Aran Sei

கொரோனா தொடர்பாக பிரதமர் மோடி உரை – திட்டங்கள் வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் கோரிக்கை

பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதன் விவரம் பின்வறுமாறு :

“என்னுடைய பிரியத்திற்குரிய  நாட்டு மக்களே வணக்கம்,

கொரோனாவுக்கு எதிரான போரில், மக்கள் ஊரடங்கிலிருந்து இன்று வரை நாட்டின் அனைத்து மக்களும் நீண்ட பயணத்தை கடந்து வந்திருக்கிறார்கள். காலத்திற்கேற்ப பொருளாதாரத்திலும் வேகம் தெரிய தொடங்கியிருக்கிறது. நம்மில் பலரும் தங்களது பொறுப்பை நிறைவேற்றுவதற்கு, வாழ்க்கைக்கு வேகம் கொடுக்க, தினமும் வீட்டை விட்டு வெளியேறுகிறோம்.

பண்டிகைகளின் இந்த காலத்தில் சந்தைகளிலும் வெளிச்சம் மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. ஆனால், லாக் டவுன் முடிந்து விட்டாலும், வைரஸ் போகவில்லை என்பதை நாம் மறந்து விடக்கூடாது. கடந்த ஏழு, எட்டு மாதங்களில் ஒவ்வொரு குடிமக்களின் முயற்சியின் விளைவாக, நாடு இன்றைக்கு அடைந்திருக்கிற நல்ல நிலைமையை கெடுத்துவிடக் கூடாது. மேலும் முன்னேற்றங்கள் கொண்டு வர வேண்டும்.

இன்று நாட்டில் குணமடைந்து வருவோரின் விகிதம் நன்றாக இருக்கிறது. இறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது. ஒரு லட்சம் மக்கட்தொகையில் கிட்டத்தட்ட 5500 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதுவே, அமெரிக்கா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் இதே எண்ணிக்கை 25000 க்கு நெருக்கமாக இருக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு பத்து லட்சம் மக்கட்தொகையிலும் இறப்பு விகிதம் 83 ஆக இருக்கிறது. அதுவே, அமெரிக்கா, பிரேசில், பிரிட்டன், ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளில் இந்த எண்ணிக்கை 600 ஐயும் கடந்து இருக்கிறது.

உலகின் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்திருக்கிற நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியா தன்னுடைய அதிகப்படியான குடிமக்களை காப்பாற்றுவதில் வெற்றியடைந்திருக்கிறது. இன்று நம்முடைய நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு 90 லட்சத்திற்கும் அதிகமான படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. 12000 குவாரண்டைன் மையங்கள் இருக்கின்றன. கொரோனா பரிசோதனைகளுக்காக கிட்டத்தட்ட 2000 லேப்கள் செயல்படுகின்றன. விரைவிலேயே பரிசோதனைகளின் எண்ணிக்கை பத்து கோடியை கடந்து விடும். கொவிட் பெருந்தொற்றுக்கு எதிரான போரில் அதிகரித்துவரும் பரிசோதனை எண்ணிக்கை நம்முடைய பெரிய பலமாக இருந்து வந்திருக்கிறது.

சேவா பரமோ தர்ம என்பதன் அடிப்படையில் நம்முடைய மருத்துவர்கள், செவிலியர்கள், நம்முடைய சுகாதார பணியாளர்கள், நம்முடைய பாதுகாப்பு பணியாளர்கள் என பல்வேறு சேவை எண்ணம் கொண்டவர்கள் நாட்டின் இவ்வளவு பெரிய மக்கள் தொகையினருக்கு சேவையாற்றியிருக்கிறார்கள். இந்த முயற்சிகளுக்கும் அப்பால், இந்த சமயம் அலட்சியத்திற்கானதல்ல. இந்த காலம் கொரோனா ஒழிந்துவிட்டது என்று கருதிக் கொள்வதற்குமானதல்ல. அல்லது, கொரோனாவால் எந்த பாதிப்புமில்லை என்று கருதிக் கொள்வதற்குமில்லை.

நெருக்கடி காலத்தில் நாம் அனைவரும் ஏராளமான புகைப்படங்களையும், காணொளிகளையும்  பார்த்தோம். அவற்றில் பலரும் எச்சரிக்கையுணர்வை கைவிட்டிருக்கிறார்கள் அல்லது அவர்களிடமும் அலட்சியம் குடியேறிவிட்டது. இது கண்டிப்பாக சரியான அணுகுமுறையல்ல.

நீங்கள் ஒருவேளை அலட்சியத்தை கடைபிடிக்கிறீர்கள் அல்லது மாஸ்க் அணியாமல் நடமாடுகிறீர்கள் என்றால் நீங்கள் உங்களையும், உங்கள் குடும்பத்தையும், குழந்தைகளையும், பெரியவர்களையும் கொடுந்துன்பத்தில் தள்ளுகிறீர்கள் என்று பொருள். இன்று அமெரிக்காவாகட்டும் அல்லது ஐரோப்பாவின் பிற நாடுகளாகட்டும், கொரோனாவின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வந்தது. ஆனால், திடீரென்று எண்ணிக்கை கவலையளிக்கும் விகிதத்தில் அதிகரிக்க தொடங்கியது.

நண்பர்களே  ஞானி கபிர்தாஸ், “ வீடு வந்து சேரும் வரை விளைச்சலை உண்மையென்று நம்பாதே” என்று கூறியிருக்கிறார். அப்படியென்றால், முழு வெற்றியடையும் வரை அலட்சியம் கூடாதென்று பொருள். ஆகவே, தடுப்பூசி வந்து சேரும் வரை, கொரோனாவுக்கு எதிரான இந்த போரில் துளியளவும் பலவீனம் வந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மானுட சமுதாயத்தை காப்பாற்றுவதற்காக உலகம் முழுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை, பல ஆண்டுகளுக்கு பின்னர் பார்க்கிறோம்.

பல்வேறு நாடுகள் இதற்காக உழைத்துக் கொண்டிருக்கின்றன. நம்முடைய நாட்டு விஞ்ஞானிகள் உயிரை கொடுத்து போராடி வருகிறார்கள். இந்தியாவிலும் தடுப்பூசிகளுக்கான பல்வேறு முயற்சிகளும் நடந்து வருகின்றன. அவற்றில் சில முன்னேறிய கட்டத்தை அடைந்து நம்பிக்கையளிக்கின்றன. கொரோனாவுக்கான தடுப்பூசி எப்போது வந்தாலும், உடனடியாக நாட்டின் அனைத்து குடிமக்களிடமும் விரைவாக கொண்டு போய் சேர்க்க வேண்டிய ஏற்பாட்டை நாடு மேற்கொண்டு வருகிறது.

நண்பர்களே, ராம் சரித்ர மானஸில் பல்வேறு விசயங்கள் கற்றுக் கொள்ளத்தக்கவையாக இருக்கின்றன. அதில் பல்வேறு வகையான எச்சரிக்கைகளும் இருக்கின்றன. அவற்றில் குறிப்பாக, நெருப்பு, எதிரி, பாவம் அதாவது பிழை அல்லது நோய் ஆகியவற்றை எப்போதும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்பது முக்கியமானது.எனவே முழு தீர்வு கிடைக்கும்வரை அவற்றை அலட்சியம் செய்துவிடக் கூடாது.

நினைவில் கொள்ளுங்கள். மருந்து வந்து சேரும் வரை, அலட்சியம் கூடாது.

பண்டிகை நாட்கள் நம்முடைய வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கான, உல்லாசத்திற்கான காலமாகும். கடினமான காலத்தை கடந்து நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். சின்ன அலட்சியமும்  நம்முடைய வேகத்தை முடக்கிவிடக் கூடும். நம்முடைய மகிழ்ச்சியை அழித்துவிடக் கூடும். வாழ்க்கையின் கடமைகளை நிறைவேற்றுவதும், கவனமும் அக்கம்பக்கமாக இருக்கும் போதுதான் மகிழ்ச்சி நீடித்து நிலைக்கும். 2 அடி தொலைவு, வேளா, வேளைக்கு கைகளை சோப்பை கொண்டு கழுவுவது, மாஸ்க் அணிவது ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நீங்கள் பாதுகாப்புடனும், உங்கள் குடும்பம் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த பண்டிகை உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், கொண்டாட்டத்தையும் நிரப்பும்படியான சூழல் அமைய வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஆகையால், மீண்டும், மீண்டும் நாட்டு மக்களிடம் கோரிக்கை வைக்கிறேன். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என்று கேட்டு ஊடக நண்பர்களிடமும், சமூக வலைதளவாசிகளிடமும் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். அது நாட்டிற்கு செய்யும் பெரிய சேவையாக இருக்கும். நீங்கள் கண்டிப்பாக எங்களுக்கும், நாட்டின் கோடானு கோடி மக்களுக்கும் ஆதரவை தாருங்கள்.

என் அன்பிற்குரிய நாட்டு மக்களே, சுகாதாரத்தோடு இருங்கள், விரைவாக முன்னேறுங்கள். மேலும், நாம் அனைவரும் இணைந்து நாட்டையும் முன்னேற்றுவோம். இந்த வாழ்த்துகளோடு நவராத்திரி, தசரா, ஈத், தீபாவளி, சட் பூஜா, குருநானக் ஜெயந்தி உள்ளிட்ட அனைத்து பண்டிகைகளுக்கும், அனைத்து நாட்டு மக்களுக்கும் மீண்டும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி”

நாட்டு மக்களிடம் உரையாற்றப் போவதாக அறிவித்து மாலை 6 மணிக்கு பிரதமர் மோடி இவ்வாறு பேசினார். தமிழ்நாட்டில் நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு, பஞ்சாபில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மாநில சட்டப் பேரவை நிறைவேற்றிய சட்டங்களும் தீர்மானமும், எல்லையில் சீனாவுடன் பதற்றம் இன்னும் பல நெருக்கடிகளுக்கு இடையே பிரமரின் இந்த உரை பற்றி எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி “உங்கள் 6 மணி உரையில், சீனாவை இந்திய மண்ணிலிருந்து விரட்டுவதற்கான நாளையும் நாட்டு மக்களுக்கு சொல்லுங்கள்” என்று கிண்டல் செய்திருந்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் “பிரதமர் மோடி அவர்களே, இப்போது மக்களுக்கு தேவை அறிவுரை இல்லை, நிவாரணம்.” என்று ட்வீட் செய்திருந்தார்.

“வெற்று, சவடால் பேச்சுகளுக்கு பதிலாக, மக்களின் நலனுக்கான திட்டங்களை பிரதமர் கொண்டு வர வேண்டும் என்று விசிக வலியுறுத்துகிறது”” என்று தொல் திருமாவளவன் கோரியுள்ளார்.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்