாது. அவை இரண்டையும் இணைக்கும் ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறை நமக்கு வேண்டும்” என்றும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கூறியிருக்கிறார்.
கொரோனாவை தடுக்கும் என்று சொல்லப்படும் இந்த மருந்துக்களை ஜெர்மனியை சேர்ந்த ஃப்ராங்க்ஃபர்ட் உயிரி தொழில்நுட்பவியல் புதுமை மையத்தின் வழிகாட்டுதலின் கீழ் பரிசோதனை செய்ததாக ஸ்ரீஸ்ரீ தத்வா நிறுவனம் சொல்கிறது.
தத்வாவின் முதன்மை அறிவியல் ஆசிரியர் ரவி ரெட்டி, “கபசுர குடிநீர், அம்ருத், இம்யூஜென் மற்றும் சவன்பிராஷ் ஆகிய ஸ்ரீ ஸ்ரீ தத்வா தயாரிப்புகளை வைத்து ஆய்வுக் கூட முறையில் பரிசோதனைகள் செய்யப்பட்டது. ஆய்வுக் கூட பரிசோதனைகளில் கபசுர குடிநீர் மாத்திரைகள் கொரோனா வைரஸ் வடிவங்களில் (strain) ஸ்பைக் கிளைக்கோபுரதத்தை தடுத்து நிறுத்தியது, இதன் வழியே வைரஸ் செல்களுக்குள் போவதை தடுத்தது” என்கிறார். வைரஸின் ஸ்பைக் கிளைக்கோ புரதம் தான் மனித உடலின் செல்லோடு வைரஸ் தன்னை இணைத்துக் கொள்ள உதவும் பகுதி.
இதற்கு முன், ஜூன் மாதம் ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் தாங்கள் கொரோனாவிற்கு மருந்து கண்டிபிடித்திருப்பதாக சொன்ன போது, ஆயுஷ் அமைச்சகம் அந்த மருந்துக்களை விளம்பரப்படுத்தக் கூடாது என்று தடை சொல்லியிருந்தது. பிறகு, மருந்துக்களை கொரொனாவை “மேலாண்மை” செய்வதாக விற்கலாம் ஆனால் கொரோனாவிற்கு தீர்வு என விற்கக் கூடாது என்றது.
சில நாட்களுக்கு முன், ஆயுஷ் அமைச்சகம் ஆயுர்வேத அறுவை சிகிச்சைகள் குறித்து விளம்பரம் செய்திருந்த போது, ஆயுர்வேதம், மூலிகை, சித்த மருத்துவம் ஆகியவற்றில் பயிற்சி செய்யும் மருத்துவர்கள் முறையான ஆய்வுகளோ, மருத்துவ இலக்கியமோ இல்லாமல், அலோபதியை வைத்துக் கொண்டு தங்களுக்கு விளம்பரம் செய்வதாக அலோபதி மருத்துவர்கள் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.